செவ்வாய், ஜனவரி 04, 2011

திருவெம்பாவை பாடல்கள்


மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
பாடல் 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதேவளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார்அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதேஎம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.

பாடல் 2
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும்வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசிஇவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும்இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும்மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க் அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
பொருள்: ""அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து, ""தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த தோழியர்,""கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக என்றனர்.
விளக்கம்: தேவலோகத்தில் சிவபவனி கிடையாது. அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம் முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா. சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில் இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல் 3
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச ÷வண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், ""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.
விளக்கம்: ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது...இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்பதே இந்தப் பாடல் உணர்த்தும் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக