சனி, ஏப்ரல் 09, 2011

ஸ்ரீ ராம நவமி



விக்ருதி ஆண்டு பங்குனி மாதம் 29ம் நாள் [12-04-2011] செவ்வாய் அன்று ஸ்ரீராமநவமி வருகிறது.

தாயிற் சிறந்த கோயிலுமில்லை . தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பவற்றிற்குஇலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ஏக பத்தினி விரதனாக இருந்துஅவதாரப் புருஷனாக வாழந்து காட்டியர்.

ஸ்ரீராமபிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம். அதர்மத்தை அழித்து நல்லோரைக் காக்கவே அவதாரங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.

பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர் பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு..

அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும் தேவர்களும் ஸ்ரீராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் .


ஸ்ரீராம நவமி மகிமை!

ஸ்ரீராமன் பிறந்தது நவமி திதியில் தான். எனவே, அவன் பிறந்த புனித திருநாளை ராம நவமியாகக் கொண்டாடுகிறோம். ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பூச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. கடக லக்னத்தில் நண்பகல் வேளையில், ராமவதாரம் நடந்தேறியது. அஷ்டமியும், நவமியும் கலந்த தினத்தில் தான் பார்வதி அன்னை அவதாரம் செய்தாள். எனவே, தேவியின் பக்தர்கள் தேவி பூஜை செய்துவிட்டு, நிறைவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை நடத்துகின்றனர்.


ஸ்ரீராம நவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.


ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டுவர்;மாக்கோலம் போடுவார்., .ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி. பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி,பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும். நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும்.

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் இருந்த போதும், நீர் மோரையும், பானகத்தையும் தாக சாந்தியாக அருந்தினாராம்.அதனால் ராம நவமியில், ராமனுக்கு நீர் மோர், பானகம் படைப்பது முக்கியம்.

படைத்து, பூஜை கைங்கரியங்கள் செய்வதோடு, ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக் கேட்பதும், ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுதுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். ராமாயணம் படிக்க இயலாதவர்கள். ஸ்ரீராம...ராம என்று சொன்னாலேராமாயணம் படித்து புண்ணியம் கிடைக்கும்.

ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராம நவமி சிறப்பாக கொண்டாடப் படுகிறது. ஸ்ரீராம நவமிக்கு பத்து தினங்களுக்கு முன்பே, ராமாயணம் படிக்கத் துவங்கி, ஸ்ரீராம நவமி அன்று, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்ய வேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக