புதன், நவம்பர் 23, 2011

துலுக்க நாச்சியார்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளைப் போலவே

அரங்கனிடம் தெய்வீக   அன்பு கொண்டவள்

துலுக்க நாச்சியார் எனப்படும் முகலாய இளவரசி சுரதாணி.

சிலை வடிவிலிருந்த அரங்கனை பக்தியால் பாராட்டி,

பிரேமையால் சீராட்டி, இறுதியில்

'அரங்கன் இன்றி தான் இல்லை' என

அரங்கனோடு ஒன்றியவள் துலுக்க நாச்சியார்.

முகலாயத் தளபதி மாலிக்கபூர் [1311 ] தெற்கில் படை எடுத்துச் சென்று,

காஞ்சிபுரம், திருவரங்கம், கண்ணனூர் போன்ற

 பல நகரங்களை வென்று, சூறையாடினார்  .

அதனால் மகிழ்ந்த சுல்தான் அலாவுதீன்,

 மாலிகபூர், பிற தானைத் தலைவர்கள், குறுநில மன்னர்களுக்கு

நிறைய திரவியங்கள் கொடுத்து கௌரவித்தார்.

அப்துல்லா உசேன் கசன்பி என்ற குறுநில மன்னருக்கு

திருவரங்கத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட 

அரங்கன் திருவுருவ சிலை கொடுக்கப் பட்டது.


கசன்பி பாதுஷாவின் மகள் சுரதாணி ,


அழகும், அறிவும் நிறைந்தவள்.


 சுரதாணி, அரங்கன் விக்ரகம் தனக்கு   வேண்டும்


என்று எடுத்துக் கொண்டாள். 

அரங்கனைப் பார்த்த கணத்திலேயே

அவள் வாழ்க்கை மாறியது.

ஒரு கணமும் பிரியாது

அந்தபுரத்தில் இரவு, பகல் எந்த நேரமும்

அரங்கனுடன் ஆடிப் பாடி மகிழ்ந்தாள்.

ஸ்ரீ ரங்கத்தில் அரங்கன் இல்லாததால்

திருவிழாக்கள் ஏதும் நடை பெற வில்லை.

உத்தமர் கோவில் எனும் ஊரில்

எம்பெருமான் அடியாள் ஒருவள் இருந்தாள். 

அரங்கனைப் பாராமல் தினமும்

உணவு சாப்பிட மாட்டேன் எனும் விரதம் பூண்டவள்.

மாலிக்கபூர் படைகளைப் பின்தொடர்ந்து சென்றவள்

விக்ரகம் யாரிடம் போய்ச் சேர்ந்தது என்பதை அறிந்தாள்.

கோவில் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறினாள்.

எப்படி மீட்பது என ஆலோசித்தனர்.

கசன்பி பாதுஷாவிற்கு ஆடல், பாடல்

என்றால் மிகவும் விருப்பம் என்று அறிந்தனர்.

அதில் சிறந்தவர்களில் 60 பேர்

பாதுஷாவின் மாளிகைக்குச் சென்றனர்.

புகழ் பெற்ற 'ஜக்கிந்தி' நடனம் ஆடினார்கள்.

மனம் மகிழ்ந்த பாதுஷா நிறைய பரிசுகள் வழங்கினார்.

அதை வேண்டாம் என்று கூறிய நடன குழுவினர்

'எங்கள் அரங்கன் சிலையை பரிசாகத் தாருங்கள்'

என்று கேட்டார்கள்.

வெறும் சிலை மட்டும் கேட்கிறார்களே என வியந்த

பாதுஷா, அந்தபுரத்திலிருந்து எடுத்துக்கொள்ள கூறினார்.

அந்தபுரத்தில் அரங்கன் முன் , சுரதாணி தன்னை

மறந்த நிலையில் இருப்பதை பார்த்தார்கள்.

அவள் விக்ரகத்தை தர மாட்டாள் என்பதை உணர்ந்தார்கள்.

அவளுடன் பேச்சுக் கொடுத்து , பிரசாதத்தில் மயக்க

மருந்து கலந்து கொடுத்து விட்டார்கள்.

அவள் மயங்கியதும், நாட்டியக்காரிகள்

அரங்கன் சிலையைத் தூக்கி கொண்டு

திருவரங்கம் நோக்கி விரைவாக சென்றார்கள்.

மயக்கம் தெளிந்து எழுந்த சுரதாணி

அரங்கனைக் காணாமல் அழுது புலம்பினாள்.

அவள் நிலை கண்ட பாதுஷா,

அரங்கனை மீட்டு வருமாறு வீரர்களை அனுப்பினார்.

அரங்கனைக் காண வேண்டும் எனும் ஆசையில்

சுரதாணியும் படைகளோடு சென்றாள்.

படைகள் வருவதை அறிந்த நாட்டியக் குழு

திருவரங்கம் செல்லாமல்

ஒன்றாக சென்றால் அகப்பட்டு கொள்வோம் என

மூவர் மட்டும் பிரிந்து

அரங்கனை எடுத்துக் கொண்டு

திருமலை சென்றார்கள்.

அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில்

இலை , தழைகளில்  மறைத்து வைத்தார்கள்.

வீரர்களுடன் திருவரங்கம் வந்த சுரதாணி

அரங்கனைக் காணாமல், மிகுந்த துயரம் அடைந்தாள்.

துக்கம் தாங்காமல், கோவிலின்   முன்

மயங்கி விழுந்து உயிர் துறந்தாள்.

அப்போது அங்கு அரங்கனின்

விஸ்வரூபம் தோன்றியது.

சுரதாணியின்   உடலில் இருந்து ஒரு ஒளி

கிளம்பி அரங்கனின் திருமேனியில் ஐக்கியம் அடைந்தது.


பல்லாண்டு காலம் திருமலையில் மறைந்து

இருந்த அரங்கன், ஒரு சோழ மன்னனால்

திருவரங்கம் கொண்டு வரப்பட்டு

மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

சோழமன்னனின் கனவில் தோன்றி

சுரதாணிக்கு ஒரு சன்னிதி அமைக்கும் படி

அரங்கன் கூறினான்.

அதன்படி சோழ மன்னன்

அரங்கன் கருவறைக்கு வடகிழக்கு மூலையில்

ஒரு சன்னதி அமைத்து,

அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவை

தீட்டச் செய்தான்.

இன்றும் கோவில் இரெண்டாம் பிரகார

வடகீழ் மூலையில்

சித்திர வடிவில் சுரதாணி காட்சி அளிக்கிறார்.

அன்று முதல் பெருமாளுக்கும், சுரதாணிக்கும்

முகமதியர் வழக்கப்படி காலையில்

ரொட்டி, வெண்ணை, காய்ச்சாத    பால் அமுது

நிவேதனம் செய்யப்படுகிறது.

திருமஞ்சன காலங்களில் பெருமாளுக்கு

லுங்கி அணிவிக்கப்படுகிறது


வைகுண்ட ஏகாதசி திருவிழாவில்  

பகல் பத்தின் போது

சுரதாணியின் சன்னதிக்கு முன்

அரங்கன் எழுந்தருளும் போது

சுரதாணிக்கு நன்றாக காட்சி கொடுக்கும் நோக்கில்


திருப்பாதம் தாங்கிகள் 

அரங்கன் வீற்றுள்ள தோளுக்கினியானை

உயரத் தூக்கிப் பிடித்து


படியேற்ற சேவை சாதித்து

அங்குள்ள 'அர்ஜுனமண்டபத்தில்'

அரங்கனை எழுந்தருளச் செய்கிறார்கள்.

துலுக்க நாச்சியார் மண்டபத்தில்

முகமதியர் வழக்கப்படி அகில், சந்தன பொடி தூவி

தூப புகை போடப்படுகிறது.

'இறைவன் முன் அனைவரும் சமம்;

ஜாதி, மத, இன, மொழிக்கு இங்கு இடமில்லை;

உண்மையான பக்தி ஒன்றே

உயர்வுக்கும், உய்விக்கும்   வழி'

என்பதை 'துலுக்க நாச்சியார்' மூலம்

நமக்கு விளக்குகிறார் பெருமாள்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக