வெள்ளி, ஜனவரி 14, 2011

பொங்கல்-2 ம் நாள்

இரெண்டாவது நாள், அதாவது தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள்.
பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

' தை பிறந்தால் வழி பிறக்கும்'என்றொரு சொல்வழக்கு உண்டு.
தென் திசையில் பயணிக்கும் சூரியன், வடதிசையில் தன் தேரின் திசையை மாற்றும் நாள் ஆரம்பமாவது தை மாதத்தில்தான். ஆறுமாத காலம் ஒரு பகுதிக்கு மட்டுமே கிடைத்த சூரியனின் முழு கிரணப் பலன்கள் தைமாதம் முதல் அடுத்த பகுதிக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் என்பதால் தைபிறந்தால் வழிபிறக்கும் என்றார்கள் என்ற கருத்தும் சொல்லப் படுகிறது.
தை மாதத்துக்கு முன் அறுவடைக்கு காத்திருக்கும் வயல் வரப்புகளில் நடந்து செல்ல முடியாது. தையில் அறுவடை முடிந்து விடுவதால் அங்கு நடந்து செல்ல வழி பிறக்கும் என்பதாகவும் இருக்கலாம்.

தைக்கு முன் வரும் மார்கழி மாதத்தில் தெருவை அடைத்து கோலம் போடுவார்கள். அதனால் நடந்து செல்ல சிரமப் படுவார்கள். தை பிறந்ததும் கோலம் போட்டாலும் மார்கழி அளவு போட மாட்டார்கள். அதனால் வழி பிறக்கும் என்றும் கூறுவார்கள்.
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்து, அதன் பயனாய் கையில் பணம் இருப்பதால் சுப காரியங்கள் செய்ய விளைவார்கள். அதனால்
தை பிறந்தால் வழி பிறக்கும் எனவும் கொள்ளலாம்.
தை திருநாளுக்கு முன்னமே வீடுகளுக்கு வெள்ளை அல்லது சுண்ணாம்பு அடிப்பார்கள். .
உண்மையில் இது ஒரு பெரும் சிரமமான செயலாகும். அனைத்துப் பொருட்களையும் பரண் போன்ற இடங்களில் இருந்து இறக்கி , சுத்தம் செய்து, அடித்து முடிந்ததும் மறுபடியும் பரண் மேல் ஏற்ற வேண்டும்.
தரையில் சிந்திய சுண்ணாம்பை துடைத்து நீக்க வேண்டும்.
பொதுவாக சிறிய வீடுகள் என்றால் பெண்களே செய்து விடுவார்கள்.
சுண்ணாம்பு கற்களை பெரிய தொட்டிகளில் கொட்டி, அதில் தேவையான அளவு நீர் ஊற்றி வைப்பார்கள். அது கரைந்து கெட்டி குழம்பு போல் வருவதே சரியான பதம். சுண்ணாம்பு கால்சியம் நிறைந்தது என்பதால் அதில் நீர் ஊற்றியதும் ஒரு புகை போல் வரும்.தொட்டாலே சுடும். பனை மட்டையில்நீண்ட பிரஷ் போல் செய்து அதனால்தான் சுவருகளுக்கு வெள்ளை அடிப்பார்கள்.
தை மாதத்தில் எல்ல வீடுகளும் வெள்ளை அடிக்கப்பட்டு வெள்ளை வெளேரென்று பார்க்கவே அழகாக இருக்கும்.
சுண்ணாம்பு அடிப்பதால் கரையான் அரிப்பது தடுக்கப் படுகிறது.
வீடும் சுத்தம் செய்யப்படுகிறது.
எத்துணை அறிவுடன் வாழ்வின் இயல்போடு பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக