செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

ஆண்டாள்.



கலியுகாப்தம், நள வருடம், ஆடி மாதம், எட்டாம் தேதி,
வளர்பிறை பஞ்சமி திதியில், செவ்வாய்க் கிழமையன்று, பூர நட்சத்திரத்தில்,

துலா லக்னத்தில் அவதரித்தாள் ஆண்டாள்.

தனது தந்தையாராகிய பெரியாழ்வாரையே குருவாகக்கொண்டு

கண்ணபிரானிடம் பக்தி செலுத்தி,

பரமனாகிய ஸ்ரீரங்கநாதனையே மணவாளனாக அடைந்தாள்


2011வருடம் ஆகஸ்ட்-2 (ஆடி-17) செவ்வாய்க்கிழமையன்று திருவாடிப்பூரம்.


இந்த தினத்தில்தான், ஸ்ரீவில்லிப் புத்தூரில்,

வடபெருங்கோயிலுடையான் கைங்கரியத்துக்காக

பெரியாழ்வார் உருவாக்கிய ,

துளசிச் செடியின் கீழ்... செந்தமிழை,

பைந்நாகப் பாம்பின் மீது பள்ளிகொண்டானை-

அந்தத் திருவரங்கனை ஆள...

ஸ்ரீபூமிப் பிராட்டியின் அம்சமாய் அவதரித்தாள் ஸ்ரீஆண்டாள்!

பொறுமையின் சின்னமான பூமாதேவி, ஆண்டாளாக

இந்த பூமியில் அவதரித்து, வாழ்ந்து காட்டினாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி தம்பதியர் வசித்து வந்தனர்.

இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி (ஆண்டாள்)

கோவிலில் வேலை செய்து வந்தனர்.

இவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக,

ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு, “விஷ்ணு சித்தர்என்று பெயரிட்டனர்.

இவரும் பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.

பெருமாளின் துணைவியான பூமாதேவி,

இவருக்கு வளர்ப்பு மகளாக ஐந்து வயது குழந்தையாக

துளசித்தோட்டம் ஒன்றில் அவதரித்தாள்.

அவளுக்கு, “கோதைஎன்று பெயர் சூட்டப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மூலவரான வடபத்ரசாயிக்கு,

விஷ்ணு சித்தர் தினமும் மாலை கட்டி சூட்டுவார்.

அந்தப் பெருமாள் மீது ஆண்டாள் காதல் கொண்டாள்.

தன்னை அவரது மனைவியாகவே கருதி,

அவருக்கு சூட்டும் மாலையை தன் கழுத்தில் போட்டு,

அழகு பார்த்து, அனுப்பி விடுவாள்.

இதையறியாத விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு அதை அணிவித்து வந்தார்.

ஒருநாள், கூந்தல் முடி ஒன்று மாலையில் இருக்கவே,

அதிர்ந்து போன ஆழ்வார், அது எவ்வாறு வந்தது

என நோட்டமிட ஆரம்பித்தார்.

தன் மகளே அதைச்சூட்டி அனுப்புகிறாள் என்பதை அறிந்து,

மகளைக் கடிந்து கொண்டார்.

மறுநாள் மாலையைக் கொண்டு சென்ற போது,

அதை ஏற்க பெருமாள் மறுத்துவிட்டார்.

கோதை சூடியதையே நான் சூடுவேன்.

மலரால் மட்டுமல்ல, மனதாலும் என்னை ஆண்டாள் உம் பெண்…’

என்று குரல் எழுந்தது.

அன்று முதல் கோதைக்கு, “ஆண்டாள்எனும் திருநாமம் ஏற்பட்டது.

பின்னர், பெருமாளுடன் அவள் கலந்தாள்.

உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும்

அதிகாலையில் நடைதிறப்பின் போது
ஆண்டாள் பாடிய திருப்பாவையும் பாடப்படுகிறது.

இதனால் ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர்,

உலகெங்கும் பெருமை பெற்றதாக உள்ளது.

இந்தக் கோவிலில் நடை திறக்கும் போது,

அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளைப் பார்ப்பதில்லை.

அவளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்கின்றனர்.

ஆண்டாள் கண்ணாடி பார்த்து, தன்னை அழகுபடுத்திக் கொள்வாளாம்.

அதனடிப்படையில், இவ்வாறு செய்வது ஐதீகம்.

அந்தக் கண்ணாடியை, “தட்டொளிஎன்பர்.

பின்பு சன்னதியில் தீபம் ஏற்றப்படும்.

இந்தச் சடங்கைச் செய்யும்போது திரை போடப்பட்டிருக்கும்.

திரையை விலக்கியதும், பக்தர்கள் கண்ணில் முதலில் ஆண்டாள் படுவாள்.

பின்பே அர்ச்சகர்கள் ஆண்டாளைப் பார்ப்பர்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள்,
அழகான புன்முறுவலோடு காட்சியளிக்கிறாள்.

சாயக் கொண்டை, மூன்று வளைவுகளோடு கூடிய திருமேனி,

அழகிய கிளி என்று அழகிய மணவாளனான ஸ்ரீரங்கமன்னாருடன் நின்ற

கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும்

ஆண்டாளின் அழகைக்காணக் கண் கோடி வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாளுக்காக ஸ்ரீரங்கநாதன்,

ரங்கமன்னாராக ராஜகோபாலனாக கண்ணனாக எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீவைகானஸ ஆகம விதியின்படி ராஜகோபாலனுக்கு வலதுபுறம்

ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளியுள்ளதால் மஹாலட்சுமியின் அவதாரமான

ஸ்ரீருக்மணி பிராட்டியின் அம்சமும் உடையவளாகிறாள்.

கருணையே வடிவமான மஹாலட்சுமியின் அம்சத்துடனும்,

பொறுமையே வடிவமான பூமிப் பிராட்டியின் அம்சத்துடனும்,

தன்னையே கோபிகையாக ராதையாக எண்ணி பக்தி செய்ததால்

அன்பே வடிவமான, நீளாதேவியான ராதையின் அம்சத்துடனும்

ஸ்ரீஆண்டாள் இவ்வூரில் எழுந்தருளியுள்ளது மிகவும் சிறப்பானது.


ஸ்ரீஆண்டாளின் அவதார உற்ஸவமான ஆடிப்பூரப் பெருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டும் கடந்த 25ஆம் தேதி [25-07-2011]


(ஆடி மாதம் 9ஆம் தேதி) கொடியேற்றம் தொடங்கியது.

02.08.2011ஆம் தேதி வரை மிகவும் சிறப்பாகதநடக்கிறது.

ஆக., 2 முடிய 10 நாள் நடக்கும்

. இதையொட்டி, அங்குள்ள மணி மண்டபத்தில் அம்பாள், சுவாமி எழுந்தருளினர்.

கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து

வரப்பட்டு,கோபூஜை நடக்க , கொடியேற்றம் நடந்தது.

கொடியை கோவிந்தராஜ பட்டர் ஏற்றினார்.

இரவு பதினாறு வண்டி சப்பரத்தில் அம்பாள், சுவாமி வீதி உலா நடந்தது.

குறிப்பாக ஐந்தாம் திருநாள் காலை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாஸôசனமும்,

இரவு ஐந்து மணிக்கு கருட சேவையும்,

ஏழாம் திருநாளன்று மாலை ஸ்ரீஆண்டாளின் திருமடியிலே

ஸ்ரீரங்கமன்னார் சயனித்திருக்கும் திருக்கோலமும்,

ஒன்பதாம் நாள் ஸ்ரீ ஆண்டாளின் பிறந்த தினமான

ஆடிப்பூரத்திலே ஸ்ரீஆண்டாளும் ரங்கமன்னாரும் திருத்தேரில் பவனி வரும்

உற்ஸவமும் மிகவும் சிறப்பானவை.

ஆடிப்பூரத்தன்று, அவள் பெருமாளுடன் தேரில் பவனி வருவாள்.

தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இதுவும் ஓன்று.

ஜூலை 29-ம் தேதி காலை 9 மணிக்கு
5 – ம் திருநாள் அன்று

காலையில் பெரியாழ்வார் மங்கலாசாசனம்
என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அப்போது திருநாள் பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருளி

பெரியபெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையான்,

திருத்தங்கல் அப்பன், ஆண்டாள்- ரெங்கமன்னார் திவ்ய தம்பதிகள்

ஆகியோருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்றைய தினம் இரவு விடிய விடிய கருடசேவை நடைபெறும்.

இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவை நடைபெறும்.

ஆண்டாள் பெரிய அன்ன வாகனம்,
ரெங்கமன்னார், பெரியபெருமாள், சுந்தரராஜன், திருத்தங்கல் அப்பன்

ஆகியோர் பெரிய திருவடி (கருட) வாகனங்களிலும்,

பெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும்

எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்

இதனைக் காண ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள்

அனைவரும் கோவிலில் குவிந்திருப்பார்கள்.

மக்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி மகிழ்ச்சியுடன்

ஆண்டாள், ரங்கமன்னாரை தரிசனம் செய்வர்.
7-ம் திருநாளான ஜூலை 31-ம் தேதி இரவு 8 மணிக்கு

கிருஷ்ணன்கோவிலில் ஆண்டாள் திருமடியில்

ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம் நடைபெறுகிறது.

9-ம் திருநாளான ஆக. 2-ம் தேதி அதிகாலை
ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும்
மேலும் மூலவருக்கு சிறப்பு புஷ்பங்கி சேவை நடைபெறும்.
காலை தனித் தோளுக்கினியான்களில்
அதிகாலை 5 மணிக்கு திருத்தேர் எழுந்தருளல் நடைபெறும்.
காலை 8.05 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

ஆடிப்பூரம் தினத்தன்று ஊர் கூடி தேர் இழுக்க
அதில் ஆண்டாள் ரங்கமன்னார் சமேதராக
நான்கு மாட வீதிகளிலும் வலம் வரும் தேரினை
பல்லாயிரக்கணக்கனோர் கண்டு தரிசிப்பார்கள்.

இந்த ஆடிப் பூர தினத்தில் தான் அம்பிகைக்கு
வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து,
நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும்,
வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் -
அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது,
ஆனந்தத்தை வழங்கக்கூடியது,
வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.



நினைத்த காரியம் நினைத்ததுமே நிறைவேற,

ஸ்ரீஆண்டாளை வழிபடும்படி அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள்.

காரணம்
'அரங்கனையே மணப்பேன்’ எனச் சங்கல்பித்ததுடன்,

தான் நினைத்ததை நிறை வேற்றியும் காட்டியவள் .

அவளின் திருப்பாதம் பணிந்து வணங்க,

நாம் நினைத்த காரியங்களையும்,

தடங்கலின்றி நிறைவேற்றித் தருவாளாம் .



திருமாலிருஞ்சோலை- அழகர் அருள் பாலிக்கும்,

பாண்டி நாட்டு திவ்விய தேசம்.

எம்பெருமான் விண்ணளந்து நின்றபோது,

அவரின் திருப்பாதத்தை பிரம்மன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய,

ஆகாச கங்கையாய் பிரவாகித்த அந்த நீர்,

எம்பெருமானின் தண்டைச் சலங்கையில் பட்டுத்தெறித்து

பூமியில் விழ, அதுவே நூபுர கங்கை (சிலம்பாறு)

தீர்த்தமாய்த் திகழும் புண்ணிய க்ஷேத்திரம் இது.


ஸ்ரீசுந்தரவல்லித் தாயாருடன் அருளும்

இந்தத் தலத்தின் நாயகன் அழகரைப் போற்றும் ஸ்ரீஆண்டாள்...


'தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்வள்ளல்

மாலிருஞ்சோலை மணாளனார்பள்ளி கொள்ளு மிடத்தடி

கொட்டிடகொள்ளுமாகில்நீ கூடிடு கூடலே!'


- எனப் பாடுகிறாள் (நாச்சியார் திருமொழி: 4-1).

அதாவது... 'நித்யசூரிகளால் அனுதினமும்

கரம்கூப்பி வணங்கப்பெறும் திருமால், வள்ளல்பிரானாக

திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கிறான்.

உள்ளம் கொள்ளை கொள்ளும் அந்தக் கள்வன்

பள்ளி கொண்டிருக்கும் திருவரங் கத்தில்,

அவனது திருவடிகளை நான் பிடித்துவிடும்படியாக அருள மாட்டானா?

