ஞாயிறு, ஜனவரி 09, 2011

பொங்கல் நினைவுகள்

2010 முடிந்து 2011 பிறந்து விட்டது. ??????

உலக வழக்கப்படி புது வருடம் துவங்கி விட்டது.

ஆனால் கலைஞரின் புத்தாண்டு துவங்க வில்லை.

வரும்தை திங்களில் துவங்கும்

அந்த புத்தாண்டை நினைக்கும் போதே

அது தொடர்புடைய பல விசியங்கள் ,

இனிய நினைவுகள் மனதுள் ஓடுகிறது.

உண்மையில் மார்கழி மாதத்திலேயே

தை திங்களை வரவேற்கும் காரியங்கள் ஆரம்பித்து விடும்.

மார்கழி என்றாலே வண்ண வண்ண கோலங்கள்

அதன் நடுவே வைக்கப் படும் சாணிப் பிள்ளையார் ----

இவைதான் நினைவு அடுக்குகளில் பதிவு பெற்று இருக்கிறது.

இன்னும் கிராமங்களில் , சில நகரங்களில் இது தொடர்கிறது.

சென்னை போன்ற பெரு நகரங்களில்

 பலருக்கு என்னவென்றே தெரியாது என்று நினைக்கிறேன்.

காலை பொழுது விடியும் முன்னே எழுந்து

வாசல் பெருக்கி, சாணம் தெளித்து

கோலம் இடுவார்கள்.

இன்று போல் கலர், கலராய்

 ரங்கோலிக் கோலங்கள் கிடையாது.

புள்ளிகள் வைத்து அரிசி மாவு அல்லது கோல மாவில்

கோலம் போடுவார்கள்.

அதை சுற்றி காவி பூசுவார்கள்.

அதன் அழகே தனிதான். சொன்னால் புரியாது.

பார்த்தால் மட்டுமே புரியும்.

பசுஞ் சாணத்தை ஒற்றைப்படை வருமாறு

பிள்ளையார் வடிவில் [ மஞ்சள் பிள்ளையார் போல் ] பிடித்து,

கோலத்தின் மேல் ஆங்காங்கே வைக்க வேண்டும்.

அதன் உச்சியில் ஸ்பீக்கர் வடிவில் இருக்கும்

மஞ்சள் நிற பூசணிப் பூவை செருக வேண்டும்.

பீர்க்கம் பூவும் வைக்கலாம்.

வைத்தவுடன் முடிந்து விடுமா?

இனித்தான் கதையே இருக்கு.

நம் வேலை முடிந்தவுடன்

தெருவில் இருக்கும் எல்லா வீட்டு வாசலுக்கும்

ஒரு ஜாலி விசிட்.

யார் யார், என்ன கோலம் போட்டு இருக்கிறார்கள்;

எது பெருசு ;எது அழகு என்று ஒப்பிடுதல்;

அடுத்தது அம்மாவிடம் போய்

நம் வீட்டு கோலத்தின் குறை,

நிறைகளை பற்றிய ஆலோசனை.

ஆனால் காலை வேளையில்

இந்தகூட்டம் அதிக நேரம் நடக்க முடியாது.

 so, மாலை தொடரும்.

பள்ளி விட்டு வந்ததும் நேராக அம்மா;

நாளைக்கு பெரிய கோலமாக போட வேண்டும்;

அவங்களை விட நம்ம வீட்டில் பெரிசாக இருக்க வேண்டும் ;

அன்னமா, மானா, மயிலா, யானையா, தேரா;

என்ன போட வேண்டும் என ஒரு deep discussion.

இந்த நினைவுடன் தூங்க செல்வோம்.

அதிகாலையில் எழுந்து மறுபடியும் இதே கதை;

எவ்வளவு இனிமையான நாட்கள்;

இப்போது நினைத்தாலும் சிறுபிள்ளையாகிவிடுகிறேன்.

நகர வாழ்க்கை, வயது, இடப்பற்றாக் குறை;

கோலம் போடவே இடமில்லை;

சாணிப் பிளையாரை மனக் கண்ணில் பார்க்க வேண்டியது தான்.

மதியம் சாணிப்பிள்ளயாரை வட்டமாக தட்டி ,

பூவின் காம்பைக் கிள்ளி விரித்து

அதன் மேல் ஒட்டி வைத்து விடுவோம்.

மாதம் முழுவதும் இது போல்

பிள்ளையாரை சேகரித்து வைக்க வேண்டும்.

பொங்கல் வைக்கும் போது

இந்த பிள்ளையாரையும் படைக்க வேண்டும்.

மாட்டுப் பொங்கல் முடிந்து கரினாளன்று

 எல்லா வீட்டு சிறு பெண்களும் ஒன்றாகக் கூடுவார்கள்.

அன்று செய்யப்படும் அலங்காரங்கள்

மிக அழகாக இருக்கும்.

பட்டுப் பாவாடை கட்டி, ஜடை பின்னி,

பூ வைத்து, கண்ணுக்கு மையிட்டு , பவுடர் போட்டு

பொட்டு வைத்து ஒரே கோலோகலம்தான்.

நீள ஜடைக்காக சவுரி வைப்பதும் உண்டு.

அதிகமாக செவந்திப் பூவால்

ஜடை அலங்காரம் செய்யப்படும்.

பின்னலின் முடிவில் குஞ்சலம் இருக்கும்.

சேகரித்து வைத்த பிள்ளையார்களை [ இப்ப அவர்கள் வரட்டி வடிவில் ]

எடுத்துக் கொண்டு வீடு வீடாக சென்று ,

அங்குள்ள பெண் பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டு,

பாட்டுப் பாடி, கும்மி அடித்து, குதூகலமாய் ,

கூட்டமாய் ஆறோ, குளமோ எது இருக்குதோ

அங்கு செல்வார்கள்.

போகும் வழியிலிருக்கும் பூக்களை

பறித்து கொண்டே செல்வார்கள்.

ஆற்று தண்ணீரில் பூக்களுடன்

பிள்ளையார்களையும் விடுவார்கள்.

ஒரு வரட்டி மீது வெற்றிலையை வைத்து

அதில் சூடம் கொளுத்தி அதையும் நீரில் விடுவார்கள்.

கங்கா தேவியை மனதார வணங்கி ,

ஒரு மாதமாய் செல்லப் பிள்ளையாய் இருந்த

பிள்ளயாருக்கு பிரியா விடை கொடுத்து வருவார்கள்.

 கரையில் பாண்டி, நொண்டி, ,கண்ணாமூச்சி,

தட்டாங்கல், பூப்பறிக்க வாரீகளா

[ இதெல்லாம் என்னவென்று தெரியுமா]

விளையாடி வீட்டிற்கு வருவார்கள்.

சில பகுதிகளில் ,ஒவ்வொருவர் வீட்டின் முன்பும்,

ஆரத்தி எடுத்து இரண்டு பைசா, ஐந்து பைசா என்று தருவார்கள்.

சில பகுதிகளில் கும்மி அடிக்கும் போது காசு தருவார்கள்.

அந்த சிறிய காசே மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

பசுஞ் சாணம் ---

முக்கால்வாசிவீடுகளில்பசுமாடுஇருப்பதால்

எளிதில்கிடைக்கும்.

சாணம் சிறந்த கிருமி நாசினி.

மார்கழிக் காற்று 'ஓசோன்' நிறைந்த காற்று.

அதிகாலையில் எழுந்திருப்பதால்

இதை சுவாசிப்பதால், உடல் ஆரோக்கியமும் பெறுகிறது.

மார்கழி பஜனை கோஷ்டி தெருக்களில்

திருப்பாவையும், திருவெம்பாவையும்

 பாடி கொண்டு வரும் காட்சி அருமையானது.

அதன் பின் கோவிலில் தரும்

சூடான வெண்பொங்கல் அதை விட அருமை.

குளிருக்கு இதமானது. அதன் ருசி சொல்லி முடியாது.

அற்புதமான நாட்கள்;

இதை எழுதும் போதே அதை உணருவதைப் போல் ஒரு உணர்ச்சி .

நினைவுகளில் வாழ்வதும் ஒரு சுகம்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக