செவ்வாய், ஜனவரி 04, 2011

அனுமன் ஜெயந்தி


விக்ருதி ஆண்டு, மார்கழி மாதம் 28 ம் நாள் செவ்வாய்க் கிழமை அனுமன் ஜெயந்தி வந்துள்ளது. [ 04 - 01- 2011]
சிரஞ்சீவி அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.
எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ, எங்கெல்லாம் ராமனின்வரலாறு பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீருடன் அனுமன் மெய்சிலிர்த்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் என்பது ஐதீகம்.
அதனால், ராமாயணத்தைப் பாராயணம் செய்பவர்கள் அனுமனுக்கு தனியாக ஒரு மணையை (பலகை) போடுவர். கண்ணுக்கு புலனாகாமல் சூட்சும உடலுடன் அனுமன் அந்த மணையில் அமர்ந்து ராமநாமத்தைக் கேட்பார்.
ராமாவதாரம் முடிந்து அனைவரையும் வைகுண்டத்திற்கு அனுப்பி தானும் கிளம்பினார் ராமர். ஆனால், ராமநாமம் ஒலிக்காத வைகுண்டத்திற்குச் செல்ல விரும்பாமல் பூலோகத்திலேயே இருந்து ராமநாமத்தை ஜெபிப்பது என்று தீர்மானித்தார் அனுமன். ராமபிரானும், ""ராமாயணமும், ராமநாமமும் இவ்வுலகில் இருக்கும்வரை என்றென்றும் நீ சிரஞ்சீவியாக இருப்பாயாக! என்று வாழ்த்தி வைகுண்டம் கிளம்பினார்.
அனுமான் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு அருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபடவேண்டும்.
வடை மாலை சாற்றுவது ஏன்?
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவது நம் நாட்டில் காலங்காலமாகவே வரும் ஒரு பழக்கம்.
சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.
பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.
அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது ஐதீகம்.
தமிழ்நாட்டில் மட்டும் அன்றி வடநாட்டிலும் அனுமன் ஜெயந்தி வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது.
அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்
ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக