திங்கள், ஏப்ரல் 11, 2011

மதுரை சித்திரை திருவிழா------நிகழ்வுகள் .

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.,14ல் பட்டாபிஷேகம் நடக்கிறது.

அன்று முதல் நான்கு மாதங்களுக்கு அம்மன் ஆட்சி நடப்பதாக ஐதீகம்.

அதன் பின், சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்து, அவர் எட்டு மாதங்கள் ஆட்சி

புரிவார்.
.
ஏப்.,16ல் திருக்கல்யாணம் நடப்பதால், முதல் நாள் நள்ளிரவு முதல்

அம்மனுக்கும், சுவாமிக்கும் அலங்காரம் செய்யும் பணி துவங்கிவிடுகிறது.

முகூர்த்த நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பு, கோயிலில் இருந்து புறப்பட்டு,

தங்க சிம்மாசனத்தில் சுவாமி சித்திரை வீதியில் உலா வருவார்.


பின், கோயில் பழைய திருக்கல்யாண மண்டபம் அருகில் உள்ள முத்துராமய்யர்

மண்டபத்தில் ஊஞ்சலாடி விட்டு, மணமேடையில் எழுந்தருளுவர்.

மேலகோபுர வாசலில், பவளக்கனிவாய் பெருமாள், மீனாட்சி அம்மனை

சுந்தரேஸ்வருக்கு தாரை வார்த்து கொடுக்கும் கன்னிகாதானம் நடக்கும்.

 பின், அவரது பாதத்தை கழுவி, மணமேடைக்கு அழைத்து வருவார்.

இதற்காக, திருப்பரங்குன்றத்தில் இருந்து தங்க பல்லக்கில் முருகன்,

தெய்வானையுடன் பெருமாள் புறப்பாடாகி, மீனாட்சி அம்மன் கோயில்

நால்வர் சன்னதியில் எழுந்தருளுவார்.

திருமணத்திற்கு பின், இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்தவர் என்பதால் திருமலை
நாயக்கருக்கும், தற்போது இதை அரசு நடத்துவதால் நிர்வாக அதிகாரிக்கும்
கோயில் சார்பில் மரியாதை செய்யப்படும்.
அன்று மட்டும் பழைய திருக்கல்யாணத்தில் மாலை வரை அம்மனும்,
சுவாமியும் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
திருமணம் முடிந்ததை தொடர்ந்து, ஏப்.,19 காலையில் விடையாத்தி சப்பரத்தில்
சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையும், சிம்மாசனத்தில் பவளக்கனிவாய்
பெருமாள், மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி, தெற்கு
ஆவணிமூல வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வர்.
 மாலையில் சுவாமிகள் பூ பல்லக்கில் எழுந்தருளி, ஆவணி மூல வீதிகளில்
வலம்சென்று திருப்பரங்குன்றம் வந்தடைவர்.
அதுவரை திருப்பரங்குன்றம் கோயிலில் வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு,
பூஜைகள் நடக்கும்.
தந்தைக்கு பாடம் உபதேசித்ததால், மீனாட்சி சுந்தரேஸ்வரர்
திருக்கல்யாணத்தில், சுப்பிரமணிய சுவாமி குரு ரூபத்தில் பங்கேற்பார் என்பது
ஐதீகம்.
முருகன் உக்கிரசேனன் பாண்டியனாக பிறந்து மதுரையை ஆண்டவர் என்ற
ஐதீகம் காரணமாக இவருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலில் செங்கோல்
வழங்கப்படும்.
தமிழகத்திலேயே இந்த இரு கோயில்களில் மட்டுமே செங்கோல் வழங்கும்
நிகழ்ச்சி நடக்கிறது.
 தகதகவென ஜொலிக்கும் ரத்தன செங்கோல், கிரீடம்!மதுரையை ஆள்பவர் \\
என்பதை சுட்டிக்காட்டவே செங்கோல் வழங்கப்படுகிறது.
இது திருமலைநாயக்கரால் செய்து கொடுக்கப்பட்டது. இரண்டு கிலோ எடை,
மூன்று அடி உயரம் கொண்ட இந்த செங்கோலில் ரத்தினங்கள், பட்டை
தீட்டப்படாத வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
விலை கணக்கிட முடியாதவை.
பட்டாபிஷேகம் முன்பாக, சுவாமி சன்னதி அருகே திருமலைநாயக்கர் தந்த
ரத்னகிரீடம், செங்கோல், மந்திரிக்கு அடையாளமாக தங்க எழுத்தாணி, முத்திரை
ஆகியவற்றை வைத்து பூஜை செய்த பிறகே, அம்மனுக்கு கிரீடம்
அணிவிக்கப்படும்.
முக்கிய நிகழ்ச்சியாக ஏப்., 14ல் பட்டாபிஷேகம்,
 ஏப்., 16ல் திருக்கல்யாணம்,
 ஏப்., 18ல் ஆற்றில் அழகர் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏப்., 14 மாலை 6.05 மணி முதல் 6.29 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிஷேகம்
நடக்கிறது.
அம்மனுக்கு கிரீடம் சாற்றி, செங்கோல் கொடுத்த பின்,
அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன், அம்மனிடமிருந்து
செங்கோலை பெற்று, அம்மன் சன்னிதியிலிருந்து புறப்பட்டு,
சுவாமி சன்னிதி இரண்டாம் பிரகாரம் வழியாக கொண்டு வந்து
மீண்டும் அம்மனிடம் வழங்குவார்.
ஏப்., 15ல் மதுரை வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில்,
 லாலாஸ்ரீ ரங்கசத்திரம் திருக்கண் மண்டபத்தில் அம்மனின் திக்குவிஜயம்
நடக்கிறது.
ஏப்., 16ல் காலை 10.30 மணி முதல் 10.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்றிரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் மாசி வீதிகளில் உலா வருவார்.
ஏப்., 17ல் தேரோட்டமும், மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை வரவேற்கும்
எதிர்சேவையும் நடக்கிறது.
இரவு தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலில் தங்கி தங்கக் குதிரையில்
எழுந்தருளும் கள்ளழகர் 18 ம் தேதி காலையில் வைகை ஆற்றில்
இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏப்., 18ல் காலை 6.45 மணி முதல் 7 மணிக்குள், கள்ளழகர் வைகையாற்றில்
. எழுந்தருள்கிறார்.
18 ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் தேர்த்தடம் பார்த்தல்
நிகழ்ச்சியுடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. 
. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக