செவ்வாய், ஜனவரி 17, 2012

சத்தியவான் சாவித்திரி

மாங்கல்ய பாக்கியத்திற்காக 
பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் 
காரடையான் நோன்பாகும்
 அன்னை காமாக்ஷி தன் பதியாம் 
கைலாஸபதியுடன் சேர்வதற்காக 
இருந்த நோன்பு. 
கேரளாவிலும், உத்தரப் பிரதேசத்திலும் 
கர்வா சௌத் எனும் பிரசித்தி பெற்ற நோன்பே
தமிழ் நாட்டில் காரடையான் நோன்பு 
 சாவித்திரி நோன்பு ‘ ,
காமாக்ஷி விரதம் என்றும் அழைப்பர். 
மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, 
பங்குனி மாதத்தின் முதல் நாள் 
தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் 
இந்நோன்பினை கடைபிடிக்கிறார்கள்.
பெண்களின் தைரியம், பொறுமை, கடமை,
சமயோசிதம் ஆகிய எனும் குணங்களால் 
எமனையும் வெல்லும் தைரியம் உண்டு 
என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. 
மத்ர தேச மன்னன் அஸ்வபதி. 
இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. 
இதற்காக 10 ஆயிரம் யாகங்கள் செய்தார். 
சாவித்திரி தேவதையை நினைத்து
18 ஆண்டுகள் தவமிருந்தார். 
அவரது தவத்தை மெச்சிய சாவித்திரி தேவதை 
அவருக்கு குழந்தை பாக்கியம் அளித்தது. 
அந்தக் குழந்தைக்கு தனக்கு வரமளித்த 
தேவதையின் பெயரையே இட்டார். 
சாவித்திரியை திருமணம் செய்து கொள்ள
யாரும் முன்வரவில்லை. 
காரணம், அவளை ஒரு தெய்வப்பிறவியாக  கருதினர். 
கவலையடைந்த அஸ்வபதி, 
மகளை நேரடியாக மாப்பிள்ளை 
பார்க்க அனுப்பினார். 
"உனக்குரிய கணவனை நீயே தேர்ந்தெடு "
என சொல்லி அனுப்பினார். 
அவள் பலநாடுகளுக்கும் சென்று திருப்தி ஏற்படாமல்,
ஒரு காட்டிற்கு சென்றாள். 
அங்கே த்யுமத்சேனன் என்ற பார்வையற்ற ராஜா, 
தன் மனைவி ஸைவ்யையுடன் வசித்தார். 
அவர்களது மகன் சத்தியவான், 
அவர்களுக்கு தகுந்த உதவி செய்தான்.
சத்தியவான் மிகுந்த குணவான் 
என்பதை அவள் புரிந்து கொண்டாள். 
பெற்றவர்களுக்கு சேவை செய்யும் 
அவனது பண்பு மிகவும் பிடித்து விட்டது, 
அவர்கள் எதிரிகளிடம் தங்கள் நாட்டைப் பறிகொடுத்து 
காட்டில் தங்கியிருந்தனர்.
ஊர் திரும்பிய சாவித்திரி, 
சத்தியவானை திருமணம் செய்ய விரும்புவதாக 
தந்தையிடம் சொன்னாள். 
அப்போது, அங்கு வந்த அஸ்வபதியின்
குருநாதரான நாரதமுனிவர், 
"சத்தியவான் குணவான் என்பதில் ஐயமில்லை. 
உலகில் அப்படி ஒரு ஆணை பார்க்க இயலாது. 
சாவித்திரிக்கு தகுதியானவன் என்றாலும், 
அவனது ஆயுள் இன்னும் ஓராண்டே " என்றார். 
அப்படியானால் வேறு மாப்பிள்ளை பார், 
என மகளிடம் அஸ்வபதி சொல்ல, 
வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் சகஜம். 
அதை எதிர்கொள்ளவே நாம் பிறந்திருக்கிறோம், 
என்று திடமாகச் சொல்லிய சாவித்திரியை
 நாரதர் பாராட்டினார். 
அந்த திருமணத்தை தைரியமாக 
நடத்தும்படி அஸ்வபதியிடம் சொன்னார். 
அஸ்வபதியும் திருமணத்தைமுடித்து விட்டார். 
இந்நிலையில், நாரதர் சொன்ன கணக்குப்படி 
நான்கு நாட்களே இருந்த நிலையில், 
சாவித்திரி ஒரு விரதத்தை துவங்கினாள். 
அதன்படி, மூன்று நாட்கள் 
இரவும் பகலும் விழித்திருந்து 
உண்ணாமல் இருக்க முடிவு செய்தாள். 
"அம்மா! இது சாத்தியம் தானா!? என மாமனார் கேட்க 
"எல்லா செயல்களிலும் உறுதிப்பாடே 
வெற்றிக்கு காரணம்," என்று பதிலளித்த சாவித்திரி 
விரதத்தை துவங்கினாள்.  
அன்று சத்தியவான், பெற்றோருக்கு 
பழம் கொண்டு வர காட்டுக்கு கிளம்பினான். 
சாவித்திரியும் உடன் வருவதாகச் சொன்னாள். 
காட்டில் நடக்க கஷ்டமாக இருக்குமே! 
என்ற கணவனிடம் அனுமதி பெற்றாள். 
மாமனார் மாமியாரும் பத்திரமாக 
சென்று வர அறிவுறுத்தினர். 
அன்று மாலை சத்தியவானுக்கு 
கடும் தலைவலி ஏற்பட்டது. 
அவன் அப்படியே மனைவியின் 
மடியில் சாய்ந்தான். 
அந்நேரத்தில், சிவந்த கண்களுடன்
பாசக்கயிறு ஒன்றுடன் ஒரு உருவம் தென்பட்டது.
நீங்கள் யார்? என்றாள் சாவித்திரி.
நீ பதிவிரதை என்பதால் 
உன் கண்ணுக்குத் தெரிந்தேன். 
நான் எமதர்மராஜா. 
உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன்,என்றவன் 
சற்றும் தாமதிக்காமல் அவனது உயிருடன் கிளம்பினான். 
சாவித்திரி பின் தொடர்ந்து சென்று, 
நண்பரே! என்றாள்.
நான் உன் நண்பனா? என்ற எமனிடம்,
ஒருவன் மற்றொருவனுடன் 
ஏழு அடிகள் நடந்து சென்றால் 
நட்புக்குரியவர்கள் ஆகிறார்கள் என்று 
சான்றோர் சொல்லுவர், என்று பதிலளித்த சாவித்திரியிடம், 
தெளிவாகப் பேசும் உனக்கு 
வேண்டும் வரங்களைக் கேள், 
உன் கணவனின் உயிர் தவிர, என்றான் எமன். 
தன் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும், 
அவரது நாடு மீட்கப்பட வேண்டும், 
என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை. 
அவருக்கு நூறு குழந்தைகள் வேண்டும்,என்றாள்.
எமன் அந்த வரத்தைத் தந்து 
இனி போய்விடு என்றான்.
சாவித்திரி பின் தொடர்ந்தாள். 
உமக்கு தர்மராஜா என்று பெயர் உண்டு. 
தர்மவான்களுடன் உறவு கொண்டால்
 பலனளிக்காமல் போகாது. 
உம்முடன் சிறிது நேரம் நட்பு கொண்ட எனக்கும் 
அதற்குரிய பலன் உண்டல்லவா? என்ற 
சாவித்திரியின் பேச்சைக் கேட்ட எமன்,
மேலும் சில வரங்களைக் கேட்கச் சொன்னான். 
எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள் 
அவளது சமயோசிதத்தை பாராட்டிய எமன், 
கணவனின் உயிரைத் திருப்பித் தந்தான். 
நூறு குழந்தைகள் வேண்டுமென கேட்டதன் மூலம், 
சத்தியவானும், சாவித்திரியின் தந்தையும் 
நானூறு ஆண்டுகள் வாழும் பாக்கியம் பெற்றனர். 
இதன் காரணமாகத்தான் சாவித்திரியின் 
கதையைக் கேட்பவர்கள் 
தீர்க்காயுளுடன் இருப்பர் என்பார்கள்.  


வனத்திலே சத்தியவான் தேவி யான சாவித்திரி 
மண்ணைப் பிசைந்து அடைதட்டி நிவேதனம் செய்து 
கௌரி விரதத்தைப் பூர்த்தி செய்தாள். 
அதி லுள்ள சிறு கற்களை நினைவூட்ட 
காராமணிப்பயிற்றை அடையில் கலக்கிறோம். 
எமன் பின்னால் சென்ற அஸ்வபதி புத்திரி 
ஐந்து வரங்கள் பெற்று வந்தாள். 
அவள் திரும்பி வரும் வரை சத்தியவான் உடலை 
கழுகுகள் கொத்தாமல், சிங்கம், சிறுத்தை, ஓநாய் நரி போன்ற 
மிருகங்கள் தொடாமல் அவளது பூஜாபலன் காத்தது.
விரதமுறை: 
விரதம் இருக்கும் நாளில் பெண்கள் 
அதிகாலையில் நீராடி, 
பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். 
ஒரு கலசத்தின் மேல் 
தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். 
கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, 
அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். 
அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, 
அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். 

மஞ்சள் சரடு கட்டிக் கொள்வதற்கு முன்பு 
அதில் ஒரு சிறிய பசு மஞ்சளை துளையிட்டுக் 
கோர்த்துக் கட்டியோ அல்லது 
புஷ்பம் கட்டியோ வைக்கவேண்டும்.
பலா இலை அல்லது வாழை இலையில்
 பிரசாதம் வைக்க வேண்டும் “ 
பூஜை அறையில் கோலமிட்டு, 
சிறிய நுனிவாழை இலை போட்டு, 
இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, 
வாழைப் பழம், மஞ்சள் சரடு இவைகளை வைத்து 
இலை நடுவில் வெல்ல அடையும், 
வெண்ணெயும் வைக்க வேண்டும். 
முதிர்ந்த சுமங்கலி தன் இலையில் 
அம்பிகைக்கு ஒரு சரடு சேர்த்து 
வைத்துக் கொள்ள வேண்டும். 
மூன்று இலை போடக் கூடாது. 
நான்கு இலையாகப் போட்டு 
சரடு கட்டிக் கொண்ட பின், 
மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள 
ஆடவர்களை சாப்பிடச் சொல்லலாம். 
தீர்த்தத்தால் இலையைச் சுற்றி 
நைவேத்தியம் செய்த பிறகு 
அம்பாள் படத்தில் சரட்டை அணிவித்த பின்
 இளைய மங்கையருக்கு முதிய சுமங்கலிகள் 
சரடுகட்ட வேண்டும். 
பிறகு தானும் கட்டிக் கொண்டு 
அம்பி கையை நமஸ்கரித்த 
பிறகு அடையை சாப்பிடலாம். 
நோன்பு ஆரம்பித்தது முதல் முடிக்கும் வரை
 தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. 
மாசி முழுவதும் போகுமுன் சரடு கட்டிக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் குழந்தைகள் உடல் குன்றியவர்கள் 
எளிய பலகாரம் சாப்பிடலாம். 
மற்றவர்கள் பாலும், பழமும் 
சாப்பிடுவது மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். 
நோன்பு நோற்ற பின்னும் அடைதான் சாப்பிடலாம். 
மறுநாள் சூரியோதயத்திற்கு முன் 
பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும். 
நோன்பு தினத்தில் சாவித்திரி சரித்திரம் படிப்பது விசேஷம்
நோன்பு அடை” முக்கியம். “
நோன்பு அடை” அல்லது கொழுக்கட்டை 
வழக்கம் இல்லாத குடும்பத்தவர்கள் 
வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற 
ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், 
ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யலாம்.

கார்காலத்தில் (முதல் பருவம்) 
விளைந்த நெல்லைக் குத்தி 
கிடைக்கும் அரிசி மாவில், 
இனிப்பு சேர்த்து அடை தயாரிக்க வேண்டும். 
இதுவே, காரடை ஆகும். 
இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கு பெயர் அமைந்தது. 
ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணை 
இலையில் வைத்து, 
நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, 
துளசிச் செடியில் ஒன்று கட்டி,
 தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். 
மாசி மாதம் நிறைவதற்கு முன் 
தாலிசரடைப் புதுப்பித்துக்
கட்டிக் கொள்ள வேண்டும்.
பங்குனி பிறந்ததும் 
நோன்பு சரடை அணிய வேண்டும்.  
இதை அணியும் பொழுது சொல்லவேண்டிய சுலோகம் 

"தோரம் க்ரஹணாமி ஸுபகே 

ஸஹாரித்ரம் தராமி அஹம் !

பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம் 

ஸுப்ரீதா பவ ஸர்வதா !!

பொருள் : 

கணவர் நோயற்று நீண்டநாள் வாழ்ந்திட 

காரிகை நான் காரடையான் நோன்பிருந்தேன். 

காமாக்ஷி நின் அருளால் நூல் சரடும் நான் அணிந்தேன். 

கணவனார் ஆயுளுக்கு காப்பு தெய்வம் நீ அம்மா!.


பின்பு கீழ்காணும் வாக்கியங்களை சொல்லவேண்டும்,

" உருகாத வெண்ணெய்யும் ஓர் அடையும் 

வைத்து நோன்பு    நோற்றேன். 

ஒருநாளும் ஒருபோதும் என் கணவர் 

என்னை பிரியாமல் இருக்க வேண்டும்.
இப்படி வேண்டி வழிப்பட்டபின்,

முதலில் கணவருக்கு காரடையும் வெண்ணெய்யும் தரவேண்டும். 

இதன் பின்  ஏனையோருக்கு அதனை விநியோகித்து 

தாமும் உண்டு காரடை நோன்பை நிறைவு செய்ய வேண்டும்.  


ராமாயணத்தை படித்தால், 
அது படிக்கப்படும் இடத்திற்கு 
ஆஞ்சனேயர் வந்து விடுவார் என்பதுபோல், 
சாவித்திரியின் சரித்திரத்தை கேட்டாலோ –
 படித்தாலோ அந்த இடத்தில் சாவித்திரிதேவியே 
முன் வந்து ஆசி வழங்குவாள். 
தீர்க்க சுமங்கலி பவ என்று யமனே ஆசி வழங்குவார்

வாணலியின் அடியில் வைக்கோலைப் போட்டு 
மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். 
பொருள்- நெல் கதிரிலிருந்து பிரியும் வரை காப்பது வைக்கோல். 
“சத்திய வான் உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டது. 
உயிரை மீட்டுக்கொண்டு வரும் வரை
 உடலைக் காத்திரு” என்று சொல்லி 
வைக்கோலால் மூடி விட்டுப் போனாள் சாவித்திரி. 
அதன் அடையாளமாகத்தான் வைக்கோல் போடுகிறோம். 
“ருசிக்காக உப்புப் போட்டும் அடை தட்டிக் கொள்ளலாம். 
இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். 
கணவரின் ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். 
கன்னிப் பெண்கள் நல்ல குணவானுக்கு 
மாலையிட்டு சீரும் சிறப்புமாய் வாழ்வர். 

சவித்ரு என்பது சூரியனின் பன்னிரு திருநாமங்களுள் ஒன்று .
சாவித்திரிசூரியனின் மகளாகவே கருதப்படுகிறாள்
ன்னிரண்டே மாதங்களில்
கணவனது ஆயுள் முடிந்து போகும் என்பது தெரிந்திருந்தும்,
மனம் கலங்காது உறுதியுடன் 
மரணத்தை எதிர்த்து வெற்றி கொள்கிறாள்
அன்பே அவளது பலமாக இருப்பதைக்
கதையின் ஒவ்வொரு வரியிலும் காண முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக