புதன், ஆகஸ்ட் 10, 2011

வரலட்சுமி விரதம்.

மாங்கல்ய பாக்கியம் வேண்டி,

மகாலட்சுமி யைப் பெண்கள் வழிபடும் நாளே வரலட்சுமி விரதம்.


நான்காவது மனு என்ற மன்னரின் ஆட்சிக் காலத்தில்,

"விகுண்டை' என்ற பெண்ணுக்கு, மகனாகப் பிறந்தார் திருமால்.

தன் தாயின் பெயரால், "வைகுண்டன்'

என்று பெயர் பெற்றார்.

அப்போது, "நளினி' என்ற பெயரில் பிறந்த லட்சுமி,

அவரை மணந்து கொண்டாள்.

அவள் திருமாலிடம், தன் பெயரால்

ஒரு நகரத்தை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார்;

திருமாலும், "ஸ்ரீவைகுண்டம்' எனும் நகரை நிர்மாணித்துக் கொடுத்தார்


அழகே உருவான ஸ்ரீவைகுண்டத் திற்கு

யாழ் மீட்டும் கந்தர்வப் பெண் ஒருத்தி சென்றாள்.

அவள் லட்சுமியின் அழகையும்,

கீர்த்தியையும் யாழிசைத்தபடியே புகழ்ந்து பாடினாள்.

இதை கேட்ட லட்சுமி, மனம் மகிழ்ந்து,

தன் கூந்தலில் சூடியிருந்த நறுமணம் மிக்க

மலர்ச்சரத்தை எடுத்துக் கொடுத்தாள்.

அதை பெறற்கரிய பிரசாதமாக நினைத்த அந்தப் பெண்,

தன் யாழில் சுற்றிக் கொண்டாள்.

வானவெளியில் அவள் செல்லும் போது,

துர்வாசர் என்ற முனிவர் அவளைச் சந்தித்துப் பேசினார்.

அவ்விடத்தில் இதுவரை உணராத நறுமணம் கமழவே,

அதற்கான காரணத்தை அப்பெண்ணிடம் கேட்டார்.

லட்சுமி தனக்கு தந்த சரத்தில் இருந்தே

மணம் கமழ்வதாக சொன்ன அவள்,

"உங்களைப் போன்ற மகாமுனிவர்களே

மகாலட்சுமியின் இந்த பிரசாதத்தை பெறத் தக்கவர்கள்...' என்று

அதை கொடுத்து விட்டாள்.

அதை சாட்சாத் மகாலட்சுமியே தனக்கு தந்ததாகக் கருதிய துர்வாசர்,

அந்த மலர்ச்சரத்துடன் வானவெளிக்கு சென்றார்.

ஐராவதம் எனும் யானையின் மீது பவனி வந்த இந்திரனுக்கு,

மலர் பிரசாதத்தின் அருமையைக் கூறி,

அதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

அவன், அதை அலட்சியமாக வாங்கி,

யானையின் மத்தகத்தில் வைத்தான்.

அதில் இருந்த வண்டுகள், யானையை மொய்க்கவே,

அது எரிச்சலடைந்து மலரை இழுத்து போட்டு மிதித்தது.

இதைக்கண்டு கோபமடைந்த துர்வாசர்,

"இந்திரா... உனக்கு கற்பக விருட்சம், காமதேனு,

ஐராவதம் போன்ற கேட்பதைத் தருபவை இருப்பதால் தானே,

லட்சுமி தாயாரின் தயவு தேவையில்லை என நினைத்து இவ்வாறு செய்தாய்.

அவை எதுவும் உனக்கு இல்லாமல் போகட்டும்...' என்றார்.

அவை, பாற்கடலில் சென்று மூழ்கி விட்டன.

ஒருமுறை, பிருகு எனும் மகரிஷி,

திருமாலின் பொறுமையை பரிசோதிப்பதற்காக

அவரது மார்பில் எட்டி உதைத்தார்.

இதனால், திருமாலின் மார்பில் வசித்த லட்சுமியும்,

பாற்கடலில் சென்று மறைந்தாள்.

லட்சுமி கடாட்சத்தையும், செல்வத்தையும் இழந்த இந்திரன்,

மீண்டும் அதைப் பெறுவதற்காக பிரம்மனை வேண்டினான்.

அவை, பாற்கடலில் மறைந்திருந்த தகவலை அறிந்த பிரம்மா,

திருமாலின் உதவியை நாடுமாறு சொன்னார்.

அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது,

ஒவ்வொரு பொருளாக வெளியே வந்தது.

லட்சுமி தாயாரும் வெளிப்பட்டாள்.

அவள் வெளியே வரும் போதே,

முத்துமாலைகள் அணிந்தும்,

கையில் மணமாலையை ஏந்தியும் காட்சி தந்தாள்.

அவளுக்கு கங்கை, யமுனை முதலான புண்ணிய தீர்த்தங்கள்

புனித நீரை வழங்கின.

நவரத்தினங்கள் இழைத்த பொற்கலசங்களில்

தீர்த்தமேந்தி வந்த யானைகள்

அவளுக்கு அபிஷேகம் செய்தன.

பிரம்மா பல ஆபரணங்களை வழங்கினார்.

சரஸ்வதி, நட்சத்திரங்களை மாலையாகக் கோர்த்து கொடுத்தாள்.

வானம் பட்டாடைகளை அளித்தது.

வைஜெயந்தி என்ற மாலையை வருணன் அளித்தான்.

நாகலோகத்தினர் நெற்றிச் சுட்டியும், மகர குண்டலமும் அளித்தனர்.

அவளுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்து கொள்ளலாம்

என பிரம்மா கூறவே,

அவள் தன் கையில் இருந்த மணமாலையை

திருமால் கழுத்தில் அணிவித்தாள்;

திருமணம் இனிதே நிகழ்ந்தது.

வரலட்சுமி விரத நன்னாளில்,

லட்சுமியின் வரலாற்றைப் படித்து,

பூஜை செய்பவர்கள் செல்வ வளம், மாங்கல்ய பாக்கியம் பெற்று

சிறப்புடன் வாழ்வர்.




சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள்.

அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு

நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள்.

ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால்

அன்னை பார்வதி அவளை

குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.

சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு

பார்வதியில் காலில் விழுந்தாள்.

வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால்

நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள்.

அவள் பூலோகம் வந்து,

ஒரு குளக்கரையில் அமர்ந்து

வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.

புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது,

வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும்.

குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை,

கோதாவரி, காவிரி, தாமிரபரணி

ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால்

காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும் வரலாம்.

மாமனார் மற்றும் மாமியாருக்கு

பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும்,

வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.

மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்

தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும்

உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி

அவர்களுக்கு பணிவிடை செய்ததால்

வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து

கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக