திங்கள், மே 16, 2011

ராகு பெயர்ச்சி விழா



திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் 16ந்தேதி ராகுபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ராகு தலம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, சிவபெருமானை பூசித்த நாகநாதர் கோவில் உள்ளது. நாக அரசராகிய ராகு பூசித்த காரணத்தால், இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோவிலில் நாகநாதசுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர்.





கோவிலின் வெளி சுற்று பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார். இத்தலத்தில் உள்ள ராகுவை வழிபடுவோருக்கு காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், புத்திரதோஷம், களத்திரதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும் இக்கோவிலில் உள்ள ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும் போது, அவருடைய மேனியில் ஊற்றப்படும் பால் நீல நிறமாக மாறும் என்பது தனிச்சிறப்பாகும்.

ராகு பெயர்ச்சி விழா

ராகுதோஷம் நீக்கக்கூடிய ராகு தலமாக விளங்கும் இக்கோவிலில் 16ந் தேதி (திங்கட்கிழமை) ராகு பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது. இதையட்டி, ராகு பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் நேரமான காலை 9.48 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன.

ராகு பெயர்ச்சி விழாவையட்டி, நாகநாதர் கோவிலில் இரண்டு கட்டமாக லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல்கால யாகபூஜை தொடங்கியது. ஞாயிறு காலை 2ம் காலம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது . விழா நடைபெறும் 16ந் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழாவினையட்டி சிறப்பு ஹோமங்கள், தயிர் பள்ளயம், சந்தனகாப்பு அலங்காரம், அன்னதானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

தோஷ பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் ரூ.150ஐ நேரிலோ, வரைவோலை மூலமாகவோ கோவில் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அனுப்புபவர்களுக்கு தோஷ பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

. விருச்சிகம், தனுசு, கும்பம், ரிஷபம், துலாம், மீனம், சிம்மம் ஆகிய ராசி உடையவர்கள் இத்தலத்தில் ராகு பெயர்ச்சி தினத்தன்று பரிகாரம் செய்து கொள்வது நல்ல பலன் அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக