ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

மூர்த்திநாயனார்:

கையையே சந்தனக்கட்டையாக்கிய மூர்த்திநாயனார்:மதுரையில் சிவனுக்கு திருத்தொண்டு புரிந்து வரும் வணிகர்குலத்தில் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர்தான் மூர்த்தி நாயனார்.
இவர் இத்தலத்தில்  தினமும் சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார்.
வீரம் விளையாடும் மதுரையில் கோழையொருவன் ஆட்சி செய்து வந்தான்.
இதுதான் சமயம் என்று பகையரசனான கர்நாடக மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பாண்டியனை முறியடித்து மதுரையை தனக்குத் தலைநகராகவும் கொண்டான்.
பகையரசன் சமண சமயத்தைச் சார்ந்தவன். சமண மதமே சிறந்தது என்று நினைத்து சைவ அடியார்களுக்கு சிரமங்களை கொடுத்ததுடன்
தன் நாட்டிலிருந்து சமண பிரச்சாரர்களையும், குருமார்களையும் வரவழைத்து சமண மதத்தை பரப்பினான்.
சைவத்தை வளர விடாமலும்  சிவ ஆலயங்களுக்கு திருப்பணி செய்யவிடாமலும் தடுத்தான்.
 இந்நிலையில் சொக்கநாதருக்குச் சந்தனம் அரைக்கும் மூர்த்தி நாயனாருக்கும் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்து அவரது திருப்பணியைத் தடுக்க முயற்சித்தான்.
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இறைவனுக்குத் தாம் செய்யும் திருத்தொண்டினை மட்டும் தவறாமல் செய்து கொண்டே வந்தார்.
ஒருநாள் சந்தனக் கட்டைக்காகப் பகலெல்லாம் மதுரை முழுவதும் சுற்றி அளைந்து தேடியும் கிடைக்காமல்
 இறுதியில் வேதனையோடு கோயிலுக்குள் வந்தார்.
சிவநாமத்தை துதிக்கத் தொடங்கினார்.
அப்போதுதான் அவருக்கு ஒரு எண்ணம் பிறந்தது.
""சந்தனக் கட்டைக்குப்பதிலாக தன் முழங்கையை அரைக்கலாம் என்று நினைத்து சிவனை தியானித்துக்கொண்டே
கல்லில் தமது முழங்கையை வைத்துத் தேய்க்கத் தொடங்கினார்.
தோல் தேய்ந்தது. ரத்தம் பீறிட்டது!
எலும்பும் நரம்பும் நைந்து வெளிப்பட்டன.
மூர்த்தி நாயனார் எதைப்பற்றியும் எண்ணாமல் வேதனையையும் பொருட்படுத்தாமல் அரைத்துக் கொண்டேயிருந்தார்.
சிவபெறுமான் பக்தனின் பரமசேவையைக் மகிழ்ந்து பக்திக்கு அடிமையானார்.
அதற்கு மேல் தொண்டரைச் சோதிக்க விரும்பவில்லை.
""அன்பும் பக்தியும் மேலிட எமக்குச் செய்த திருத்தொண்டு முன்போல தடையின்றி நடை பெறும்.
கர்நாடக மன்னனை வென்று அரசு பெற்றுப் புகழ்பெறுவாய்!
இறுதியில் எமது திரவடி சேர்வாயாக"" என்று அருள்வாக்கு கூறினார்.
உடனே அவரது கைபழைய நிலைமைக்கு வந்தது.
கர்நாடக மன்னனின் ஆயுளும் அன்றோடு முடிவுற்றது.
சமணரின் ஆதிக்கமும் அழிந்தது.
முன்போல சைவம் தழைத்தது.
மன்னனுக்கு வாரிசு இல்லாததாலும், அரசு மரபினர் யாரும் இல்லாததாலும் நாட்டை ஆள வழக்கப்படி
யானையிடம் மாலை கொடுத்து யானை யார் கழுத்தில் மாலை போடுகிறதோ அவரே மன்னர் என அமைச்சர்கள் தீர்மானித்தனர்.
யானையும் மாலையோடு சென்று சிவனை வழிபட்டுக் கொண்டிருந்த மூர்த்தி நாயனாரின் கழுத்தில் போட்டது.
அமைச்சர்களும் மூர்த்தி நாயனாரையே மன்னனாக அழைத்தனர்.
 ஆனால் அவரோ எனக்கு பொன்முடி, மணிமாலை தேவையில்லை, அதற்குப்பதில் உத்திராட்சமும் சடைமுடியும் விபூதிப்பட்டையுடனும்  அரசாள்வேன் என்று கூறி கோயிலுக்கு சென்று
சிவனை வழிபட்டு இறைவன் விருப்பப்படி நாட்டை ஆண்டார்.
இவரது ஆட்சியில் மக்கள் வாழ்வு மலர்ந்தது.
இந்த பூமியில் புகழ்பெற்ற நாயனார் நீண்ட நாள் ஆட்சி செய்து
பின் சிவனின் திருவடியை சேர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக