வெள்ளி, ஜனவரி 14, 2011

பொங்கல் 2 ம் நாள்


பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு வாசலிலோ, முற்றத்திலோ சுத்தம் செய்து நீரோ, சாணமோ தெளித்து மாக் கோலம் இட்டு அதன் நடுவில்மூன்று கற்களை முக்கோண வடிவில் வைப்பார். அதுவே அடுப்பு. இதற்கு ,காவிப்பட்டை ,சுண்ணாம்புபட்டை அடிக்க வேண்டும்.
அடுப்புக்குப் பக்கத்துல பசுமாட்டு சாணில அருகம்புல்லு சொருகி வைச்சு, எருக்கம்பூ, தும்பப்பூ போட்டு புள்ளையார் பண்ணி தீபம் காட்டிட்டுத்தான் பொங்கப்பானை வைப்பாங்க. பானை கழுத்துல மஞ்ச கொத்து இஞ்சிக்கொத்து கட்டியிருக்கும்.
மூன்றுபானை வைப்பதும் வழக்கம்.
ஒன்று பால் பொங்கலுக்கு; மற்றது சர்க்கரைப் பொங்கலுக்கு.
மூன்றாவது வெறும் பொங்கல்.
புதிதாய் வாங்கிய மண் பானையில் பொங்கல் வைப்பது கிராமங்களில் வழக்கம். வெண்கலப் பானை, பித்தளைப் பானைகளிலும் வைக்கலாம்.
சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வைப்பார்கள். பனை அல்லது தென்னை ஓலை கொண்டு அடுப்பு எரிப்பார்கள். சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம்.
ஒரு கோலமிட்ட பலகை அல்லது வாழை இலை மீது திருவிளக்கை வைக்கவும். பூ சுற்றவும். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும்.
விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து அதில் பச்சரிசி காய்கறிவகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும்.
மஞ்சள் பூசணி கட்டாயம் இருக்க வேண்டும்.
மார்கழி மாதத்தில் சேகரித்து வைத்துள்ள காய்ந்த சாணப் பிள்ளையாரையும் ஒரு பக்கம் வைக்க வேண்டும். [ இலையில் அல்ல ]
இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வைக்க வேண்டும்.
[ நல்ல தடியான கரும்பு, கணு தள்ளித்தள்ளிஇருப்பது போல் பாத்து வாங்கறது முக்கியம்.]
பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பச்சரிசி களைந்த நீரை பானையில் கொஞ்சம் ஊற்ற வேண்டும்.
பின் தேவையான அளவு நீரோ, அல்லது நீரும் பாலும் கலந்தோ ஊற்றவும்.
பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர்.
அந்த கூவலில் இருக்கும் மகிழ்ச்சி இன்றைய கால கட்டத்தில் கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்ச்சியாகி விட்டது. காலப் போக்கில் அழிந்து விடுமோ என்ற அச்சம் கூட உண்டாகிறது.
பொங்கல் தயார் ஆனவுடன் பானைகளை இறக்கி இலையின் முன் வைக்க வேண்டும். பின் பூஜை செய்ய வேண்டும்.
சில பகுதிகளில் மதிய வேளையில், , திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைத்து ,முன்னோருக்கு படைத்து பூஜை செய்வார்கள்.
சிறப்பான அறுவடைக்கு அடையாளமாக, அரிசி, பருப்பு;
மகிழ்ச்சிக்கு அடையாளமான வெல்லம்;
ஆரோக்யமாக இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கும்விதமாக கரும்பு; மங்களங்கள் நிறைந்திருக்கின்றன எனச் சொல்லும்விதமாக மஞ்சள் என்று எல்லாம் இடம்பிடித்து பொங்கலோ பொங்கல் எனக் குரல் எழும்பும் இடத்தில், மகிழ்ச்சியும் மங்களமும் பொங்குவதாகத்தானே அர்த்தம்.
பொங்கல் என்பது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், அக்கம் பக்கத்தார் என எல்லோரும் ஒன்றாய்க் கூடி, இனிப்பான பொங்கலை பகிர்ந்து உண்டு மனமகிழ்வோடு இருக்கும் ஒரு விழா.
அதன் தன்மை புரிந்து, பாரம்பரியம் கெடாமல் அடுத்த சந்ததியர்க்கு எடுத்துச் செல்ல நம்மால் ஆனா முயற்சிகளை செய்வது நம் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக