வெள்ளி, ஜனவரி 14, 2011

உழவர் திருநாளே வருக

பொங்கல் நல் வாழ்த்துக்கள்


தைத் திங்களே வருக வருக;
கதிரவனே போற்றி;
மழையே போற்றி;
மண்ணே போற்றி;
கால்நடையே போற்றி;
தைத் திங்களே வருக வருக;
பாலுடன் புத்தரிசி;
நெய்யுடன் வெல்லம்;
இனிப்பாய் பொங்கல்;
மகிழ்வுடன் படைத்தோம்;
தைத் திங்களே வருக வருக;
நாடு செழிக்க;
வீடு கொழிக்க;
நீர் பெருக்க;
நீ அருள்வாய்.
பொங்கல் போல் செல்வமும், செல்வாக்கும் பொங்கட்டும்.
நாடும், வீடும் செழிக்கட்டும். பாரெங்கும் சுபிட்சம் வளரட்டும்

பொங்கல் 2 ம் நாள்


பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு வாசலிலோ, முற்றத்திலோ சுத்தம் செய்து நீரோ, சாணமோ தெளித்து மாக் கோலம் இட்டு அதன் நடுவில்மூன்று கற்களை முக்கோண வடிவில் வைப்பார். அதுவே அடுப்பு. இதற்கு ,காவிப்பட்டை ,சுண்ணாம்புபட்டை அடிக்க வேண்டும்.
அடுப்புக்குப் பக்கத்துல பசுமாட்டு சாணில அருகம்புல்லு சொருகி வைச்சு, எருக்கம்பூ, தும்பப்பூ போட்டு புள்ளையார் பண்ணி தீபம் காட்டிட்டுத்தான் பொங்கப்பானை வைப்பாங்க. பானை கழுத்துல மஞ்ச கொத்து இஞ்சிக்கொத்து கட்டியிருக்கும்.
மூன்றுபானை வைப்பதும் வழக்கம்.
ஒன்று பால் பொங்கலுக்கு; மற்றது சர்க்கரைப் பொங்கலுக்கு.
மூன்றாவது வெறும் பொங்கல்.
புதிதாய் வாங்கிய மண் பானையில் பொங்கல் வைப்பது கிராமங்களில் வழக்கம். வெண்கலப் பானை, பித்தளைப் பானைகளிலும் வைக்கலாம்.
சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வைப்பார்கள். பனை அல்லது தென்னை ஓலை கொண்டு அடுப்பு எரிப்பார்கள். சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம்.
ஒரு கோலமிட்ட பலகை அல்லது வாழை இலை மீது திருவிளக்கை வைக்கவும். பூ சுற்றவும். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும்.
விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து அதில் பச்சரிசி காய்கறிவகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும்.
மஞ்சள் பூசணி கட்டாயம் இருக்க வேண்டும்.
மார்கழி மாதத்தில் சேகரித்து வைத்துள்ள காய்ந்த சாணப் பிள்ளையாரையும் ஒரு பக்கம் வைக்க வேண்டும். [ இலையில் அல்ல ]
இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வைக்க வேண்டும்.
[ நல்ல தடியான கரும்பு, கணு தள்ளித்தள்ளிஇருப்பது போல் பாத்து வாங்கறது முக்கியம்.]
பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பச்சரிசி களைந்த நீரை பானையில் கொஞ்சம் ஊற்ற வேண்டும்.
பின் தேவையான அளவு நீரோ, அல்லது நீரும் பாலும் கலந்தோ ஊற்றவும்.
பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர்.
அந்த கூவலில் இருக்கும் மகிழ்ச்சி இன்றைய கால கட்டத்தில் கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்ச்சியாகி விட்டது. காலப் போக்கில் அழிந்து விடுமோ என்ற அச்சம் கூட உண்டாகிறது.
பொங்கல் தயார் ஆனவுடன் பானைகளை இறக்கி இலையின் முன் வைக்க வேண்டும். பின் பூஜை செய்ய வேண்டும்.
சில பகுதிகளில் மதிய வேளையில், , திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைத்து ,முன்னோருக்கு படைத்து பூஜை செய்வார்கள்.
சிறப்பான அறுவடைக்கு அடையாளமாக, அரிசி, பருப்பு;
மகிழ்ச்சிக்கு அடையாளமான வெல்லம்;
ஆரோக்யமாக இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கும்விதமாக கரும்பு; மங்களங்கள் நிறைந்திருக்கின்றன எனச் சொல்லும்விதமாக மஞ்சள் என்று எல்லாம் இடம்பிடித்து பொங்கலோ பொங்கல் எனக் குரல் எழும்பும் இடத்தில், மகிழ்ச்சியும் மங்களமும் பொங்குவதாகத்தானே அர்த்தம்.
பொங்கல் என்பது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், அக்கம் பக்கத்தார் என எல்லோரும் ஒன்றாய்க் கூடி, இனிப்பான பொங்கலை பகிர்ந்து உண்டு மனமகிழ்வோடு இருக்கும் ஒரு விழா.
அதன் தன்மை புரிந்து, பாரம்பரியம் கெடாமல் அடுத்த சந்ததியர்க்கு எடுத்துச் செல்ல நம்மால் ஆனா முயற்சிகளை செய்வது நம் கடமை.

பொங்கல்-2 ம் நாள்

இரெண்டாவது நாள், அதாவது தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள்.
பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

' தை பிறந்தால் வழி பிறக்கும்'என்றொரு சொல்வழக்கு உண்டு.
தென் திசையில் பயணிக்கும் சூரியன், வடதிசையில் தன் தேரின் திசையை மாற்றும் நாள் ஆரம்பமாவது தை மாதத்தில்தான். ஆறுமாத காலம் ஒரு பகுதிக்கு மட்டுமே கிடைத்த சூரியனின் முழு கிரணப் பலன்கள் தைமாதம் முதல் அடுத்த பகுதிக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் என்பதால் தைபிறந்தால் வழிபிறக்கும் என்றார்கள் என்ற கருத்தும் சொல்லப் படுகிறது.
தை மாதத்துக்கு முன் அறுவடைக்கு காத்திருக்கும் வயல் வரப்புகளில் நடந்து செல்ல முடியாது. தையில் அறுவடை முடிந்து விடுவதால் அங்கு நடந்து செல்ல வழி பிறக்கும் என்பதாகவும் இருக்கலாம்.

தைக்கு முன் வரும் மார்கழி மாதத்தில் தெருவை அடைத்து கோலம் போடுவார்கள். அதனால் நடந்து செல்ல சிரமப் படுவார்கள். தை பிறந்ததும் கோலம் போட்டாலும் மார்கழி அளவு போட மாட்டார்கள். அதனால் வழி பிறக்கும் என்றும் கூறுவார்கள்.
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்து, அதன் பயனாய் கையில் பணம் இருப்பதால் சுப காரியங்கள் செய்ய விளைவார்கள். அதனால்
தை பிறந்தால் வழி பிறக்கும் எனவும் கொள்ளலாம்.
தை திருநாளுக்கு முன்னமே வீடுகளுக்கு வெள்ளை அல்லது சுண்ணாம்பு அடிப்பார்கள். .
உண்மையில் இது ஒரு பெரும் சிரமமான செயலாகும். அனைத்துப் பொருட்களையும் பரண் போன்ற இடங்களில் இருந்து இறக்கி , சுத்தம் செய்து, அடித்து முடிந்ததும் மறுபடியும் பரண் மேல் ஏற்ற வேண்டும்.
தரையில் சிந்திய சுண்ணாம்பை துடைத்து நீக்க வேண்டும்.
பொதுவாக சிறிய வீடுகள் என்றால் பெண்களே செய்து விடுவார்கள்.
சுண்ணாம்பு கற்களை பெரிய தொட்டிகளில் கொட்டி, அதில் தேவையான அளவு நீர் ஊற்றி வைப்பார்கள். அது கரைந்து கெட்டி குழம்பு போல் வருவதே சரியான பதம். சுண்ணாம்பு கால்சியம் நிறைந்தது என்பதால் அதில் நீர் ஊற்றியதும் ஒரு புகை போல் வரும்.தொட்டாலே சுடும். பனை மட்டையில்நீண்ட பிரஷ் போல் செய்து அதனால்தான் சுவருகளுக்கு வெள்ளை அடிப்பார்கள்.
தை மாதத்தில் எல்ல வீடுகளும் வெள்ளை அடிக்கப்பட்டு வெள்ளை வெளேரென்று பார்க்கவே அழகாக இருக்கும்.
சுண்ணாம்பு அடிப்பதால் கரையான் அரிப்பது தடுக்கப் படுகிறது.
வீடும் சுத்தம் செய்யப்படுகிறது.
எத்துணை அறிவுடன் வாழ்வின் இயல்போடு பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன

பொங்கல் 1 ம் நாள்


தை மாதத்தின் முதல் நாள் உழவர் திரு நாள் எனப்படும் பொங்கல் பண்டிகையாகும். இது நான்கு நாள் விழாவாக கொண்டாடப் படுகிறது. அவை
போகி-
தமிழ் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இது 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.
இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அன்று அதிகாலை வேண்டாத பழைய பொருட்களை தெருவில் வைத்து எரிப்பார்கள். சில இடங்களில் கொட்டு கொட்டிக் கொண்டு இதை செய்வார்கள்.
வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
காப்பு கட்டுதல்-
வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ --இவற்றை கொத்தாகக் கட்டி வீட்டின் நிலை வாயில், பின்புற வாயில் , வீட்டின் வெளிப்புறம் வீட்டைச் சுற்றி சொருகுவார்கள்.
சில பகுதிகளில் இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
அன்று வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அவரைகொட்டை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்ற ஒரு மரபும் உண்டு.

வியாழன், ஜனவரி 13, 2011

கங்கா ஸ்நானம்

கங்கா ஸ்நானம் ஆச்சா? ??????/

தீபாவளி அன்று ஒருவருக்கு ஒருவர் கேட்கும் கேள்வி.

அன்று ஆயில் பாத் தான் எடுப்போம். 

வாரத்தில் இரண்டு நாட்கள் நாம் செய்வதுதான்.

இருந்தாலும் , அதே ஆயில் பாத் தீபாவளி ஸ்பெஷல் ஆகிறது.

அதை ஏன் சாஸ்திர, சம்பிரதாயங்கள் கூறுகின்றன?

நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் 

தீபாவளி அன்று உள்ள திதிப் படி 

அந்த நாள் முழுவதும் அதிகமான 

பேட்  வைப்ரேஷன்ஸ் [bad  vibration ]

நம்மை சூழ்ந்து இருக்குமாம்.

அதற்கான தோஷ நிவர்த்தியாக 

கங்கா ஸ்நானம்   செய்ய வேண்டும் என்று 

நம் சாஸ்திரங்கள்   கூறுகின்றன. 

தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்த வேளையில்

[அதாவது அதிகாலை 3  மணியில் இருந்து 

சூரிய உதயம் முன் வரை]

தலைக்கு [ofcourse  oil  bath ] குளிக்கும் போது

முப்பத்து முக்கோடி தேவர்களும் 

தெய்வங்களைப் பூஜித்த அபிஷேக நீர் 

அகிலம் முழுவதும் இருக்கும் நீரில் 

கலந்து இருக்கும் என்பது ஐதீகம்.

அறிவியல் ரீதியாகவும் 

தீபாவளி அன்று அதிகாலை 

சூரிய உதயத்துக்கு முன் கடலின் 

உப்புத் தண்ணீரில் குளித்தாலும் 

உடல் சுத்தமாகிறது என்று 

கடலில் குளிப்பதைக் கூட செய்கிறார்கள்.

அது உப்புக்கடல் ஆனாலும்  

தீபாவளி அன்று அதிகாலையில் 

உலகமெல்லாம் உள்ள தண்ணீர் 

அந்த அளவுக்கு புனிதமாக இருக்கும் .

சிவனின் தலையிலிருக்கும் கங்கை நீருக்கு

இணையாக தீபாவளி அன்று அதிகாலை

பிரம்மமுகூர்த்தத்தில் குளிக்கும் நீரும்

கருதப்படுவதால் , தீபாவளி அன்று

எடுக்கும் ஆயில் பாத், ஸ்பெசல் ஆகி

கங்கா ஸ்நானம் என்ற புனிதம் பெறுகிறது.

தீபாவளி திதியின் போது   உலவும்

பேட்வைப்ரேசன்ஸ் நம்மை விட்டு

விலகவே பட்டாசு வெடித்தும்,

மத்தாப்பு வெளிச்சங்களுடன்

தீபாவளி பண்டிகை ஒலி ஒளியுடன் கொண்டாடப் படுகிறது.     

  



திங்கள், ஜனவரி 10, 2011

பொங்கலின் சிறப்பு


சிறுகிழங்கு, பனங்கிழங்கு,



கரும்பின் தத்துவம் -

பொங்கலில் முதல் இடம் பெறுவது கரும்பு.

இது இனிமையின்அடையாளம்

அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை.

நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது.

அடிக்கரும்பு தித்திப்பாய் இனிக்கும்.

கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது.

உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால்,

தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல

வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும்,

அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும்.

கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ

வளைவுகளும் முடிச்சுக்களும் இருந்தாலும்

உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது.

இதேபோல வாழ்க்கையில் கடுமையான

சோதனைகள் இருந்தாலும்

அவற்றைக் கடந்து சென்றால் தான்,

இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம்.

அதனாலேயே மகரசங்கராந்தியான

பொங்கல் பண்டிகையில் கரும்பினை

இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து

அழகுபடுத்துகிறோம். ..

மஞ்சள் கொத்து -

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின்

அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது.

மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள்.

அதனால் தான் சுமங்கலிப்பெண்கள்

மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

புத்தாடை அணியும்போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம்.

எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில்

மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம்.

திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல்

என்று கூட ஒருசடங்குஇருந்தது.

முனைமுறியாத அரிசியான அட்சதை

 தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர்.

எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த

பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம்.

சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது

அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து

வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம்

இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை

பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி

அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி

மறுநாள் காலையில்" மஞ்சள் கீறுதல் '

என்னும் சடங்காகச்செய்வர்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள்

அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி

சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர்.

வீட்டில் உள்ள அனைவரும்

சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும்

என்பதே இச்சடங்கின் நோக்கம்.

கிழங்கு-

பொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறுகிழங்கு,

சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன.

திருமணம் முடித்த தம்பதியருக்கு கொடுக்கும்

பொங்கல் சீர்வரிசையில் இவை

நிச்சயம் இடம் பிடிக்கும்.

சீர்வரிசையில் கொடுக்கும் கிழங்குகள்

அனைத்தும் மண்ணிற்கு அடியில் விளையக்கூடியவை.

மண் எத்தனை தன்மையுடையதாக இருந்தாலும்,

அதை தனது இருப்பிடமாக எடுத்துக் கொண்டு,

அங்குள்ள நீர் வளத்தைப் பயன்படுத்தி விளைந்துவிடும்.

 இதைப்போலவே, மணப்பெண்ணும்

தனது கணவன் வீட்டிலுள்ளவர்கள்

எத்தகைய குணம் கொண்டவர்களாக இருந்தாலும்,

அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

அதையே தன்னையும், புகுந்த வீட்டையும்

வளப்படுத்துவதற்குரிய இடமாக ஏற்றுக் கொண்டு

 திறம்பட செயல்பட வேண்டும்.

இதை உணர்த்துவதற்காகவே சீர்வரிசையில்

 கிழங்கு வகையை கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.

சில இடங்களில் உருளை, மரச்சீனி, சீனிக்கிழங்கு,

வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும்

கொடுக்கும் வழக்கம் உள்ளது.

சிறுகிழங்குகள் திருநெல்வேலி பகுதியிலும்,

பனங்கிழங்குகள் ராமநாதபுரம் மாவட்டத்திலும்

மார்கழி, தை மாதங்களில் விளையும் என்பது குறிப்பிடத்தக்கவை.

பச்சரிசி காட்டும் தத்துவம்

பச்சரிசியைப் போல நாம் இன்று

பக்குவமில்லாத நிலையில் இருக்கிறோம்.

அதைப் பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது.

அதுபோல், நாமும் மனம் என்னும் அடுப்பில்

இறைசிந்தனை என்னும் நெருப்பேற்றி படரவிட்டு,

ஆண்டவன் விரும்பும் பிரசாதமாக வேண்டும்.

அரிசியுடன் வெல்லம், நெய்,வாசனைதரும் ஏலம்,

முந்திரி,உலர்திராட்சை சேர்ந்து வேக வைக்க

 சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது.

பச்சரிசி போல, உலகியல் ஆசைகளைச்

சுமந்து கொண்டிருக்கும் நாம்

பக்குவமில்லாமல் இருக்கிறோம்.

ஆனால் அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற

நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம்,

முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு

பக்தி என்னும் பானையில் ஏற்றி,

ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால்

 பக்குவம் உண்டாகி "பொங்கல்' போல்

அருட்பிரசாதமாகி விடுவோம்.

பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல,

 பக்குவப்பட்ட நம்மையும் ஏற்றுக்கொள்வான்.

பொங்கல் நாளில் பச்சரிசி காட்டும்

இத்தத்துவ உண்மையை உணர்ந்து

நம்மை நாமே பக்குவமாக்கிக் கொள்ள முயற்சிப்போம்.

ஞாயிறு, ஜனவரி 09, 2011

பொங்கல் நினைவுகள்

2010 முடிந்து 2011 பிறந்து விட்டது. ??????

உலக வழக்கப்படி புது வருடம் துவங்கி விட்டது.

ஆனால் கலைஞரின் புத்தாண்டு துவங்க வில்லை.

வரும்தை திங்களில் துவங்கும்

அந்த புத்தாண்டை நினைக்கும் போதே

அது தொடர்புடைய பல விசியங்கள் ,

இனிய நினைவுகள் மனதுள் ஓடுகிறது.

உண்மையில் மார்கழி மாதத்திலேயே

தை திங்களை வரவேற்கும் காரியங்கள் ஆரம்பித்து விடும்.

மார்கழி என்றாலே வண்ண வண்ண கோலங்கள்

அதன் நடுவே வைக்கப் படும் சாணிப் பிள்ளையார் ----

இவைதான் நினைவு அடுக்குகளில் பதிவு பெற்று இருக்கிறது.

இன்னும் கிராமங்களில் , சில நகரங்களில் இது தொடர்கிறது.

சென்னை போன்ற பெரு நகரங்களில்

 பலருக்கு என்னவென்றே தெரியாது என்று நினைக்கிறேன்.

காலை பொழுது விடியும் முன்னே எழுந்து

வாசல் பெருக்கி, சாணம் தெளித்து

கோலம் இடுவார்கள்.

இன்று போல் கலர், கலராய்

 ரங்கோலிக் கோலங்கள் கிடையாது.

புள்ளிகள் வைத்து அரிசி மாவு அல்லது கோல மாவில்

கோலம் போடுவார்கள்.

அதை சுற்றி காவி பூசுவார்கள்.

அதன் அழகே தனிதான். சொன்னால் புரியாது.

பார்த்தால் மட்டுமே புரியும்.

பசுஞ் சாணத்தை ஒற்றைப்படை வருமாறு

பிள்ளையார் வடிவில் [ மஞ்சள் பிள்ளையார் போல் ] பிடித்து,

கோலத்தின் மேல் ஆங்காங்கே வைக்க வேண்டும்.

அதன் உச்சியில் ஸ்பீக்கர் வடிவில் இருக்கும்

மஞ்சள் நிற பூசணிப் பூவை செருக வேண்டும்.

பீர்க்கம் பூவும் வைக்கலாம்.

வைத்தவுடன் முடிந்து விடுமா?

இனித்தான் கதையே இருக்கு.

நம் வேலை முடிந்தவுடன்

தெருவில் இருக்கும் எல்லா வீட்டு வாசலுக்கும்

ஒரு ஜாலி விசிட்.

யார் யார், என்ன கோலம் போட்டு இருக்கிறார்கள்;

எது பெருசு ;எது அழகு என்று ஒப்பிடுதல்;

அடுத்தது அம்மாவிடம் போய்

நம் வீட்டு கோலத்தின் குறை,

நிறைகளை பற்றிய ஆலோசனை.

ஆனால் காலை வேளையில்

இந்தகூட்டம் அதிக நேரம் நடக்க முடியாது.

 so, மாலை தொடரும்.

பள்ளி விட்டு வந்ததும் நேராக அம்மா;

நாளைக்கு பெரிய கோலமாக போட வேண்டும்;

அவங்களை விட நம்ம வீட்டில் பெரிசாக இருக்க வேண்டும் ;

அன்னமா, மானா, மயிலா, யானையா, தேரா;

என்ன போட வேண்டும் என ஒரு deep discussion.

இந்த நினைவுடன் தூங்க செல்வோம்.

அதிகாலையில் எழுந்து மறுபடியும் இதே கதை;

எவ்வளவு இனிமையான நாட்கள்;

இப்போது நினைத்தாலும் சிறுபிள்ளையாகிவிடுகிறேன்.

நகர வாழ்க்கை, வயது, இடப்பற்றாக் குறை;

கோலம் போடவே இடமில்லை;

சாணிப் பிளையாரை மனக் கண்ணில் பார்க்க வேண்டியது தான்.

மதியம் சாணிப்பிள்ளயாரை வட்டமாக தட்டி ,

பூவின் காம்பைக் கிள்ளி விரித்து

அதன் மேல் ஒட்டி வைத்து விடுவோம்.

மாதம் முழுவதும் இது போல்

பிள்ளையாரை சேகரித்து வைக்க வேண்டும்.

பொங்கல் வைக்கும் போது

இந்த பிள்ளையாரையும் படைக்க வேண்டும்.

மாட்டுப் பொங்கல் முடிந்து கரினாளன்று

 எல்லா வீட்டு சிறு பெண்களும் ஒன்றாகக் கூடுவார்கள்.

அன்று செய்யப்படும் அலங்காரங்கள்

மிக அழகாக இருக்கும்.

பட்டுப் பாவாடை கட்டி, ஜடை பின்னி,

பூ வைத்து, கண்ணுக்கு மையிட்டு , பவுடர் போட்டு

பொட்டு வைத்து ஒரே கோலோகலம்தான்.

நீள ஜடைக்காக சவுரி வைப்பதும் உண்டு.

அதிகமாக செவந்திப் பூவால்

ஜடை அலங்காரம் செய்யப்படும்.

பின்னலின் முடிவில் குஞ்சலம் இருக்கும்.

சேகரித்து வைத்த பிள்ளையார்களை [ இப்ப அவர்கள் வரட்டி வடிவில் ]

எடுத்துக் கொண்டு வீடு வீடாக சென்று ,

அங்குள்ள பெண் பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டு,

பாட்டுப் பாடி, கும்மி அடித்து, குதூகலமாய் ,

கூட்டமாய் ஆறோ, குளமோ எது இருக்குதோ

அங்கு செல்வார்கள்.

போகும் வழியிலிருக்கும் பூக்களை

பறித்து கொண்டே செல்வார்கள்.

ஆற்று தண்ணீரில் பூக்களுடன்

பிள்ளையார்களையும் விடுவார்கள்.

ஒரு வரட்டி மீது வெற்றிலையை வைத்து

அதில் சூடம் கொளுத்தி அதையும் நீரில் விடுவார்கள்.

கங்கா தேவியை மனதார வணங்கி ,

ஒரு மாதமாய் செல்லப் பிள்ளையாய் இருந்த

பிள்ளயாருக்கு பிரியா விடை கொடுத்து வருவார்கள்.

 கரையில் பாண்டி, நொண்டி, ,கண்ணாமூச்சி,

தட்டாங்கல், பூப்பறிக்க வாரீகளா

[ இதெல்லாம் என்னவென்று தெரியுமா]

விளையாடி வீட்டிற்கு வருவார்கள்.

சில பகுதிகளில் ,ஒவ்வொருவர் வீட்டின் முன்பும்,

ஆரத்தி எடுத்து இரண்டு பைசா, ஐந்து பைசா என்று தருவார்கள்.

சில பகுதிகளில் கும்மி அடிக்கும் போது காசு தருவார்கள்.

அந்த சிறிய காசே மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

பசுஞ் சாணம் ---

முக்கால்வாசிவீடுகளில்பசுமாடுஇருப்பதால்

எளிதில்கிடைக்கும்.

சாணம் சிறந்த கிருமி நாசினி.

மார்கழிக் காற்று 'ஓசோன்' நிறைந்த காற்று.

அதிகாலையில் எழுந்திருப்பதால்

இதை சுவாசிப்பதால், உடல் ஆரோக்கியமும் பெறுகிறது.

மார்கழி பஜனை கோஷ்டி தெருக்களில்

திருப்பாவையும், திருவெம்பாவையும்

 பாடி கொண்டு வரும் காட்சி அருமையானது.

அதன் பின் கோவிலில் தரும்

சூடான வெண்பொங்கல் அதை விட அருமை.

குளிருக்கு இதமானது. அதன் ருசி சொல்லி முடியாது.

அற்புதமான நாட்கள்;

இதை எழுதும் போதே அதை உணருவதைப் போல் ஒரு உணர்ச்சி .

நினைவுகளில் வாழ்வதும் ஒரு சுகம்தான்.


கார்த்திகையின் சிறப்பு!








ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் 


எழுந்தருளி இருக்கும் போது, 


அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. 

விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. 


நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. 


முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, 


அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். 


எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார்.


 கூடவே செருக்கும் வளர்ந்தது.

ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார்.


 பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், 


அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின்


 மீது பட்டுப் பற்றி எரிந்தது,


 உடல் புண்ணாயிற்று,


 செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி 


ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். 


தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார். 

‘‘தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு 


நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் 


தொழுது கொண்டு வா. 


காலப்போக்கில் உன் நோய் நீங்கும்!’’ என்று இறைவன் 


அசரீரியாகச் சொல்ல, 


மன்னன் மகிழ்ச்சியுற்றான். 


நாள்தோறும் கோயிலுக்குச் சென்று 


வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். 


இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் 


கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி திதியில்


 இறைவன் திருவுள்ளம் இரங்கியது.

இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான்.


 மன்னனின் நோய் நீங்கியது. 


இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே


 கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர்.

சோமவார விரதம் - 


கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்திலிருந்து இருத்தல் வேண்டும்


 சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை 


இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள்,


 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே முறை.


உமா மகேஸ்வரி விரதம்

இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். 


இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம்.


 இரவு பலகாரம் பழம் சாப்பிடலாம்.


திருக்கார்த்திகை தினத் தன்று திருவண்ணாமலையில்


 விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது.


 இந்த தீபத்தை ஏற்றுவதால், புயல் ஏற்பட்டால் 


அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


 வாழ்க்கையில் புயல் போன்ற துன்பங்கள் வந்தாலும்,


 தீப தரிசனம் செய்தால் அவை எளிதில் நீங்கி விடும் என்ற


 தத்துவத்தையும் இது உணர்த்துகிறது.


சிவசக்தி தீபம்!


திருக்கார்த்திகை தினத்தன்று, 

"கிலியஞ்சட்டியி'ல் (களி மண்ணால் செய்யப்படும் விளக்கு)

 பசு நெய் அல்லது நல்�ண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு, 

அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

 வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான 

குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். 

விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. 

தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு.

 பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் 

அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். 

ஆகவே, தீபத்தில் பசுநெய் இடுவதால் 

அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, 

"சிவசக்தி' சொரூப மாகிறது. 


பெரிய கார்த்திகை!

பன்னிரெண்டு மாதங் களிலும் கிருத்திகை வருகிறது. 

எனினும், கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியுடன் சேர்ந்து வருகிறது. 

ஆகவே, இதை, "பெரிய கார்த்திகை' என்று போற்றுகின்றனர். 

கார்த்திகை மாதம் முழுவதுமே, 

தினசரி மாலையில் அகல் விளக்குகளை ஏற்றுவது நல்லது. 

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், 

காசி நகரிலும் இவ்வழக்கம் இன்றும் உள்ளது.



கார்த்திகையின் சிறப்பு!


இருபத்தியேழு நட்சத்திரங்களில் ரோகிணி, கார்த்திகை 

ஆகிய இரண்டு நட்சத்திரங்களில்,

 மற்ற 25 நட்சத்திரங்களும் அடக்கம். 

ஆகவே, கார்த்திகை ரோகிணி நட்சத்திரம் உள்ள நாட்களில்

 சந்திரனை தரிசித்தால், 27 நட்சத்திரங்களையும்

 வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம்.


கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு,

 வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து 

வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், 

வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். 

முருக கடவுள் கார்த்திகேயன், பொறி வடிவத்தில் தோன்றியதால், 

அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக

 சொல்வோரும் உண்டு.


சொக்கப்பனை 

திருக்கார்த்திகை தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும்,

 முருகன் கோவில்களிலும் கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நாட்டி, 

அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்துக் கட்டுவர். 

மாலையில், சொக்கப் பனை கொளுத்தப்படும். 

ஆணவம் எரிகிறது, 

கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். 

சிவன் முப்புரம் எரிந்த பாவனையை காட்டுவதற்காக 

சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர். 

சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. 

ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது.

 கார்த்திகை என்றாலே தீபம் தானே நம் நினைவுக்கு வரும்.

 விளக்கில் வாசம் செய்பவள் மகாலட்சுமி.

 திருவிளக்கை தீபலட்சுமி என்பர்.

 துர்கையின் வடிவங்களிலும் தீப துர்கை உண்டு.

 தீபத்தில், தீபலட்சுமியாகத் திகழ்பவள், 

வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்; 

சொர்க்கத்தில் - சொர்க்கலட்சுமியாகவும்; 

ராஜ்ஜியத்தில் - ராஜ்யலட்சுமியாகவும்; 

இல்லங்களில் - கிரகலட்சுமியாகவும் 

இருப்பதாக ஐதீகம். 

ஒரு வீட்டில் இருந்து, இன்னொரு வீட்டுக்கு 

தீபமேற்றப்பட்ட விளக்கை எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம்.



 கார்த்திகை மாதத்தை மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் மாதம் என்பர். 


சிவ பெருமானையும், மகாவிஷ்ணுவையும், 


முருகப் பெருமானையும் கார்த்திகையில் வழிபட்டுப் 


பேறுகள் பல பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இம்மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகித்து, 


வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சித்து, 


இனிப்புப் பொருட்களைச் சமர்ப் பித்து வழிபட்டால்


 குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

மகாவிஷ்ணுவை துளசி தளத்தால் அர்ச்சித்து வழிபட்டால் 


அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

முருகப் பெருமானுக்கு சந்தனாபிஷேகம் செய்து, 


இனிப்பான பழங்களைச் சமர்ப்பித்து வழிபட்டால்


 சந்தான பாக்கியம் கிட்டும்.

பொதுவாக கார்த்தி கையில் விளக்குதானம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. 


வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு, 


தீபஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு 


தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட


 சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினால்,


 ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை 


இந்த ஒரே நாளில் பெற முடியும்.

மக்கட்செல்வம் இல்லாத தம்பதியர் பக்தியுடன் 


இறைவழிபாட்டில் ஈடுபட்டு அன்புடன் தாம்பத்தியத்தில் கலந்திட


 மக்கட் செல்வம் கிட்டும்.


 கர்ப்பம் தரிப்பதில் உள்ள சிக்கல் நீங்கி 


அழகிய- அறிவுள்ள குழந்தை பிறக்க வழி வகுக்கும். 


அதனால்தான் இம்மாதத் தினைத் திருமண மாதம் 


-மக்கட் செல்வத்தை அருளும் மாதம் என்று சொல்வர்.

கார்த்திகை பௌர்ணமி அன்று 


சந்திரன் பூமிக்கு அருகில் நெருங்கி வருவதால், 


சந்திரனின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும். 


அன்று சிவபெருமான் தன் தேவியுடன்


 பூமிக்கு அருகில் வந்து அருள்புரிவதாக ஐதீகம். 


அதனால், கார்த்திகைப் பௌர்ணமி அன்று 


கிரிவலம் வருவது மிகவும் சிறப் பிக்கப்படுகிறது.

கிரிவலம் வருவதற்குப் பல மலைகள் உள்ளன.


 இதில் மிகவும் சிறப்புப் பெற்றது திருவண்ணாமலை.

கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், 


அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும். 


லட்சம் மழைத்துளிகளில் ஒன்று 


தேவசக்தி பெற்றது என்று சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையை கார்த்திகைப் பௌர்ணமி அன்று 


தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள்.

இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் 


ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள்.


 மகா விஷ்ணு மகாலட்சுமியுடன் வலம் 


வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. 


இன்னும் சொல்லப் போனால் இறைவனே தன் தேவியுடன்


 இம்மலையை தீபத் திருநாளுக்கு மறு நாளும், 


தைப்பொங்கல் சமயத்தில் மாட்டுப் பொங்கல் அன்றும் வலம் வருகிறார். 


அப் பொழுது அவர்களுடன் நாமும் வலம் வந்தால்


 கிடைக்கும் பலன்கள் ஏராளம்!

கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள்


 துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்த தாகப் புராணம் சொல்கிறது. 


மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், 


கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன்,


 நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். 


நெல்லி மரம் இல்லாதபட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில்


 நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து 


துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு 


விரைவில் திருமணம் நடை பெறும். 


சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர்.

கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப் படுகிறது. 


இதனால் யமவாதனை, யமபயம் நீங்கும்.

விருச்சிக மாதமாகிய கார்த்திகை மாதத்தில்


 பௌர்ணமியுடன் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று 


முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. 


அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட, 


சகல பாக்கியங்களையும் பெறலாம்.

கார்த்திகை மாத திங்கட்கிழமையில் 


திருக்குற்றாலத்தில் நீராடி, 


குற்றாலநாதரையும் அன்னை குழல்வாய்மொழி அம்மையையும்


 வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளில் 


திருவண்ணாமலையின் உச்சியில் 


சிவபெருமான் ஜோதி வடிவில் பிரகாசமாகத் திகழ்கிறார். 


இதனைத் தரிசித்தால் நோயற்ற வாழ்வும் 


பசித்த வேளையில் உணவும் வளமான வாழ்வும் கிட்டும் என்று 


ஆன்றோர் சொல்வர். 

சிவபெருமான் கார்த்திகைத் தீபத் திரு விழா அன்று 


திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி தருகிறார்.


ஸ்ரீரங்கத்திலோ பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருளி, 


கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும்


 சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார். 


அப்போது பக்தர்களும் இக்காட்சியைக் கண்டு, 


பெருமாளை வழிபடுவார்கள்.


 பெருமாளையும் சொக்கப்பனையையும் தரிசிக்கும் பக்தர்களின் 


வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.





.கார்த்திகை மாதம் பிறந்ததும்,சபரிமலை சீசன் தொடங்கிவிடும்.  . 


இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்கள்


 மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். 


ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 1ம் தேதி, 


மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்படும்.

வியாழன், ஜனவரி 06, 2011

திருவெம்பாவை

பாடல் 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
-பொருள்--
ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம்,
உறங்கிய பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும்.
அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின்
மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.
விளக்கம்:
இறைவனை அடைய "நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட
அதை விட்டுவிட்டு, "அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போலவே உண்டியலில் லட்சம் ரூபாய் போட்டால் கடவுளை அடைந்து விடலாமா?இவனைப் போல் தியானத்தால் அடைந்து விடலாமா? என்று யோசனை செய்து கொண்டிருப்பதால் எந்தப் பலனுமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல் 5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.
பொருள்:
நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்"சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.
விளக்கம்-

கடவுளா...அவரை எனக்குத் தெரியாதா... அவரைத் தான் தினமும் பார்க்கிறேனே! தினமும் கோயிலுக்குப் போகவேண்டுமென்று கட்டாயமா என்ன! புதிதாகஅவரிடம் என்ன காணப்போகிறோம்! வருஷம் தோறும் வருகிற மார்கழி தானே! கட்டாயம் காலையில் எழ வேண்டுமா என்ன! என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதுபோல் தான் தோழியின் நிலை இருக்கிறது. இந்த அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில், இறைவனின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்கள் சக தோழியர்.

பாடல் 6
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்.

பொருள்:
மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், "உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.
விளக்கம்:
இறைவனை தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வணங்க வேண்டும் என்பதை பாடல் அடிகள் உணர்த்துகின்றன. மேலும், வார்த்தைகளை விட செயலே உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் இப்பாடல் சொல்கிறது. ஒன்றைச் சொல்லிவிட்டால், அதைச் செய்தே தீர வேண்டும், இல்லாவிட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகி தலைகுனிய நேரிடும் என்பதும் இப்பாடல் உணர்த்தும் தத்துவம்.

பாடல் 7
அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
பொருள்:
தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே "சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?
விளக்கம்:
அதிகாலை வேளையில் தூங்கவே கூடாது. நம் பணிகள் காலை நாலரைக்கெல்லாம் துவங்கி விட வேண்டும். மார்கழியில் பனியடிக்கிறதே என்றெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. எல்லா தட்பவெப்பங்களுக்கும் தகுந்தாற் போல், நம் உடலைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். காலை தூக்கத்தில் இருந்து விடுபடுவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்.

பாடல் 8
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
பொருள்:
தோழியை எழுப்ப வந்த பெண்கள், ""அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின் றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.
விளக்கம்:
இறைவன் மனிதர்களின் உள்ள இருளைப் போக்குபவர். பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் எப்படி பிரகாசமாக்குகிறானோ, அதுபோல் ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய இருள் சூழ்ந்த மனதை சிவபெருமான் ஒளி வெள்ளமாக்குகிறார் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

திருப்பாவை

திருப்பாவை - 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்-
வருணதேவனே! சிறுதும் ஒலிக்காமல்
கடலிலபுகுந்து நீரைமொண்டு
இடி இடித்து ஆகாயத்தில் ஏறி
திருமாலின் திருமேனிபோல் கறுப்பாகி
அழகான தோள் கொண்ட பத்பநாபன் கையில் உள்ள
சக்கரம் போல் மின்னலடித்து,
அவனுடைய சங்கம் போல் அதிர்ந்து முழங்க
உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல்
மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ,
நாங்களும் மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம்.


திருப்பாவை - 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
பொருள்-
மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை
தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை
இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து
யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை
பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி வாயாரப் பாடி,
நெஞ்சார தியானிப்போம்.
முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும்
அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக
உருத் தெரியாமல் அழிந்து போகும்;
ஆகவே அவன் நாமங்களைச் சொல்.



திருப்பாவை - 6
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்-
பறவைகள் கூவிவிட்டன.
கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா?
இளம் பெண்ணே! எழுந்திரு
பூதனா என்றும் அரக்கியின் நச்சுமுலையை உறிஞ்சி
வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது
கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான்
பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு,
உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை
முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி
எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.

திருப்பாவை - 7
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
பொருள்-
கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடிகூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே!
காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க
வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்
கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ!பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாடகேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ?
பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக.

திருப்பாவை - 8
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
பொருள்-
கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது
எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின
கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம்
குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்
குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்
மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன்,
அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து
ஐயோ என்று இரங்கி வருவான்.


புதன், ஜனவரி 05, 2011

nithyasree mahadevan - thiruppavai - track 5 - 6 - 7 - 8

nithyasree mahadevan - thiruppavai - track 1 - 2- 3 - 4

ஆண்டாள் --- ஸ்ரீவில்லிப்புத்தூரில் மார்கழி பூஜை




ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
அதிகாலை நேரத்தில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஆண்டாள் முன்பாக பாடப்படுகிறது.
அதன் பிறகு காலைநேர விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன், ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும் ஆராதனைகள் கண்கொள்ளாக் காட்சியாகும். அமுது நைவேத்தியம் செய்யப்படும் போது, திருப்பாவையில் வரும் ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் பக்தர்களால் உணர்ச்சிகரமாகப் பாடப்படும்.
பிறகு தீர்த்தம், சடாரி ஆகியவற்றுடன் பிரசாதம் வழங்கப்படும்.குளிர் மிகுந்த அந்த அதிகாலை நேரத்தில் ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீஆண்டாள் சமேதராக எழுந்தருளும் ஸ்ரீரங்க மன்னாரை திருப்பாவை பாடி வணங்கும்போது மனதுக்குக் கிடைக்கும் பரவசமே தனிதான்!
மார்கழி மாதம் 23ம் திகதி இரவு தொடங்குகிறது, ஆண்டாள் நீராடல் உற்சவம். இந்த உற்சவம், தை மாதப் பிறப்பு வரை கொண்டாடப்படும்.
மார்கழி 22ம் திகதி இரவு ‘பிரியா விடை’ வைபவம் நடைபெறும்.
ஸ்ரீ வட பெருங்கோவிலுடையான் சந்திக்கு எழுந்தருளும் ஆண்டாளுக்கு, அங்கே மகா மண்டபத்தில் தனியாக திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. பிறகு பக்தர்கள் மலர் மழை பொழிய, வேத கோஷம் முழுங்கபுஷ்பக் கொண்டை அலங்காரத்துடன், மூலஸ்தானத்துக்கு ஸ்ரீஆண்டாள் எழுந்தருள்கிறாள்.
தொடர்ந்து வடபத்ரசாயி பெருமாளுடன் சேர்ந்து காட்சிதரும் ஆண்டாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூஜை நடைபெறும்.
பிறகு சந்நிதியில் திரை போடப்படும்.
திருப்பாவை நோன்பு ஏற்க வட பெருங்கோயிலுடையானிடம் ஆண்டாள் அங்கே அனுமதி வேண்டுவதாக ஐதீகம்.
சிறிது நேரத்துக்குப் பிறகு திரை நீக்கப்பட்டு, அரையர் ஸ்வாமியால் 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்' என்ற திருப்பாவை முதல் பாசுரத்தக்கு விளக்கம் சொல்லப்படும்.

திருப்பாவையின் மற்ற பாசுரங்களும் சொல்லப்படும்.
காலை வேளையில், மக்களுக்கான தரிசனம் முடிந்து, ஸ்ரீஆண்டான் பெரியாழ்வார் சந்நிதி வாசலை அடைகிறாள். அப்போது, அரையர் ஸ்வாமி திருப்பல்லாண்டு பாடுவார்.
நீராடல் உற்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் தங்கப் பல்லக்கில் வட பெருங்கோ விலின் ராஜகோபுர வாசலில் ஸ்ரீ ஆண் டாள் எழுந்தருள, 'நாள்பாட்டு’ வைபவம் நடைபெறும். (அதாவது, ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.
இதில் ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தை ஸ்ரீ ஆண்டாளே சொல்வதாக ஐதீகம். இந்தப் பாடல், 'ஆலின் இலை யாய் அருளேலோ எம்பாவாய்’ என்று முடிவுறும். சமஸ்கிருதத்தில் ‘வட விருட்சம்’ என்றால் ஆலமரம் என்றும், ‘பத்ரம்’ என்றால் இலை என்றும் பொருள் ஆக ‘வடபத்ரசாயி’ என்பதையே, ‘ஆலின் இலையாய்’ என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள்.
ஸ்ரீ ஆண்டாள் நீராடல் உற்சவத்தின் 2ஆம் நாள் கள்ளழகர் திருக்கோலம். 3ஆம் நாள் கண்ணன் கோலம்,
4ஆம் நாள் முத்தங்கி சேவை,
5ஆம் நாள் பெரியபெருமாள் கோலம்,
6ஆம் நாள் மஹாராணியாக அமர்ந்த கோலம்,
7ஆம் நாள் தங்க கவச சேவை என தரிசனம் தருவது சிறப்பு.
திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத்தில், மாலை 3 மணி க்கு ஆண்டாளுக்கு ‘எண்ணெய் வைபவம் நடை பெறும்.

நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி. இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.

எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் நடைபெறும்.

நெற்றிச் சுட்டி, தலைநகர் தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன், சவுரி தரித்து கோதா ராணியாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் ஆண்டாளின் அழகுக் கோலத்தைத் தரிசிப்பது பக்தர்கள் செய்த பாக்கியமே!
‘பிறகு, தலையில் அணிந்துள்ள ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து, தலையைக் கோதி, சிடுக்கு நீக்கி, சுகந்த தைலம் சாத்துவர். இவ்வாறு மூன்று முறை எண்ணெய் காப்பு சாற்றி, சவுரியை பெரிய கொண்டையாக முடித்து மலர் மாலைகள் அணிவிப்பர். தொடர்ந்து, ‘பத்தி உலாத்துதல்’ வைபவம் முடிந்து நீராடல் வைபவம், ஆரம்பிக்கும்.
அப்போது சங்க நிதி, பதும நிதி மற்றும் ஆயிரம் துளைகள் கொண்ட வெள்ளித் தாம்பாளம் கொண்டு மஞ்சள் மற்றும் திரவியப் பொடிகளால் அபிஷேகம் நடைபெறுகிறது.

முடிவில் தங்கக் குடத்தால் [நாடக மேதை கன்னையா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது ]அபிஷேகம் செய்வார்கள்.
எல்லா வைணவத் திருக்கோயில்களிலும் ‘கூடாரை வல்லி’ வைபவம் மார்கழி 27ஆம் நாள் கொண்டாடப்படும்.
ஆனால், ஸ்ரீ வில்லிபுத்தூரில் மட்டும் தை 1ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளின் சிம்மாசனத்தில், ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீபெரிய பெருமாள் எழுந்தருள, அவருடன் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார் ஆச்சார்யர்களும் எழுந்தருளி... ‘கூடாரை வெல்லும் சீர்' முதலான திருப்பாவைப் பாடல்கள் பாடப்படும்.
அப்போது, ‘அக்கார அடிசில்’ நைவேத்தியம் ஆகின பிரசாதமாக தரப்படும் மறுநாள், தந்தையாகிய பெரியாழ்வார் சந்நிதியில் ஸ்ரீஆண்டாள் எழுந்தருளி, ‘கணு’ வைபவம் நடைபெறும்.