புதன், ஜனவரி 18, 2012

கோலம்




கோலம் என்னும் வரைகலை வெளிப்பாடு

தமிழர் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாகும்.

கோலம் என்றால்,  அழகு, ஒப்பனை என்ற

பொருளிலும் கூறலாம்.

ஆடுமகளுக்கும், மணமகளுக்கும்,

இசை கருவிக்கும் செய்யப்பட்ட ஒப்பனைகளையே

சிலப்பதிகாரம் கோலம் என்றது.

ஒரு வகையில் நாம் தரைக்கு 

செய்யும் ஒப்பனையே கோலம்

இக்காலத்தில் கோலமாவு, அரிசி மாவு,

வண்ணப்பொடிகள் கொண்டு

தரையில் போடப்படுவதையே குறிக்கிறது.

கோலங்கள் ,கோவிலில், வீட்டு வாசலில் ,

வீட்டின் உள்ளே தெய்வ வழிபாடு நடத்தும்

இடத்தில் போடப்படுகின்றன.

சாமியறையில், தெய்வ வழிபாடு செய்யும் இடத்தில் 

ஒரு சிறியகோலம் போட்டாலே 

அங்கு ஒரு தெய்வீக அழகு வந்து வந்து விடும்

அழகு உணர்ச்சி சார்ந்த விசயமாக மட்டும் அன்றி

தெய்வீகம் தன்மை சார்ந்த பொருளாகவும் பார்க்கப் படுகிறது.

இன்றும் நம் வீடுகளில் இறை வழிபாடு செய்யும் நாட்களில்,

கோலமிட்ட மனைப் பலகை மீது தான்

மஞ்சள் பிள்ளையார் வைக்கிறோம்.

திருமண மணவரையுள் மணக்கோலம் போட்டுத் தான்

மணமக்கள் அமர அமர்விடங்கள் வைக்கிறோம்.

ஹோமங்கள், சடங்குகள், குறிசொல்லுதல் --

இந்த இடங்களிலும் கோலங்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

சுப காரியங்களுக்கு திருவிளக்கு வைப்பதும்

கோலத்தின் நடுவில்தான்.

தொல் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று

தரையைப் புனிதப்படுத்துவதாகும்.

பழங்குடிகளின் வழிபாட்டில் 

தரை என்பதே முதல் புனிதப்பொருள். 

தரையை தன் முதல்கடவுளாகவே 

அவர்கள் கருதினார்கள். 

அதுவும் தெய்வம் முதல் காலடி எடுத்துவைத்து 

தன் வீட்டிற்குள் நுழையும் முற்றம் 

புனிதப்படுத்தபடவேண்டிய ஒன்றாகவும் 

அவர்கள் கருதியிருக்கலாம். 

கோலம்,  தண்ணீரோ பசுஞ்சாணமோ தெளித்து 

சுத்தப்படுத்தப்பட்ட தரைக்கு செய்யும் ஒப்பனை.

தூய்மைப்படுத்தப்படாத தரை

தெய்வங்கள் காலூன்றி நிற்பதற்கு ஏற்றதன்று.

தெய்வங்களும் வானவர்களும்

பூமிக்கு (மண்ணுலகிற்கு) வரும்போது

தரையினை மிதிப்பதில்லை.

அவதாரமான இராமனும் கிருஷ்ணனும் மட்டுமே

வெறுங்காலால் பூமியை மிதித்தவர்களாவர்.

தெய்வங்கள் வானுலகத்தில் அல்லது

மண்ணுலகத்தில் மரங்களில்தான் வாழும்.

தரையில் மனிதர்களைப்போல வாழ்வதில்லை.

மனிதனின் விருப்பத்திற்கும்,

தேவைக்குமேற்ப மண்ணிற்கு வரும் தெய்வங்களுக்கு

மனிதன் "புனித இடங்களை" உருவாக்குகிறான்.

தெய்வச்சிலைகள் அனைத்தும்

கவிழ்ந்த தாமரையின் மீதே (பத்ம பீடத்தின் மீதே)

அமைக்கப்படுவதன் காரணமும் இதுதான்.

நாட்டார் வழிபாட்டு மரபிலும்

தெய்வத்தின் கால்கள் தரையிலே பதியக்கூடாது

என்பதற்காக "பூடங்கள்" (பீடங்கள்) அமைத்துள்ளனர்.

பீடங்களின் உச்சிப்பகுதியில்

கவிழ்ந்த தாமரை போன்ற வடிவம்

காட்டப்பட்டிருப்பதனைக் கூர்ந்து கவனித்தால் புரியும்.

கோலம் இடப்படுமுன் தரைப்பகுதி

தண்ணீராலோ, சாணத்தாலோ தூய்மை செய்யப்படுகின்றது.

இதன்மீதே கோலங்கள் இடப்படுகின்றன.

வீடுகளில் தினமும் வாசலை பெருக்கி, சுத்தம் செய்து,

நீரோ, சாணமோதெளித்து,

அதன் மீதுதான் கோலமிடுகிறோம்.

சங்க இலக்கியத்தில், கோலம் இடப்பட்ட இடத்தையே '

களம்' என்று கூறப்பட்டு உள்ளது.

வேலனாக உருவகப் படுத்தப்பட்ட முருகப் பூசாரி

கோலத்தின் நடுவில் நின்றுதான் ஆடுகிறான்

என்று அறியப் படுகிறது.

இந்த மரபு இன்றும் கேரளத்தில், '

களமெழுதுதல்' என்று தொடர்கிறது.

சாதரணமாகப் போடப்படும் கோலம் ,

  விண்ணிலிருந்து இறங்கும் தெய்வம்

கால் பதிக்கப் போடப்படும் முதல் களம்.

வீட்டினுள் போடப்படுவது ,

தெய்வத்தை திருநிலைப் படுத்துவதற்காக.

சாமியறையில், தெய்வ வழிபாடு செய்யும் இடத்தில்

ஒரு சிறியகோலம் போட்டாலே

அங்கு ஒரு தெய்வீக அழகு வந்து விடும்.

கோலம் என்றால் அழகு என்று  பொருள் .

முகத்திற்கு அழகு திலகம்;

அகத்திற்கு அழகு கோலம்.

கோலமிட்ட வாசலை கடந்து போகும் போது

நாம் ஒரு வினாடியாவது நின்று பார்க்காமல் போவது இல்லை.

சாதாரணமாகப் பார்த்தால் வெறும் புள்ளிகளும்

கோடுகள் உண்டாக்கும் உருவங்களுமாகத் தோன்றும்

ஆனால் கணிதக் கண்ணால் பார்த்தால் 

பலவகை கோணங்களும்

அவற்றின் ஒத்து அமைப்புகளும் புலனாகும்

ஒருங்கமைக்காமலும், சரியான கணக்கிடலும் இல்லாமல் 

எப்படி பிசிரில்லா உருவங்களை கொண்டு வர முடியும்

ஒரு விதத்தில் இது ஒரு கணித சாஸ்திரமே.

அதிக கல்வி அறிவு இல்லாத 

நம் பெண் முன்னோர்கள் 

இந்த கலையில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பது 

பெண்ணாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் 

பெருமிதம் கொள்ள வேண்டியவிசியம். 

ஒரு விதத்தில் இக்கலை பெண்களின் 

இயற்கையான திறமையை வெளிப்படுத்தும் 

ஒரு கருவியாக இருக்கிறது.

கோலங்கள் பெண்களின் நுட்பமான 

அழகுழணர்ச்சியின் வெளிப்பாடு.

கோலத்தில் ஒரு தத்துவமே அடங்கி உள்ளது.

புள்ளிகள் சிவபெருமானாகவும்

சுற்றி போடப் படும் கோடுகள் 

சக்தியாகவும் கொள்ள வேண்டும்.

சக்தி இல்லையேல் சிவனில்லை ;

சிவன் இல்லையேல் சக்தி இல்லை;

இரெண்டும் சேர்ந்ததுதான் இறை நிலை.

ஆண் இல்லையேல் பெண் இல்லை

பெண் இல்லையேல் ஆண் இல்லை;

இதுதான் வாழ்க்கை நிலை.

கோலம் போடும் போது குனிந்து போட வேண்டும்.

முதுகு வளைந்து இருக்கும். இது பணிவைக் காட்டும்.

தெய்வத்தை குனிந்து வணங்கி பணிந்தால் 

எல்லை இல்லா அவன் அருளைப் பெறலாம்.

யாருமே நினைத்துப் பார்க்கவே முடியாத 

 இவ்வளவு அருமையான விளக்கத்தை

 நான் படிக்க நேரிட்டது.

அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். 

கோலம் போடுவதால் நம்மையும் அறியாமல்

 நல்லதொரு உடற் பயிற்சியை பெறுகிறோம். 

குனிந்து, வளைவது இடுப்பிற்கும், 

அசைவினால் கை, கால்களுக்கும், 

சுழற்றுவதால் கண்களுக்கும் 

நாள்தோறும் பலனை அடைகிறோம்.

மனித பரிமாண வளர்ச்சியே

இயற்கையுடன் பிணைந்தது

கோடுகளும், குறியீடுகளும் பண்டைய

மனிதன் வாழ்விடங்களில்   இருப்பதை

நாம் அனைவரும் அறிவோம்.

இவையே பின்பு வடிவங்கள் பெற்று

எழுத்துக்களாக மாறி இருக்கலாம்.

கோடுகளை இணைக்கும் போது

கோலங்கள் உருவாக்கி இருக்கலாம்.

அடிப்படையில் கோலம் ஒரு 

ஜியோமிதிக் கலைவடிவம். 

புள்ளிகள், கோடுகள், வளைவுகள் என்று 

கனிதசூத்திரங்களுக்குள் அடங்கும் 

நேர்த்தியும் ஒழுங்கும் கொண்ட ஒரு அறிவியல். 

அரங்ககோலம் என்பது

நடனஅரங்கங்களில் போடப்பட்டது.

அதுவே ரங்கோலம் ஆகி

இன்றைய ரங்கோலி ஆனது என்பர்.

கோலம் இடும்முன்  வாசலை

தயார்படுத்துவதிலும் ஒரு அறிவு

சார்ந்த விசியம் இருக்கிறது.

அது  சாணம் இடுதல்

சாணம் சிறந்த இயற்கை  கிரிமிநாசினி

வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது.

சில விதிகள் ஏற்ப கோலமிட்டால் 

வாழ்க்கையில் வளம் சேரும்.
 சூரியன் உதிப்பதற்கு முன்பு 

பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.

 வீட்டு வாசலில் மகாலட்சுமி 

வாசம் செய்வதாக ஐதீகம் 

எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.

தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ 

கோலம்போடக்கூடாது.

 கோலம் போட்டதும் காவி இடுவது 

மும்மூர்த்திகளை குறிக்கும்.

சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், 

கோலமாவின் வெண்மை பிரம்மாவையும் 

காவியோட செம்மை சிவனையும் குறிக்கிறது.

கோலத்தின் நடுவில் செம்பருத்தி, 

பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.

வியாழக்கிழமை துளசி மாட கோலம், 

வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் 

சனிக்கிழமை பவளமல்லி கோலம் 

பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் 

ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், 

திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் 

செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், 

புதன் மாவிலைக்கோலம் 

ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் 

போடுதல் நல்லது.

வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம்

 தீய சக்திகளை உள்ளே விடாது.

விழா நாட்களில் இழை கோலம் போடுவது சிறப்பு . 
  
கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் 

திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அமாவாசை மற்றும் 

இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் 

வாசலில் கோலம் போடக் கூடாது. 

அந்த ஆத்மாக்களை வீட்டினுள் 

அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும். 

அதனால் நம் முன்னோர்கள் 

நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் 

வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, 

அவர்களை வீட்டினுள் அனுமதித்து 

ஆசி பெறுவது நல்லது.

.இடது கையால் கோலம் போடக்கூடாது.

 பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் 

உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.

 கணவர் வெளியில் செல்லும் முன்பே 

கோலம் போட்டுவிடவேண்டும்.

கோலம் போட்ட பிறகே 

அடுப்பு பற்றவைக்க வேண்டும்.

ஆள்காட்டி விரலை நீக்கியே 

கோலம் போட வேண்டும்.

கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால்

கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.

 இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும். 

ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது 

அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம்.

பொதுவாக தெய்வங்களின் சின்னங்களை 

வீட்டின் வாசலில் கோலமாக போடக்கூடாது.

அந்த கோலங்களை யாராவது தெரியாமல் 

மிதித்துவிட்டாலும் பாவம் சேரும். 

அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்கும் தோஷம் ஏற்படும். 

இறைவனின் சக்கர சின்னங்களை 

பூஜைஅறையில் மட்டும்தான் கோலமாக போட வேண்டும். 

வாசலில் போடக்கூடாது.  

தினமும் கோலம் போடும்போது, 

காவி போடமுடியாவிட்டாலும், 

செவ்வாய்கிழமைகளில் மட்டுமாவது போட்டால் 

திருமண தடை நீங்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் வீட்டில் 

தினமும் அழகழகான கோலம் போடுங்கள், 

அந்த கோலத்தை கலைத்து விளையாட 

ரு மழலை பிறக்கும் என்பது நம் முன்னோர் வாக்கு.


அரிசி மாவில் கோலம் போடுவது 

எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதால் 

அன்னதானத்திற்கு ஒப்பானது.

மார்கழி பனிக் காற்றில் 

மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் 

அதிகாலையில் கோலம் போடும் 

பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்

மார்கழி மாதத்தில் அநேகமாக சுபநிகழ்ச்சிகள் 

செய்யாமல் இருப்பார்கள். 

அதனால் சுபசின்னமான கோலங்களை 

வீட்டின் வாசலுக்கு முன் பதிக்க வேண்டும். 

அப்படி செய்வதால்  அடுத்து வருகிற 

தை மாதத்தில் அந்த குடும்பத்தில் 

மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும் என்றும்

 அப்படி சுபநிகழ்ச்சிகள் செய்யும்போது 

தடையேதும் ஏற்படாமல் இருக்க 

ஸ்ரீமகாலஷ்மி அருள்புரிவாள் என்பது ஐதீகம்.