சனி, ஜூலை 09, 2011

ஆடி மாதம்

தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும்.

சூரியன் கடகராசியுட் புகுந்து

அதைவிட்டு வெளியேறும் வரையிலான

31நாள்,,28,நாடி 12 வினாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்.

வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.


ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர்.

ஆடி முதல் மார்கழி வரையிலான தக்ஷியாயனமும்,

தை முதல் ஆனி வரை உத்ராயனமும் ஆகும்.

ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும்,

மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான்

பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது.

ஆடி துவங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் துவங்கிவிடும்.

பூமா தேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம்தான்.

அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான்

டிப் பூரமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த நாளில் முன்பெல்லாம் காவிரியும், தாமிரபரணியும்,

வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும்.

அதுவே ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்பட்டது.

இந்த மாதத்தில் கிராமத்தில் காவல் தெய்வங்கள்,

குல தெய்வங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

இந்த ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில்

விரதமிருந்து அம்மனை வழிபட்டால்

அம்மன் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை.

இம்மாதத்தில்மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு

ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும்

ஆடிஅமாவாஸை மற்றும்

ஆறுகளில் புனல் பொங்கிவந்து

ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான

ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு ஆகியன கொண்டாடப்படுகின்றன

தமிழ் மாதங்கள் பனிரெண்டில்

ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு.

ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் காலம்.

தை மாதம் வரை இவை தொடரும்.

"ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர்.

மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான்.

அதேபோல் தை மாதத்திற்குப்

பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது.

ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம்.

தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர்.

ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில்

சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும்.

பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.

உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே.

வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.

பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக

ஆடி மாதம் விளங்குகிறது.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
அன்னை காமாட்சி தேவி,
பரமசிவனை நோக்கித்தவமிருந்து, ஈசனை அடையும்
பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான்.
தேவியின் திருவுருவங்களில் ஒன்றான
வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன்
"வாராஹிநவராத்திரி'\இம்மாதத்தில்தானகொண்டாடப்படுகிறது. .
ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும்
திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.
காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல்
என்றஊரஅமர்க்களப்படும்
படவேடு ரேணுகாம்பாள்,
திருவேற்காடு கருமாரியம்மன்,
புன்னை நல்லூர் மாரியம்மன்,
சமயபுரம் மாரியம்மன் போன்ற
பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும்.
ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி,
கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை
துளசி அம்மனை வழிபட
நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும்.
வளமான வாழ்க்கை அமையும்.

ஆடிப்பூரம்!

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம்
"ஆடிப்பூரம்' என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் .
ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும்,
சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும்
பரிவர்த்தனை பெற்றிருந்தபோது,
நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம்
கூடிய சனிக் கிழமையன்று
துளசி மாடத்தினருகில்
பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள்.
காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.

ஆடிப்பூரத் திருவிழா
ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும்,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும்,
மற்றும் பல திருமால் ஆலயங்களிலும்
விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
உலக மாதாவாகிய பார்வதி தேவி
ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.
அன்னையை விரதமிருந்து தரிசித்தால்
அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

புதுமணத் தம்பதிக்கு சீர்!

இத்தகைய பெருமைகள் மிக்க ஆடி மாதத்தின்
முதல் நாளே பண்டிகை தினம் தான். "ஆடிப் பண்டிகை'
இத்திருநாளில் புதுமணத் தம்பதிகளுக்கு சீர் செய்து
அவர்களைப் பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்துவந்து
விருந்து கொடுப்பார்கள்.
பிறகு கணவரை மட்டும்அனுப்பிவிட்டு
பெண்ணை மாதம் முழுவதும்
தங்க வைத்துக் கொள்வார்கள்.
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில்
குழந்தை பிறக்கும்;
தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம்
கஷ்டத்தைத் தரும் என்பதால்
இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்
"ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி'
என்ற பழமொழிக்கேற்ப மாப்பிள்ளைக்கு
தேங்காய்ப் பால் கொடுத்து உபசரிப்பார்கள்.









புதன், ஜூலை 06, 2011

சிவராத்திரி

சிவபெருமானுக்குரிய விரதங்களில் சிவராத்திரி மிக

முக்கியமானதாகும்.

சிவராத்திரி எப்படி ஏற்பட்டது என்பதற்கு

 பல கதைகளும் காரணங்களும் உள்ளன.

1.சிவபெருமானின் துணைவியாராகிய பார்வதிதேவி ஒரு நாள்

விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தினார்.

 உடனே உலகங்கள் யாவும் இருண்டு விட்டன.

அந்த இரவுதான் மகா சிவராத்திரி எனப்படுகிறது.

இருளில் மூழ்கித்தவித்த தேவர்கள் இறைவனை வேண்ட

சிவபெருமானின் நெற்றிக்கண்களைத் திறந்து நெருப்பொளி காட்ட

முயற்சிக்கவே அதன் அனல் பிரவாகத்தில் பதைப்புற்ற தேவி

கைகளை எடுத்து விட்டாளாம்.

 அதன்பின் சிவபெருமான் விழிகளை திறந்ததால் சகல

புவனங்களுக்கும் ஒளி திரும்பவும் கிடைத்ததாம்.

தேவர்கள் அன்றிரவு இறைவனை பூஜித்ததை நினைவு கூர்ந்ததே

சிவராத்திரி பூசையாக கொண்டாடப்படுகிறது.

2.ஒரு பிரளய காலத்தின்போது பிரபஞ்சம் முழுவதும் இருள்

சூழ்ந்துகொள்ளவே அன்னை பராசக்தி (பார்வதி தேவி) சிவலிங்கபூசை

செய்து இறைவனை வேண்டிக்கொண்டாள்.

 அதன் பின் உலகங்கள் எல்லாவற்றிற்கும் ஒளி கிடைத்தது.

சக்தி வழிபட்ட இரவே சிவராத்திரி.

அதனையயாட்டியே சிவராத்திரியின் இருள் சூழ்ந்த இரவு பொழுதில்

கண்விழித்து சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கும் பழக்கம் வந்தது.


3.தேவர்களும் அசுரர்களும் அமுதம் எடுப்பதற்காக மந்திர மலையை

மத்தாக வைத்து வாசுகி என்னும் பாம்பை கயிறாகக் கொண்டு

பாற்கடலை கடைந்தார்கள்.

 அப்போது வாசுகி பாம்பு நஞ்சைக் கக்கவே,

உலகங்களைக் காக்கும் பொருட்டு

சிவபெருமான் அந்த நஞ்சை ஏந்தித் தானே உண்டு விட்டார்.

ஆனால் ஈஸ்வரனுக்கு தீங்கு நேருமோ என அஞ்சிய தேவர்கள்

இரவு முழுவதும் கண் விழித்தபடி நஞ்சின் பாதிப்பு

சிவனைச் சாராதிருக்க சிவபெருமானே வரம்

அருள வேண்டும் என்று துதித்தார்களாம்.

அந்த இரவுதான் சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.

4.பிரம்மனுக்கும் மகாசிவனுக்கும் யார் பெரியவர்

என்ற சர்ச்சை உண்டாயிற்று.

அப்போது மூவுலகங்களையும் இருள் கவ்வியதாம்.

சிவபெருமானுடைய முடியை பிரம்மாவும்,

அடியை மகாவிஷ்ணுவும் கண்டுபிடிக்க முயற்சிப்பது என்றும்

யார் இந்த போட்டியில் முன்னதாக வெற்றி பெறுகிறாரோ

அவரே தகுதியில் பெரியவர் என்றும் சிவபெருமானின்

முன்னிலையிலேயே தீர்மானிக்கப்பட்டது.

 இருவரும் தன்னுடைய அடிமுடியைத் தொட தயாரானதும்

சிவபெருமான் பிரமாண்டமான ஜோதிலிங்கமாக விஸ்வரூபம்

எடுத்து உலகெங்கும் ஒளிபரப்பினாராம்.

 அந்த இரவே சிவராத்திரி என்று சில புராணங்கள் கூறுகின்றன.

5.பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட

அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில்,

இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி,

பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும்

ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.

பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி,

அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும்

தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே

கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் –

மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை;

தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும்,

அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து

முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும்.

அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார்.

அந்த இரவே `சிவராத்திரி’ என வழங்கப்பட்டு,

அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

 

சிவராத்திரியின் வகைகள்

1.யோக சிவராத்திரி

தேய்பிறை காலத்தில் சதுர்த்தசி திதியானது திங்கட்கிழமையில் வந்தால்

அது யோக சிவராத்திரி ஆகும்.

2.நித்திய சிவராத்திரி

பன்னிரண்டு மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி

நாட்களில் வருவது நித்திய சிவராத்திரி ஆகும்.

3.முக்கோடி சிவராத்திரி

மார்கழி மாதத்து சதுர்த்தசி திதியானது திருவாதிரை நட்சத்திரத்துடன்

கூடி வந்தால் அது மிகவும் உத்தமம்.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியானது

செவ்வாய்க்கிழமையிலோ, ஞாயிற்றுக்கிழமையிலோ அமைவதும்

முக்கோடி சிவராத்திரி ஆகும்.

4.பட்ச சிவராத்திரி

தை மாதத்து தேய்பிறை பிரதமை திதி முதல் ஆரம்பித்து பதிமூன்று

நாட்களிலும் ஒரு வேலை உணவு உண்டு

பதினான்காம் திதியானது சதுர்த்தசி தினத்தில்

உபவாசம் இருத்தல் பட்ச சிவராத்திரி எனப்படும்.

5.மாத சிவராத்திரி

சித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி,

வைகாசி மாதம் அஷ்டமி திதி,

ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி,

ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி திதி,

ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி,

புரட்டாசி மாதம் வளர்பிறை திரயோதசி திதி,

ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி,

கார்த்திகை மாதம் வளர்பிறை சப்தமி திதி, தேய்பிறை அஷ்டமி திதி,

மார்கழி மாதம் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தசி திதிகள்,

 தைமாதம் வளர்பிறை திருதியை திதி,

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி,

பங்குனி மாதம் வளர்பிறையில் திருதியை திதி,

ஆகியவை மாத சிவராத்திரி நாட்களாகும்.

6.மகா சிவராத்திரி

மாசி மாதத்தில் பெளர்ணமிக்குப்பின் தேய்பிறையில் பதினான்காவது

நாளாக வரும் சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி ஆகும்

சிவராத்திரியில் வழிபாடு செய்யும் விதம்

சிவராத்திரி தினத்தில் காலை, மாலை இரு வேளையும்

ஆலயம் சென்று சிவனை வழிபடுதல் நன்று.

வீட்டு பூஜை அறையிலும் வழிபாடு செய்யலாம்.

 நியமப்படி பூஜை செய்பவர்கள் சிவராத்திரி இரவு

நான்கு சாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்

முறைப்படி பூஜிப்பவர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய

பால், தயிர், நெய், கோமயம், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு

ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

கங்கை நீரால் அபிஷேகம் செய்தல் மிகவும் நல்லது.

 அபிஷேகம் ஆனதும் சந்தனம், அகில் குழம்பு, அரைத்த பச்சை கற்பூரம்,

அரைத்த குங்குமப்பூ ஆகியவற்றை லிங்கத்திருமேனியில் பூசலாம்

வில்வ இலை, வன்னி இலை, தாமரை மலர், செண்பகப்பூ, நந்தியாவட்டை

ஆகியவற்றால் இறைவனை பூஜித்தல் வேண்டும்.

 மல்லிகை, முல்லை ஆகிய மலர்களையும் பயன்படுத்தலாம்

சிவபெருமானுக்கு நிவேதனம் செய்ய

முதல் சாமத்துக்கு பச்சைபயறு பொங்கலும்,

இரண்டாம் சாமத்திற்கு பாயாசமும்,

மூன்றாம் சாமத்திற்கு எள் அன்னமும்,

நான்காம் சாமத்திற்கு சுத்தன்னமும் உகந்தவை

பஞ்சவில்வம் எனப்படும் வில்வம், நொச்சி, முட்கிளுவை, மாவிலங்கை,

விளா ஆகியவற்றைக் கொண்டு திருநீறு, மல்லிகை, முல்லை போன்ற

புஷ்பங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.

தேவாரம், திருவாசகம், திருவருட்பா, முதலான சிவபெருமானுக்கான

பக்திப்பாடல்கள் மற்றும் நாமாவளிகள் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை

பூஜையின்போது சொல்ல வேண்டும்.

 ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மட்டுமேகூட உச்சரிக்கலாம்.

சிவசிவ என்றால் கூட போதும்.

 சிவசிவ என தீவினை மாளுமே.



சிவராத்திரியன்று படிக்க வேண்டியது :

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது

ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும்.

இது மனதிற்கு தைரியத்தை தரும்.

எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.

இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம்,

 நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம்,

திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை

படித்தாலும், கேட்டாலும் மற்ற நாட்களைவிட அதிக பலன் கிடைக்கும்.


சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி

சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது

அவ்வாறு பூஜையைச் செய்து முடிக்க

முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும்

பூஜையைக்கண்டு களிக்கலாம்.

அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும்.

பகலில் உறங்கக்கூடாது.

இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும்

பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.


நன்றி -திருப்பாம்புரம்

ஆனி திருமஞ்சனம் - சிதம்பரம்




புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்கோவிலில்

ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன திருவிழா 10 நாட்கள் நடக்கும்.

அதேபோல் கர வருடத்திற்கான ஆனி திருமஞ்சன திருவிழா 28-07-2011

(செவ்வாய்க் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 6 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.சிதம்பரேஸ்வர தீட்சிதர்

கோவில் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்தார்.

தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மாளுக்கு தீபாராதனை நடந்தது.

அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் 4 முக்கிய வீதிகள் வழியாக

வீதியுலா வந்தனர்.

இரவு 8 மணிக்கு மத்தள பூஜை நடக்கிறது.

29-ந் தேதி பஞ்சமூர்த்திகள் சந்திரபிறை வாகன காட்சியும்,

30-ந் தேதி தங்க சூரிய பிறை வானக காட்சியும்,

அடுத்த மாதம் 1-ந் தேதி வெள்ளி பூத வாகன காட்சியும் ,

2-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் காட்சியும்,

3-ந்தேதி வெள்ளி யானை வாகன காட்சியும்,

4-ந்தேதி தங்க கைலாச வாகன காட்சியும்,

5-ந்தேதி தங்க ரதத்தில் பிஷாடனர் காட்சியும் நடைபெற்றது..

 6-ந் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை

வடம் பிடித்து இழுப்பார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன திருவிழா

7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

முன்னதாக சிவகாமசுந்தரி, நடராஜபெருமானுக்கு லட்சார்ச்சனை,

ராஜ சபையில் மகாஅபிஷேகமும், திருவாபரண காட்சியும்,

 பகல் 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது.

பின்னர் சிவகாமசுந்தரி, நடராஜபெருமான் ஆயிரங் கால் மண்டபத்தில்

இருந்து எழுந்தருளி 3 முறை முன்னும்,பின்னுமாக நடனமாடி

பக்தர்களுக்கு காட்சியளிப் பார்கள்.

இதனையே ஆனி திருமஞ்சனம் என்பர்.

உற்சவத்தை முன்னிட்டு கோவை சிவபிரகாச சுவாமிகளின் சர்வதேச

தரும பரிபாலன அறக்கட்டளை சார்பில் 28-ம் தேதிமுதல் ஜூலை 7-ம்

தேதி வரை சிதம்பரம் மேலவீதி பெல்காம் அனந்தம்மாள் சத்திரத்தில்

அன்னதானம் நடைபெறுகிறது.

தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை அகவல் பாராயணமும்,

மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை பெரியபுராணம் தொடர்

சொற்பொழிவும் நடைபெறுகிறது.
 

அமர்நீதினாயனார்



அறுபத்துமூன்று நாயன்மார்கள் - சிவனின் அருள் பெற்றவர்கள்

சிவ நாமமே உயிர் மூச்சு என வாழ்ந்து , இறைவனுக்கு தொண்டு

புரிந்து இறைவனடி சேர்ந்தார்கள்.

பிறப்பால் இழிகுலத்தவராய் இருந்தவருண்டு.

செல்வந்தரும் உண்டு; பரம ஏழையும் உண்டு.

ஆனால் அனைவரும் இறைவனிடம் கொண்ட பக்தியால், அன்பால்,

இறையருள் பெற்றவராய் வாழ்ந்து சிவத்தோடு கலந்தவர்கள் .

அத்தகைய சிவனடியார்களில் அமர்நீதி நாயனாரும் ஒருவர்.

அமர்நீதி நாயனர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும்

 பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார்.

 7ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்



பழையாறை வணிகாமர் நீதி யார்பாற்
பரவுசிறு முனிவடிவாய்ப் பயிலு நல்லூர்க்
குழைகாதர் வந்தொருகோ வணத்தை வைத்துக்
கொடுத்ததனை யெடுந்தொளித்துக குளித்து வந்து
தொழிலாரு மதுவேண்டி வெகுண்டு நீர்த்
துலையிலிடுங் கோவணநேர் தூக்கு மென்ன
வெழிலாரும் பொன்மனைவி யிளஞ்சே யேற்றி
யேறினார்வா னுலகுதொழ வேறி னாரே

சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை, கீழ்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு,
மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.

இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ" என்று இன்சொற் சொல்ல; பிரமசாரியானவர் அவரை நோக்கி, "நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்" என்றார். அதுகேட்ட அமர்நீதிநாயனார் "இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார். பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, "இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்" என்று அவர்கையிலே கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம்பண்ணுதற்குப் போக; அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார்.

ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியானவர் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார். அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, "சமையலாயிற்று", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, "ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார். அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார். அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, "உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை! சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ! நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, "சுவாமீ! அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர்போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார்.

பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார். அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார். அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது.

அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது.

அமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, "எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார். அதற்குப் பிரமசாரியார் "இனி நாம் வேறென்ன சொல்லுவோம்! மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார். அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது. அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, "என்னுடைய" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார். பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.

அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார். ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன. அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;

தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார். அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள்.

      
இதனால் அறிவது --------

சிவனும் சிவனடியாரும் ஒன்றே!

உத்தமதானபுரத்துக்குக் கிழக்கே நல்லூரென்ற தேவாரம் பெற்ற
சிவஸ்தலம் இருக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய
அமர்நீதி நாயனார் அவதரித்த ஸ்தலம் அது
அங்கே கோயில் ஒரு மலையின் மேல் இருக்கிறது

அமர்நீதி நாயனாரின் குருபூஜை 07-07-2011[ ஜூலை 7ந் தேதி ]

கர வருடம் , ஆனி மாதம் 22ந் தேதி நடைபெற உள்ளது.

செவ்வாய், ஜூலை 05, 2011

சப்த கன்னிகைகள்

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி

உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள் .

மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,

ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,

அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே

ப்ராம்மி,மகேஸ்வரி,கவுமாரி,வைஷ்ணவி,வராஹி,

இந்திராணி,சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்

பிராம்மி



பிராம்மியின் காயத்ரி மந்திரம் :

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே

தேவர்ணாயை தீமஹி

தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.



அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி.

ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார்

எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும்

வேண்டுமோ?

வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை

நிர்வகித்துவருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி

சாந்தத்தை அளிப்பாள்.

இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.

இவளது காயத்ரி மந்திரம் வருமாறு:

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.

அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி.

கவுமாரன் என்றால் குமரன்.

குமரன் என்றால் முருகக்கடவுள்.

ஈசனும் உமையுமாலும் அழிக்க இயலாதவர்களை

அழித்தவர்தான் குமரக்கடவுள் எனும் முருகக்கடவுள்.

முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி,தேவசேனா என்ற  பெயர்களும் உண்டு.

மயில் வாகனத்தில் வருபவள்.

அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே.

இவளை வழிபட்டால்,குழந்தைச் செல்வம் உண்டாகும்

கவுமாரியின் காயத்ரி மந்திரம்:

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ: கவுமாரி ப்ரசோதயாத்.


வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள்

சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் தருபவள்.

குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி

வழிபாடு மிக அவசியமாகும்.

வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.


இந்திராணி

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள்

உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற

பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது.

தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும்,

அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை

அமைத்துத்தருவதிலும்,மிகவும் தலைசிறந்த அதேசமயம்

முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால்,

அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும்,

கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால்,

மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திராணியின் காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்:


வராஹி

அம்பிகையின் பிருஷ்டம்பகுதியிலிருந்து உருவானவள்  நமது

பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும்,

உடம்பைத் தாங்குவதும்,ஓய்வுதருவதும் ஆகும்.

இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள்.

இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.

வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.

இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு.

இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால்,

இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக்

கொண்டவளாவாள்.

எதையும் அடக்க வல்லவள்.

சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள்.

மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள்

பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.

வராஹியின் காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்:


சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளி 

தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள்.

இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து

தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறுகைகள்,பதினாறு விதமான ஆயுதங்கள்,

மூன்று கண்கள்,செந்நிறம்,யானைத் தோலால் ஆன

ஆடையை அணிந்திருப்பவள்.

சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள்

சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல;

 தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக்

காப்பதோடு,நமக்குத் தேவையான சகல

பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள்.

(மாந்திரீகத்தில்)இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை

ஏற்படும்போது,இவளை அழைத்தால்,புதுப்புது யுக்திகளைக்

காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

இவளது காயத்ரி மந்திரம்:

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே

சூலஹஸ்தாயை தீமஹி

தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்:


சப்த கன்னிகைகளின் சூட்சும படைப்பு ரகசியம்

என்னவெனில்,பெண்ணின் சக்தியிலிருந்து பெண்மையாக

உருவெடுத்தவர்கள்.

கன்னிகையாக இருப்பதற்குக் காரணம் மேலோட்டமாக

மட்டுமே விளக்க முடியும்.

சப்த கன்னிகையின் ஸ்தானத்தை உணர விரும்புபவர்கள்

தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு தினமும்

 சப்த கன்னிகைகளின் காயத்ரி மந்திரங்களில்

ஏதாவது ஒன்றை ஜபித்துவந்தால் உணரலாம்.

கன்னித்தன்மை (விர்ஜின்) என்பது உயிர்களை உருவாக்கி

அளிக்கும் நிலைக்கு முந்தைய பவித்ரமான நிலை.

கன்னித்தன்மை என்றால் மிகவும் தூய்மையான என்ற

ஒரு அர்த்தம் உண்டு.

கன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம்.

அதற்கு அனுமதி ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு.

ஆனால்,கன்னித்தன்மையை களங்கப்படுத்தக்கூடாது.(

அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு

மேற்கூறிய சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது

ஒன்று மட்டுமாவதை இழந்தே ஆக வேண்டும் என்பது சாபம்)

இவர்களின் அவதார நோக்கமும்

தங்களுடைய முழுமையான

சக்தியோடு விளங்கிடுதல் மற்றும்

ஆண்மைசக்தி எனப்படும் சிவமூலத்தை துணையாகக்

கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.

சப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;

ஆண்களுக்கும் ஒரு பலமே!



அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள்

மேற்கு திசையின் அதிபதி.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி  அம்சமாவாள்.

அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.

ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.

இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள்

தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும்.

(அசைவம் தவிர்க்க வேண்டும்.வீட்டிலும்,வெளியிலும்

கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.)

ஐ.ஏ.எஸ்.,வங்கிப்பணி,அரசுப்பணி முதலானவற்றிற்கு

தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை

மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.