அப்படி அவன் அருள்வதற்குத் திருவுளம் பற்றுவானாகில்,

கூடலே நீ கூடிடுக’ என மேகத்தை வேண்டுகிறாள் கோதை நாச்சியார்.


'மாலவனையன்றி மனிதர்கள் எவரையும் மணாளனாக ஏற்கமாட்டேன்’

எனச் சூளுரைத்துக் கொண்டவள்,

வாரணம் ஆயிரம் சூழ வர நாரணன் நம்பியை

மணப்பதுபோல் கனவும் கண்டாள்.

அந்தக் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே

அவளின் பிரார்த்தனையாகவும் அமைந்தது.

இறைவனிடம் ஆண்டாள் பிரார்த் தனை செய்வதைப் பாருங்களேன்...


;நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு,

நான்நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி

வைத்தேன்நூறு தடாநிறைந்த அக்கார வடிசில்

சொன்னேன்ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!'

- தனது வேண்டுதல் நிறைவேற,

அழகருக்கு நூறு தடா (ஓர் அளவு) வெண்ணெயும்,

நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாகப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.


பிரார்த்தனை பழுதின்றி நிறைவேறும்.

ஆண்டாளும் அரங்கனை அடைந்தாள்.


பிற்காலத்தில் உடையவர் ஸ்ரீராமானுஜர் கள்ளழகர் கோயிலுக்கு வந்து,

இறைவனுக்கு நூறு தடா வெண்ணெயும்,

நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பித்து வழிபட்டு,

ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றினாராம்.

பின்னர், அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றபோது,

அங்கே ஸ்ரீஆண்டாள் தன் அர்ச்சைக் கலைத்து

(விக்கிரகத் திருமேனியை அர்ச்சை- அர்ச்சாவதாரம் என்பர்),

'வாரும் எம் அண்ணாவே’ என ஸ்ரீராமானுஜரை வரவேற்றா ளாம்.

இதன் அடிப்படையில், ஆண்டாளின் வாழித் திருநாமத்தில்,

'பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னாளாள்’ எனப் போற்றப்படுகிறாள்

இன்றும் ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் திருக்கோயிலில்

மார்கழி உற்ஸவத்தில் ஒருநாள், 'மாலே மணிவண்ணா...’ பாடலின்

போது, ஆண்டாளுக்கு விருந்துபசாரம் நிகழ்த்துகிறார் ஸ்ரீராமானுஜர்.

மிக அற்புதமான வைபவம் இது!


ஆண்டாளைப் போற்றும் அருளா ளர்கள்,

'அவள் திருவேங்கடமுடையானின் பெருமையை கேட்டபோது

முக மலர்ச்சியும்,

திருமாலிருஞ்சோலை இறைவனின் வடிவழகை அறிந்தபோது

அக மகிழ்ச்சியும்,

திருவரங்கனின் பெருமையைக் கேட்டு

அளவற்ற இன்பமும் அடைந்தாள்;

அரங்கனையே மணாளனாக வரித்துக் கொண்டாள்’ என்று சிலாகிப்பார்கள்.

இன்றைக்கும் திருப்பதி புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின்போது,

ஸ்ரீவில்லிப் புத்தூர் ஆண்டாளின் மாலை திருப்பதிக்குச் செல்லும்.

ஆண்டாள் மாலையை திருவேங்கடவன் ஏற்றுக்கொள்ள.

அவரின் அருட்பிரசாதமாக புடவை ஒன்று

ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதை ஆண்டாளின் திருக்கரத்தில் சமர்ப்பித்து ஆராதனைகள் செய்வர்.

அதேபோல் சித்திரைத் திருவிழாவையட்டி,

திருமாலிருஞ்சோலை அழகருக்கும் ஆண்டாள் மாலை

கொண்டுசெல்லப்படுகிறது.
வடபெருங் கோயிலில்,
அதிகாலை விஸ்வரூப தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு,

ஆண்டாள் மாலையுடன் காட்சி தருவார் ஸ்ரீவடபத்ரசாயி.

ஆமாம்... அனுதினமும் இரவு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை,

இந்த இறைவனுக்குச் சார்த்தப்படுமாம்.

அந்த மாலையைக் களையாமல்,

மறுநாள் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி தருவார் பெருமாள்;



ஆண்டாள் கிளி----



கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவள்ளிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;
இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக