வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டே வருக!!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மனித நேயம், அன்பு, கருணை, பணிவு, அடக்கம் ஆகியவை மனதில் கொண்டு,
செல்வமும், செல்வாக்கும், ஆரோக்கியமும், மன அமைதியும் பெற்று அனைவரும் இந்த ஆண்டில் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை உளமார பிரார்த்திப்போம்.
நம் நாடும், வீடும் செழிக்கட்டும்.
மனிதம் வளரட்டும்.
வளங்கள் பெருகட்டும்.
ஒற்றுமை ஓங்கட்டும்.

திங்கள், டிசம்பர் 27, 2010

அறியவேண்டியவை

1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)
2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
3. விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.
5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.
6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.
8. துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.
14. வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.
19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.
25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா.
26. ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.

வியாழன், டிசம்பர் 23, 2010

கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்



கிறிஸ்மஸ்என்றாலே பரலோகத்தில் மகிழ்ச்சி. பூலோகத்தில் சமாதானம்
என்பதாகும். இவரது அவதாரத்தின் நோக்கம் என்னவென்று தேவதூதர்கள்சொல்லுவது
"உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்பதாகும். (லூக் 2 : 14).
எல்லா மதங்களும் போதிப்பது அன்பையும், சமாதானத்தையும் ;
நம் பாவங்களை , தான் ஏற்று நமக்காக இரத்தம் சிந்திய இயேசு பிரான் பிறந்த கிறிஸ்மஸ் திருநாளில் அன்பும், சமாதானமும் இந்த பூமியில் நிலவ நாம் முயற்சிப்போம்.
தேவனாகிய இயேசுவின் பரிசுத்த ஆவி நம்மை இரட்சிப்பதாக;
உலகெங்கும் இருக்கும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
HAPPY, HAPPY CHIRSTMAS; MERRY MERRY CHIRSTMAS.

செவ்வாய், டிசம்பர் 21, 2010

கந்தர் சஷ்டிக் கவசம்

கந்தர் சஷ்டியின் மகிமையை சொல்லவும் வேண்டுமோ?
படிப்பவர்க்கு கவசமாய் இருந்து காக்கும்.
தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம்
துதிப்போருக்கு வல்வினை போம்; துன்பம்போம்;
நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-
கதித்தோங்கும்நிஷ்டையுங் கைகூடும்,
நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை.
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்;
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட,
மையல் நடனஞ்செய்யும் மயில்வாகனனார்
கையில்வேலால் எனைக் காக்கவென்று உவந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண் திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக்குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறுஇடும்வேலவன்நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ரரரர ரரர
ரிவண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேல் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று
உன்திருவடியை உறுதி என்றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை
முருகனைப்பாடினேன் ஆடினேன்
பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன்
பூதியை நேசமுடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொர்ணமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலா போற்றி !
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

விநாயகர் துதி

திருப்புகழ்

விநாயகர் துதி
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... அடி பேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பக எனவினை ...... கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துயரது கெட சுப்பிர மணிபடும்
அப்புன அதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.


திருச்சிற்றம்பலம்

_அருணகிரிநாதர்

கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி ... கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி,
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் ... அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும்.
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை ... ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ (ண்) டு பணிவேனே ... மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.
முத்தமிழ் அடைவினைமுற்படுகிரிதனில்முற்படஎழுதியமுதல்வோனே ... இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிமுதன்மையானவனே,
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா ... (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*,
அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி ... (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி,
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. ... அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.

திங்கள், டிசம்பர் 20, 2010

கணநாதா

தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?
அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.
விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன்?
கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார். அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும் துவங்கியது.
தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?
மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.
அருகம்புல் மாலை ஏன்?
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

எங்கப்பன் கணேசன்



விநாயகன் வினைதீர்ப்பவன். முழுமுதல் பொருள் ஆனவன். எல்லோராலும் அறியப்படுபவன். ஈசனின் பிள்ளை. முருகனின் அண்ணன். உமையாளுக்கு உற்றவன். மனிதர்க்கு எளிதில் வசப்படுபவன். அருள் பாலிப்பவன்.
அவன் வடிவம் அழகானது; பார்ப்பவரை வசிகரிக்கும்; எளிமையானவன்.
குண்டு வயிரும், குள்ள உருவமும், யானை முகமும் கொண்டு குழந்தைகளின் செல்லப் பிள்ளை ஆகிறான். அதனால் நம் வீட்டுப் பிள்ளையாக இருக்கிறான்.
அப்பனுக்கு வானுயர்ந்த கோபுரமும், ஆயிரங்கால் மண்டபமும் கொடிமரமும், பெரிய வாகனமும் தேவை இல்லை. காட்சிக்கு எளியோன்.
குளக்கரை , மரத்தடி , தெருமுனை, முச்சந்தி, நாற்சந்தியே அவனது இருப்பிடம்
பட்டும், பீதாம்பரமும், அணிகலன்களும் போடாதவன்;
பானை வயிற்றில் ஒரு அரை துண்டுத் துணியே அவனது ஆடை;
மார்பின் குறுக்கே ஒரு பூணூலே அவனது ஆபரணம்.
அருகம் புல் சாற்றினாலே அகமகிழ்ந்து ஆயிரம் வரம் அருள்வான்.
மூசிக வாகனன்; அவலும், பொரியுமே அவனுக்கு பிடித்தமானவை.
நம் நாட்டின் சிறப்பே எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில் இருப்பதே.
அவனை உளமார வணங்கி அவன் அருளைப் பெறுவோம்.

விநாயகனே

விநாயகர் பெயர் விளக்கம்
"வி " என்றால் "இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது , "ஓம் அநீஸ்வராய நம" என்பர். "அநீஸ்வராய" என்றால் தனக்கு மேல் ஒரு ஈஸ்வரனே இல்லை என்று பொருள்.
கணபதி என்பது...
கணபதி எனும் சொல்லில் "க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது. "ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. "பதி " என்னும் பதம் தலைவன் எனப் பொருள் படுகிறது. பரப்பிரும்ம சொரூபமாயிருப்பவன் கணபதி. மோட்சத்திற்கும் அவனே தலைவன்.
விநாயக வடிவ விளக்கம்
யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண்,பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யாநை அக்ரிணைப் பொருள், மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை , உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர் . அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.
விநாயகரிடம் ஏன் இருக்கிறது?
விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்களிருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம் ஆகியவை இருக்கும். புனித நீர்க்குடம் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்துக் களைத்துத் தன்னைச் சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பைப் போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார். அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. இவரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால்தான் முகம் யானை வடிவில் இருக்கிறது. பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளைக் கட்டிப் போடுகிறார். ஒடித்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதைக் காட்டுகிறது.
நவக்கிரகப் பிள்ளையார்
ஓங்கார நாயகனாய் திகழும் பிள்ளையாரின் உடலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரது நெற்றியில் சூரியனும், நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் பகவானும், வலது கீழ் கையில் புதனும் கொலு வீற்றிருக்கிறார்கள். வலது மேல் கையில் சனியும் , சிரசில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்கிரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இருக்கிறார்களாம்.
பெண் விநாயகர்
விநாயகருக்கு விநாயகி , வைநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி ,கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.
அரசமரத்தடி ஏன்?
அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் காற்று பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக் கூடியது. எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலிருப்பவர்களும் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தைச் சுற்றிப் பிள்ளையாரை வணங்கிச் செல்கிறார்கள்.
விநாயகரும் அவருக்கேற்ற மரங்களும்
விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார். இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரைப் பிரதிஷ்டை செய்யலாம். இந்த ஐந்து மரங்களும் பஞ்சபூதத் தத்துவத்தை விளக்குகிறது. அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும். இந்த ஐந்து மரங்களும் விநாயகர் கோவிலில் நடப்பட்டால் அது முழுமை பெற்ற கோவிலாக இருக்கும்.
விநாயகருக்கு உகந்த இலைகள்
முல்லை, எருக்கு இலை, கரிசலாங்கண்ணி, மருத இலை, வில்வம், விஷ்னு கிரந்தி, ஊமத்தை, மாதுளை, இலந்தை, தேவதாரு, வெள்ளை அருகம்புல், மருவு, வன்னி, அரசு, நாயுருவி, ஜாதி மல்லிகை, கண்டங்கத்தரி, தாழை, அரளி, அகத்தி இவற்றின் இலைகளைக் கொண்டும் அர்ச்சிக்கலாம்

vinayagar agawal by Seergazhi Govindarajan

திருவாதிரை

சேந்தனார் ஓர் விறகு வெட்டி. . அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின்தான் உணவருந்துவார்.
ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.
எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.
சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களில் இல்லங்களுக்குச் சென்றார். முனி பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை , முயலகன் , உடுக்கை , மான் , தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார் மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்ரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.

திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய நன்நாளில் நோற்கும் ஒரு நோம்பாகும். . இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.

சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும் திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.