வெள்ளி, ஜனவரி 14, 2011

பொங்கல் 1 ம் நாள்


தை மாதத்தின் முதல் நாள் உழவர் திரு நாள் எனப்படும் பொங்கல் பண்டிகையாகும். இது நான்கு நாள் விழாவாக கொண்டாடப் படுகிறது. அவை
போகி-
தமிழ் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இது 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.
இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அன்று அதிகாலை வேண்டாத பழைய பொருட்களை தெருவில் வைத்து எரிப்பார்கள். சில இடங்களில் கொட்டு கொட்டிக் கொண்டு இதை செய்வார்கள்.
வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
காப்பு கட்டுதல்-
வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ --இவற்றை கொத்தாகக் கட்டி வீட்டின் நிலை வாயில், பின்புற வாயில் , வீட்டின் வெளிப்புறம் வீட்டைச் சுற்றி சொருகுவார்கள்.
சில பகுதிகளில் இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
அன்று வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அவரைகொட்டை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்ற ஒரு மரபும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக