சனி, ஆகஸ்ட் 27, 2011

ரம்ஜான் பண்டிகை.


உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு

எனது மனமார்ந்த
ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்



முஸ்லிம்களுக்கான ஐந்து கடமைகள் முக்கியமானது.

கலீமா (இறைவன் ஒருவனே;

முகமது நபி அவரது தூதர் என நம்பிக்கை வைத்தல்),

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்

ஆகிய ஐந்துமே அந்த கடமைகள்.

நோன்பு உங்களுக்கு கேடயமாக இருக்கிறது

என்கிறது இஸ்லாம்

. தீமைகள் பக்கம் செல்வதை தடுத்து,

நன்மைகளின் பக்கம் அது வழிநடத்துவதால்

அதை கேடயம் என்கிறது இஸ்லாம்.

உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டது போல்,

நோன்பு உங்களுக்கும் விதியாக்கப்பட்டுள்ளது

என குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.

இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில்

30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.

மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு

இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும்.

பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான்

மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான்.

மற்ற நான்கு கடமைகளை நிறைவேற்றும்போது

உடலால் தன்னை வருத்திக் கொள்ளும் நிலை ஏற்படாது.

ஆனால் நோன்பு கடமையை நிறைவேற்றும்போது மட்டும்

பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும்.

அந்த சிரமத்தை சகித்து

இறைவனுக்காக நோன்பு வைப்பதால்

அந்த குணம் இறைவனுக்கு பிடித்துப்போகிறது.

ஐந்து வேளை தொழுதல்,

குர்ஆன் படித்து, தர்மங்கள் அதிகம் செய்வது

ஆகியவற்றுக்கு ரம்ஜானில் முன்னுரிமை தரப்படுகிறது.

பொய், புறம் பேசுதல், ஏமாற்றுவது என

அனைத்து குற்றங்களில் இருந்தும்

மனிதன் தன்னை இம்மாதத்தில் தடுத்துக்கொள்கிறான்.

நோன்பு இருக்கிறோம் என்ற பயம் அவனை ஆட்டிப்படைக்கிறது.

ரம்ஜான் இல்லாத மாதங்களிலும் இந்நிலை தொடர வேண்டும்

என்பதற்காகவே ஒரு வாரம், பத்து நாள் என இல்லாமல்

30 நாட்கள் அதாவது ஒரு மாதம் முழுவதும் நோன்பு இருப்பது

கடமையாக்கப்பட்டுள்ளது.

‘சஹர்’ எனப்படும் காலை உணவில் இருந்து

இந்த நோன்பு தொடங்குகிறது.

விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள்.

சூரிய உதயத்துக்கு முன்பாகவே (காலை 5 மணி) நோன்பு தொடங்கிவிடும்.

சூரியன் அஸ்தமனமான பிறகு,

அதாவது மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள்.

நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர்.

நோன்பு வைக்க இயலாதவர்கள் யார்

என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள்,

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள்,

பயணத்தில் இருப்போர் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை.

வயதானவர்கள்,

குணமடையா நோய்வாய்ப்பட்டவர்கள் (வசதி உடையோர்)

நோன்புக்கு பதிலாக,

30 நாள் உணவுக்கு செலவான தொகையை தர்மமாக தரலாம்.

மற்றவர்கள் ரம்ஜான் மாதத்துக்கு பிறகு,

தங்கள் விட்ட நோன்பை, மற்ற நாட்களில் வைக்க வேண்டும்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன்

கடமை முடிந்துபோவதில்லை.

இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற

பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான்.

அதில் ஒன்றுதான் ‘ஜகாத்’.

இதுவும் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ள

ஐந்து விஷயங்களில் ஒன்று.

நம்மிடம் கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட

பணம், நகை ஆகியவற்றின் மீது

இரண்டரை சதவீத தொகையை எடுத்து

ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

இதுதான் ஜகாத்.

ஜகாத் தொகையை, முதலில் பெற தகுதி வாய்ந்தவர்கள்

வறுமையில் உள்ள உங்கள் உறவினர்கள்தான் என்கிறது இஸ்லாம்.

முதலில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

பிறகு, பிற ஏழைகளுக்கு கொடுக்கலாம்.

அடுத்தது பித்ரா.

ரம்ஜான் மாத கடைசி நாளில் பிறை பார்த்து

மறுநாள் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும்.

பிறை பார்த்ததில் இருந்து

ஈகைப்பெருநாளுக்கான தொழுகைக்கு செல்வதற்கு முன்பு

ஏழைக்கு பித்ரா கொடுத்துவிட வேண்டும்.

அரிசி அல்லது கோதுமையை

ஒன்றரை படி அளவுக்கு வழங்கலாம்.

அல்லது அதற்குரிய பணத்தை வழங்கலாம்.

ஒரு குடும்பத்தில் 6 பேர் இருக்கிறார்கள் என்றால்

6 பேருக்கும் கணக்கிட்டு பித்ரா தர வேண்டும்.

ஜகாத், பித்ரா தவிர சதகா எனப்படும் பிற தர்மங்களையும்

இம்மாதத்தில் அதிகம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இம்மாதத்தில் கடைசி பத்து நாள்களில்

ஒற்றைப்பட எண்களில் (21, 23, 25, 27, 29 இரவுகள்)

புனித இரவு ஒன்று இருக்கிறது.

அது லைலத்துல் கத்ர் இரவு.

அந்த இரவில் அதிகமாக இறைவனை வழிபடுங்கள்

என்கிறார் முகமது நபி.

ஆனால் அது எந்த இரவு என்பதை இஸ்லாம் கூறவில்லை.

அதனால் இந்த ஐந்தில் எந்த இரவாகவும் அது இருக்கலாம்

என¢ற படபடப்புடன்

இறைவனின் கருணையை பெற

ஐந்து இரவுகளும் விழித்திருந்து

பிரார்த்தனைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

இம்மாதத்தின் கடைசி பத்து நாட்களில்

முகமது நபி இதிகாப் இருப்பார்கள்.

இதிகாப் என்பது பத்து நாட்கள் மசூதியிலேயே தங்கியிருந்து

வெளியிடங்களுக்கு செல்லாமல் இறைவனை மட்டுமே நினைத்து,

பிரார்த்தனைகளில் ஈடுபடுவதாகும்.

பத்து நாட்கள் இதிகாப் இருக்க இயலாதவர்கள்,

5 அல்லது 3 நாட்கள்கூட இதிகாப் இருக்கலாம்.

இம்மாதம் முடிந்து,

ஷவ்வால் மாதத்தின் முதல் நாள்தான் ஈத் எனப்படும்

ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் சிறப்பு தொழுகை நடத்தி, தர்மம் செய்து,

உறவினர்களை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள்.

30 நாட்கள் நம்மை பக்குவப்படுத்திச் சென்ற நல்ல குணங்களை

அதன் பின்பும் நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.

இதுதான் ரம்ஜான் நமக்கு காட்டும் நல்வழி.

ரமலான் மாதத்தின் சிறப்பு:

மலான் மாதத்தில் நோன்புக்குரிய மாதம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே அதுபற்றி சொல்கிறார்கள்.

""ரமலான் மாதம் வந்துவிட்டால்

வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன.

நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன.

ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன.

சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன.

அதில் ஒன்று ரய்யான்.

அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர

வேறு யாரும் நுழைய மாட்டார்கள்.

யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும்,

நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ,

இன்னும் "லைலத்துல் கத்ர்' இரவிலும் நின்று வணங்குகிறாரோ

அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

ஆதமுடைய மக்களில் ஒவ்வொரு நல் அமலுக்கும் நோன்பைத் தவிர,

பத்திலிருந்து எழுநூறு நன்மைகள் வரை கொடுக்கப்படுகிறது.

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில்,

எவர் விழித்திருந்து தொழுகை புரிகின்றாரோ,

அவருடைய உள்ளம் கியாம நாளிலே விழிப்புடன் இருக்கும்,'' என்கிறார்கள்

அண்ணலார். ""நோன்பு எனக்குரியது.

அதற்கு நானே கூலி கொடுப்பேன்.

ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான்.

தன் இச்சைகளை அடக்கியிருந்தான்.

மேலும், நோன்பு திறக்கும் போதும்,

தன் இறைவனை சந்திக்கும் போதும்

நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,'' என்கிறான் அல்லாஹ்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மேலும் சொல்வதாவது:
எமது உம்மத்தவர்களில் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்கள்

பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.
ஒரு காடைக்குருவி போன்ற

சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக,

சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.
பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர்

அநியாயமும், இணை வைத்தலும்,

வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார்.

பள்ளிவாசலுக்கு செல்லும்போது வீண்பேச்சு வேண்டாம்

என்பது இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?:

ரம்ஜான் மாதம் இன்று பிறந்துள்ளது.

இந்த இனிய நாளில், ஒரு மனிதன்

தினமும் என்னென்ன சிந்திக்க வேண்டும்

என்பது பற்றிச் சொல்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

இதுவே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட

இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.

நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட,

செய்த பாவங்கள் பற்றிச் சிந்தியுங்கள்.

நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதைவிட,

வருகின்ற மரணத்தைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.
மற்றவர்களின் குற்றங்களை நோட்டம் இடுவதை விட,

உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.

உப்பை நீர் கரைப்பது போன்று,

நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும்.

கள்ளின் மண்டி தேனைக் கெடுத்துவிடுவது போன்று,

துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்துவிடும்.

உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது

இவ்வுலகத்தையும்,

இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்து கின்றாரோ

அவர் என்னைத் துன்புறுத்தியவராவார்.

அன்பு செலுத்தாதவன்

அன்பு செலுத்தப் படுவதற்கு அருகதையில்லாதவன்.
தர்மம் செய்ய இயலாதவன்

ஒரு நற்செயல் செய்வானாக அல்லது

ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக.

அதுவே அவனது ஈகை.
உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால்,

அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.
தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும்

என்று விரும்புவர்,

அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.
மனிதன் எதைச் செய்கிறானோ

அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதை தான்

இறைவன் கவனிக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக