ஐயனின் மகத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐயனின் மகத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

விநாயக சதுர்த்தி!



ந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தி
னைபுந்தியில் வைத்து அடி போற்றுதுமே!


ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும்
திருநாளான விநாயக சதுர்த்தி
ஆண்டு தோறும் ஆவணித் திங்கள்
அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி)
கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை
வண்ணக் குடையுடன் வாங்கி வந்து,
எருக்கம் பூ அணிவித்து,
அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற
மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல்,
வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம்.
வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம்,
கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என
மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம்.
அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து
எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீ எனக்குசங்கத் தமிழ் மூன்றும் தா!


என்று ஒளவையார் பாடியது போல்
இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம்.
மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும்,
சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து,
பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று
கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

நாமம் பல தத்துவம் ஒன்று!

வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி,
வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம்
பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே.
ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே
எந்தச் செயலையும் தொடங்குகிறோம்.
கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு,
என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால்
 பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக
ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.


விநாயக சதுர்த்தி வரலாறு!

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக
‘கணபதி'யாக நியமித்தார்.
அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும்
மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து
கணபதியைப் பலவாறு துதி செய்தார்.
கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற
பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால்
இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க
விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.


சந்திரனின் சாபம்!

பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை)
கையில் எடுத்துக் கொண்டு, உயரக் கிளம்பி
உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார்.
அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும்,
கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு
சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான்.
அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, 
‘ஏ! சந்திரனே நீ தான் அழகன்
என்று கர்வம் கொண்டிருக்கிறாய்.
இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது.
அப்படி யாராவது உன்னைப் பார்த்தால்
அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார்.
சந்திரனும் ஒளி    மழுங்கித் தண்ணீருக்குள்   ஆம்பல் 


மலரில்மறைந்தான்.

சாபம் நீங்கிய விதம்!

சந்திரன் அழிந்ததைக் கண்டுவருந்திய தேவர்களும் முனிவர்களும்
இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர்.
பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ
இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும்,
கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும் கூறினார்.
எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்க
‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப் பின் வருவது)
விரதம் ஏற்று, பலவகையான பழங்கள், அப்பம்,
மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள்
முதலியவற்றை கணபதிக்கு அளித்து,
அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தக்ஷிணைகளை அளித்தால்
எண்ணிய வரங்களை அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார்.

பிறகு தேவர்கள் பிருகஸ்பதி(குரு)யைச்
சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர்.
சந்திரனும் இந்த முறையில் பூஜை செய்ய,
கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக,
விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார்.
சந்திரனின் மனம் களிப்புற்று, அவரைப் பணிந்து,

"தவம் காரணம் காரண காரணாநாம்
க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்"

என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான்.

பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு
கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர்.
கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார்.
‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி'யிலும் மோதகம்,
அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின்,
ரோகிணியுடன் கூடிய சந்திரனான
உன்னைப் பூசிப்பவர்களுக்கு
கஷ்ட நிவாரணம் செய்கிறேன்' என்று விநாயகரே கூறினார்.
இது சங்கடஹரண சதுர்த்தி எனப்படுகிறது.

பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால்
ஓர் ஆண்டு வரை தெடர்ந்து வீண் அபவாதங்கள்
வந்து சேரும் என்பது சிலரின் நம்பிக்கை.

விநாயக சதுர்த்தி!

எனவே, ஆண்டு தோறும்

 ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று
மண்ணாலான என் உருவத்தை
பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து
பல பூக்களால் பூஜித்த பின்
இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால்
அவ்வாறு செய்பவனுக்கு அவன் தெடங்கிய காரியத்தில்
வெற்றியையும், ஸகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன்'
என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப்
பல அபவாதங்களுக்கு ஆளான கிருஷ்ணனுக்கு
நாரதர் இக்கதையைக் கூறி,
கிருஷ்ணனே சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து
அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று அறிகிறோம்.

கஜமுகாசுரன் என்ற அசுரன்,
பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான்.
ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே
தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்;
கேட்ட வரம் கிடைத்தது.
ஆண், பெண் சம்பந்தமின்றி,
உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது
அவன் போட்ட கணக்கு.
அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை.
எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து,
தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.
தேவர்களை வதைத்தான்.
அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர்.
அவர்களது துன்பம் தீர்க்க
லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள்.
தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். 
உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். 
அந்தக் குழந்தைக்கு, "பிள்ளையார்' என பெயர் சூட்டினாள். 
அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான்.
 சிவபெருமான் அங்கு வந்தார். 
அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று.
 இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார்.
 "என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?' எனக் கேட்டு, 
பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். 
அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. 
வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். 
அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். 
பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். 
சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, 
உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த 
யானையின் தலையை வெட்டி, 
பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். 
தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, 
கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான். 
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம்,
 பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. 
மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. 
மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். 
ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; 
அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், 
தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் 
இதனால் விளக்கப்படுகிறது. 
விநாயகருக்கு, "சுமுகர்' என்ற பெயருண்டு.
 "சு' என்றால் மேலான அல்லது "ஆனந்தமான' என்று பொருள்படும். 
அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். 
யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல,
 பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக 
இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். 
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், 
"ஓம் கணேசாய நம' என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, 
அருகம்புல் அணிவித்து வழிபட்டால், 
அவரது நல்லருளைப் பெறலாம். ***

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

விநாயகனே

விநாயகர் பெயர் விளக்கம்
"வி " என்றால் "இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது , "ஓம் அநீஸ்வராய நம" என்பர். "அநீஸ்வராய" என்றால் தனக்கு மேல் ஒரு ஈஸ்வரனே இல்லை என்று பொருள்.
கணபதி என்பது...
கணபதி எனும் சொல்லில் "க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது. "ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. "பதி " என்னும் பதம் தலைவன் எனப் பொருள் படுகிறது. பரப்பிரும்ம சொரூபமாயிருப்பவன் கணபதி. மோட்சத்திற்கும் அவனே தலைவன்.
விநாயக வடிவ விளக்கம்
யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண்,பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யாநை அக்ரிணைப் பொருள், மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை , உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர் . அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.
விநாயகரிடம் ஏன் இருக்கிறது?
விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்களிருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம் ஆகியவை இருக்கும். புனித நீர்க்குடம் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்துக் களைத்துத் தன்னைச் சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பைப் போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார். அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. இவரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால்தான் முகம் யானை வடிவில் இருக்கிறது. பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளைக் கட்டிப் போடுகிறார். ஒடித்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதைக் காட்டுகிறது.
நவக்கிரகப் பிள்ளையார்
ஓங்கார நாயகனாய் திகழும் பிள்ளையாரின் உடலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரது நெற்றியில் சூரியனும், நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் பகவானும், வலது கீழ் கையில் புதனும் கொலு வீற்றிருக்கிறார்கள். வலது மேல் கையில் சனியும் , சிரசில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்கிரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இருக்கிறார்களாம்.
பெண் விநாயகர்
விநாயகருக்கு விநாயகி , வைநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி ,கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.
அரசமரத்தடி ஏன்?
அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் காற்று பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக் கூடியது. எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலிருப்பவர்களும் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தைச் சுற்றிப் பிள்ளையாரை வணங்கிச் செல்கிறார்கள்.
விநாயகரும் அவருக்கேற்ற மரங்களும்
விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார். இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரைப் பிரதிஷ்டை செய்யலாம். இந்த ஐந்து மரங்களும் பஞ்சபூதத் தத்துவத்தை விளக்குகிறது. அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும். இந்த ஐந்து மரங்களும் விநாயகர் கோவிலில் நடப்பட்டால் அது முழுமை பெற்ற கோவிலாக இருக்கும்.
விநாயகருக்கு உகந்த இலைகள்
முல்லை, எருக்கு இலை, கரிசலாங்கண்ணி, மருத இலை, வில்வம், விஷ்னு கிரந்தி, ஊமத்தை, மாதுளை, இலந்தை, தேவதாரு, வெள்ளை அருகம்புல், மருவு, வன்னி, அரசு, நாயுருவி, ஜாதி மல்லிகை, கண்டங்கத்தரி, தாழை, அரளி, அகத்தி இவற்றின் இலைகளைக் கொண்டும் அர்ச்சிக்கலாம்