வியாழன், ஜனவரி 06, 2011

திருப்பாவை

திருப்பாவை - 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்-
வருணதேவனே! சிறுதும் ஒலிக்காமல்
கடலிலபுகுந்து நீரைமொண்டு
இடி இடித்து ஆகாயத்தில் ஏறி
திருமாலின் திருமேனிபோல் கறுப்பாகி
அழகான தோள் கொண்ட பத்பநாபன் கையில் உள்ள
சக்கரம் போல் மின்னலடித்து,
அவனுடைய சங்கம் போல் அதிர்ந்து முழங்க
உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல்
மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ,
நாங்களும் மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம்.


திருப்பாவை - 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
பொருள்-
மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை
தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை
இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து
யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை
பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி வாயாரப் பாடி,
நெஞ்சார தியானிப்போம்.
முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும்
அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக
உருத் தெரியாமல் அழிந்து போகும்;
ஆகவே அவன் நாமங்களைச் சொல்.



திருப்பாவை - 6
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்-
பறவைகள் கூவிவிட்டன.
கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா?
இளம் பெண்ணே! எழுந்திரு
பூதனா என்றும் அரக்கியின் நச்சுமுலையை உறிஞ்சி
வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது
கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான்
பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு,
உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை
முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி
எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.

திருப்பாவை - 7
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
பொருள்-
கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடிகூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே!
காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க
வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்
கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ!பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாடகேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ?
பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக.

திருப்பாவை - 8
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
பொருள்-
கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது
எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின
கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம்
குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்
குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்
மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன்,
அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து
ஐயோ என்று இரங்கி வருவான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக