புதன், ஜூலை 06, 2011

சிவராத்திரி

சிவபெருமானுக்குரிய விரதங்களில் சிவராத்திரி மிக

முக்கியமானதாகும்.

சிவராத்திரி எப்படி ஏற்பட்டது என்பதற்கு

 பல கதைகளும் காரணங்களும் உள்ளன.

1.சிவபெருமானின் துணைவியாராகிய பார்வதிதேவி ஒரு நாள்

விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தினார்.

 உடனே உலகங்கள் யாவும் இருண்டு விட்டன.

அந்த இரவுதான் மகா சிவராத்திரி எனப்படுகிறது.

இருளில் மூழ்கித்தவித்த தேவர்கள் இறைவனை வேண்ட

சிவபெருமானின் நெற்றிக்கண்களைத் திறந்து நெருப்பொளி காட்ட

முயற்சிக்கவே அதன் அனல் பிரவாகத்தில் பதைப்புற்ற தேவி

கைகளை எடுத்து விட்டாளாம்.

 அதன்பின் சிவபெருமான் விழிகளை திறந்ததால் சகல

புவனங்களுக்கும் ஒளி திரும்பவும் கிடைத்ததாம்.

தேவர்கள் அன்றிரவு இறைவனை பூஜித்ததை நினைவு கூர்ந்ததே

சிவராத்திரி பூசையாக கொண்டாடப்படுகிறது.

2.ஒரு பிரளய காலத்தின்போது பிரபஞ்சம் முழுவதும் இருள்

சூழ்ந்துகொள்ளவே அன்னை பராசக்தி (பார்வதி தேவி) சிவலிங்கபூசை

செய்து இறைவனை வேண்டிக்கொண்டாள்.

 அதன் பின் உலகங்கள் எல்லாவற்றிற்கும் ஒளி கிடைத்தது.

சக்தி வழிபட்ட இரவே சிவராத்திரி.

அதனையயாட்டியே சிவராத்திரியின் இருள் சூழ்ந்த இரவு பொழுதில்

கண்விழித்து சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கும் பழக்கம் வந்தது.


3.தேவர்களும் அசுரர்களும் அமுதம் எடுப்பதற்காக மந்திர மலையை

மத்தாக வைத்து வாசுகி என்னும் பாம்பை கயிறாகக் கொண்டு

பாற்கடலை கடைந்தார்கள்.

 அப்போது வாசுகி பாம்பு நஞ்சைக் கக்கவே,

உலகங்களைக் காக்கும் பொருட்டு

சிவபெருமான் அந்த நஞ்சை ஏந்தித் தானே உண்டு விட்டார்.

ஆனால் ஈஸ்வரனுக்கு தீங்கு நேருமோ என அஞ்சிய தேவர்கள்

இரவு முழுவதும் கண் விழித்தபடி நஞ்சின் பாதிப்பு

சிவனைச் சாராதிருக்க சிவபெருமானே வரம்

அருள வேண்டும் என்று துதித்தார்களாம்.

அந்த இரவுதான் சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.

4.பிரம்மனுக்கும் மகாசிவனுக்கும் யார் பெரியவர்

என்ற சர்ச்சை உண்டாயிற்று.

அப்போது மூவுலகங்களையும் இருள் கவ்வியதாம்.

சிவபெருமானுடைய முடியை பிரம்மாவும்,

அடியை மகாவிஷ்ணுவும் கண்டுபிடிக்க முயற்சிப்பது என்றும்

யார் இந்த போட்டியில் முன்னதாக வெற்றி பெறுகிறாரோ

அவரே தகுதியில் பெரியவர் என்றும் சிவபெருமானின்

முன்னிலையிலேயே தீர்மானிக்கப்பட்டது.

 இருவரும் தன்னுடைய அடிமுடியைத் தொட தயாரானதும்

சிவபெருமான் பிரமாண்டமான ஜோதிலிங்கமாக விஸ்வரூபம்

எடுத்து உலகெங்கும் ஒளிபரப்பினாராம்.

 அந்த இரவே சிவராத்திரி என்று சில புராணங்கள் கூறுகின்றன.

5.பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட

அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில்,

இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி,

பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும்

ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.

பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி,

அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும்

தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே

கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் –

மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை;

தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும்,

அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து

முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும்.

அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார்.

அந்த இரவே `சிவராத்திரி’ என வழங்கப்பட்டு,

அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

 

சிவராத்திரியின் வகைகள்

1.யோக சிவராத்திரி

தேய்பிறை காலத்தில் சதுர்த்தசி திதியானது திங்கட்கிழமையில் வந்தால்

அது யோக சிவராத்திரி ஆகும்.

2.நித்திய சிவராத்திரி

பன்னிரண்டு மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி

நாட்களில் வருவது நித்திய சிவராத்திரி ஆகும்.

3.முக்கோடி சிவராத்திரி

மார்கழி மாதத்து சதுர்த்தசி திதியானது திருவாதிரை நட்சத்திரத்துடன்

கூடி வந்தால் அது மிகவும் உத்தமம்.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியானது

செவ்வாய்க்கிழமையிலோ, ஞாயிற்றுக்கிழமையிலோ அமைவதும்

முக்கோடி சிவராத்திரி ஆகும்.

4.பட்ச சிவராத்திரி

தை மாதத்து தேய்பிறை பிரதமை திதி முதல் ஆரம்பித்து பதிமூன்று

நாட்களிலும் ஒரு வேலை உணவு உண்டு

பதினான்காம் திதியானது சதுர்த்தசி தினத்தில்

உபவாசம் இருத்தல் பட்ச சிவராத்திரி எனப்படும்.

5.மாத சிவராத்திரி

சித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி,

வைகாசி மாதம் அஷ்டமி திதி,

ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி,

ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி திதி,

ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி,

புரட்டாசி மாதம் வளர்பிறை திரயோதசி திதி,

ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி,

கார்த்திகை மாதம் வளர்பிறை சப்தமி திதி, தேய்பிறை அஷ்டமி திதி,

மார்கழி மாதம் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தசி திதிகள்,

 தைமாதம் வளர்பிறை திருதியை திதி,

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி,

பங்குனி மாதம் வளர்பிறையில் திருதியை திதி,

ஆகியவை மாத சிவராத்திரி நாட்களாகும்.

6.மகா சிவராத்திரி

மாசி மாதத்தில் பெளர்ணமிக்குப்பின் தேய்பிறையில் பதினான்காவது

நாளாக வரும் சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி ஆகும்

சிவராத்திரியில் வழிபாடு செய்யும் விதம்

சிவராத்திரி தினத்தில் காலை, மாலை இரு வேளையும்

ஆலயம் சென்று சிவனை வழிபடுதல் நன்று.

வீட்டு பூஜை அறையிலும் வழிபாடு செய்யலாம்.

 நியமப்படி பூஜை செய்பவர்கள் சிவராத்திரி இரவு

நான்கு சாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்

முறைப்படி பூஜிப்பவர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய

பால், தயிர், நெய், கோமயம், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு

ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

கங்கை நீரால் அபிஷேகம் செய்தல் மிகவும் நல்லது.

 அபிஷேகம் ஆனதும் சந்தனம், அகில் குழம்பு, அரைத்த பச்சை கற்பூரம்,

அரைத்த குங்குமப்பூ ஆகியவற்றை லிங்கத்திருமேனியில் பூசலாம்

வில்வ இலை, வன்னி இலை, தாமரை மலர், செண்பகப்பூ, நந்தியாவட்டை

ஆகியவற்றால் இறைவனை பூஜித்தல் வேண்டும்.

 மல்லிகை, முல்லை ஆகிய மலர்களையும் பயன்படுத்தலாம்

சிவபெருமானுக்கு நிவேதனம் செய்ய

முதல் சாமத்துக்கு பச்சைபயறு பொங்கலும்,

இரண்டாம் சாமத்திற்கு பாயாசமும்,

மூன்றாம் சாமத்திற்கு எள் அன்னமும்,

நான்காம் சாமத்திற்கு சுத்தன்னமும் உகந்தவை

பஞ்சவில்வம் எனப்படும் வில்வம், நொச்சி, முட்கிளுவை, மாவிலங்கை,

விளா ஆகியவற்றைக் கொண்டு திருநீறு, மல்லிகை, முல்லை போன்ற

புஷ்பங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.

தேவாரம், திருவாசகம், திருவருட்பா, முதலான சிவபெருமானுக்கான

பக்திப்பாடல்கள் மற்றும் நாமாவளிகள் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை

பூஜையின்போது சொல்ல வேண்டும்.

 ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மட்டுமேகூட உச்சரிக்கலாம்.

சிவசிவ என்றால் கூட போதும்.

 சிவசிவ என தீவினை மாளுமே.



சிவராத்திரியன்று படிக்க வேண்டியது :

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது

ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும்.

இது மனதிற்கு தைரியத்தை தரும்.

எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.

இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம்,

 நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம்,

திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை

படித்தாலும், கேட்டாலும் மற்ற நாட்களைவிட அதிக பலன் கிடைக்கும்.


சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி

சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது

அவ்வாறு பூஜையைச் செய்து முடிக்க

முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும்

பூஜையைக்கண்டு களிக்கலாம்.

அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும்.

பகலில் உறங்கக்கூடாது.

இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும்

பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.


நன்றி -திருப்பாம்புரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக