சனி, ஏப்ரல் 09, 2011

அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் ----- மதுரை

மீனாட்சி  அங்கயற்கண்ணி:

மதுரையில் அம்மனின் பெயர் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.
மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார்.
அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.

நடராஜர் கால் மாறி ஆடிய காரணம்:

மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது.
திருமணத்தில் தேவர்களும், முனிவர்களும் கலந்து கொண்டனர். அதில் பதஞ்சலி மகரிஷியும் வியாக்ரபாதரும் அடங்குவர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும், மீனாட்சியும் அழைத்தனர். அப்போது பதஞ்சலியும், வியாக்ரபாதரும்   சிவனிடம், ""இறைவா! நாங்கள் இருவரும் தங்கள் பொன்னம்பல நடனத்தை  பார்த்த பின்தான் உணவு அருந்துவது வழக்கம்'' என்றனர்.
இதைக்கேட்ட இறைவன், இவர்களின் நியமத்தை காக்கும்பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே திருநடனம் புரிந்து அருள்பாலிக்க வெள்ளியம்பலத்தை ஏற்படுத்துகிறார். இந்த வெள்ளியம்பலத்தில் நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்ட பின் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் உணவு அருந்துகின்றனர்.
இந்த வெள்ளியம்பல நடராஜர் திருநடனம் புரியும் மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயகலைகள் 64ல் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். மீதி ஒரு கலை தான் நடனம். இந்த நடனமானது நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருப்பதால் நாம் எப்படி கற்பது என நினைத்தான்.

இதே காலத்தில் வாழ்ந்த கரிகாற்சோழன் என்ற மன்னன்  64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். உடனே பாண்டியனும் நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெறுகிறான்.
இப்படி நடனம் கற்கும் போது உடம்பெல்லாம் வலிப்பதால் நடனக்கலை எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்கிறான்.
64 கலைகளையும் கற்ற திருப்தியில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீவாதம் வாங்க  வருகிறான்.
அப்போது நடனம் கற்பதே கஷ்டமாக இருக்கும் போது காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் துõக்கி நடனமாடிக் கொண்டிருக்கும் நடராஜருக்கு  எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்படுகிறான்.
இதை யாரிடம், எப்படி கேட்பது. முன் காலங்களில் வாழ்ந்த தேவர்கள் முனிவர்கள் எல்லோரும் இதைப்பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி சிவனிடம் கேட்பது என நினைத்து மிகவும் வருத்தப்பட்டான்.
இந்நிலையில் ஒரு சிவராத்திரி திருவிழா வருகிறது.
மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு, நடராஜரின் எதிரில் நின்று, ""ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் இறைவா! எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா?'' என வருந்திகேட்கிறான்.
 ""அப்படி நீ கால் மாறி ஆடா விட்டால் என் முன்னால் கத்தி வைத்து அதில் விழுந்து உயிர் துறப்பேன்'' என இறைவனிடம் கண் மூடி மன்றாடுகிறான்.
சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்க்கிறான்
ராஜசேகர பாண்டியன். அப்படியே  மெய்சிலிர்த்து நின்று விடுகிறான்.
காரணம், பக்தனுக்காக இடது  கால் ஊன்றி வலது கால் துõக்கி ஆடுகிறார் நடராஜப்பெருமான்.
உடனே மன்னன்
""பெரியாய் சரணஞ் சிறியாய் சரணங்
கரியாகிய வங்கணனே சரண
மரியாயெனியா யடிமாறி நடம்
புரிவாய் சரணம் புனிதா சரணம்!
நதியாடிய செஞ் சடையாய் நகை வெண்
மதியாய் மதியா தவர் தம்மதியிற்
பதியாய் பதினென் கணமும்  புரவுத்
துதி சரணஞ் சடரே சரணம்!

இப்படி பலவாறாக பாடிதுதித்து மகிழ்ந்து ஆனந்தத்தில் அழுது விழுந்து தொழுது ""எனக்காக கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கவேண்டும்'' என்ற வரமும் வாங்கி விடுகிறான்.
 அன்றிலிருந்து தான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.

இந்நிகழ்ச்சி பரஞ்சோதி முனிவர் எழுதிய சிவனின் 64  திருவிளையாடலில் கூடற்காண்டத்தில் 24வது படலமாக "கால் மாறி ஆடிய படலம்' 6வது திருவிளையாடலாக வருகிறது.

எல்லாம்வல்ல சித்தர்
மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில், உலக நாயகனான சோமசுந்தரக்கடவுள் சித்தர் வடிவம் எடுத்து மதுரையின் எல்லாப்பகுதியையும் சுற்றி வருகிறார்.
அப்போது அவர் கிழவனைக் குமரனாக்கியும், ஆணைப் பெண்ணாக்கியும்,  இரும்பை தங்கமாக்கியும், முடவனை நடக்கவைத்தும், ஊமையை பேசவைத்தும், ஊசியை நிறுத்தி அதன் மேல் கால் பெருவிரலால் ஆடியும் பல சித்து விளையாட்டுக்களை  செய்து காட்டி மதுரை மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட அபிஷேகப் பாண்டியன் இவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினான்.
 வந்தவர்களும் இவரது சித்து விளையாட்டை பார்த்து பிரமித்துப்போய் விடுகின்றனர்.
அழைக்கச்சென்றவர்கள் வராமல் போகவே, தன் அமைச்சரை அனுப்பி சித்தரை அழைக்க அனுப்பினார்.
ஆனால் சித்தரோ அரசனால் எனக்கென்ன பயன், என்னைப்பார்க்க வேண்டுமானால் அரசனை வரச்சொல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிடுகிறார்.
மன்னர் தன்னைப்பார்க்க வருவதை அறிந்த சித்தர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று வாயு மூலையில் யோக நிஷ்டையில் அமர்ந்து கொள்கிறார்.
(இவர் அமர்ந்த இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னதிக்கு அருகில் உள்ளது) அரசனுடன் வந்த ஆட்களால் சித்தரின் நிஷ்டையை கலைக்க முடியவில்லை.
 கலைக்க சென்றவர்களில் கைகள் துõக்கிய நிலையிலேயே நின்றுவிட்டது. அதிர்ந்து போனான் அரசன்.
சித்தரிடம் பணிவுடன் ""சித்தர் பெருமானே தாங்கள் இப்படி அமர்ந்து கொண்டால் எப்படி?  தங்களுக்கு ஏதாவது தேவையென்றால் கேளுங்கள். அத்துடன் தாங்கள் உண்மையிலேயே சித்தர் தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது''  என்று கூறினான்.
சித்தர் உருவிலிருந்த சோமசுந்தரர், நிஷ்டையிலிருந்து கண்விழித்து அரசனே "" நான் தான் அனைத்தும், நானே ஆதியும்  அந்தமும், நான் எங்கும் சஞ்சரிப்பவன், தற்போது இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டை காட்டி அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமோ அதையெல்லாம் கொடுக்கும் என் பெயர் "எல்லாம் வல்ல சித்தர்' என்றார்.
ஆனாலும் நம்பிக்கையில்லாத அரசன், ""தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல்யானையை தின்ன செய்யுங்கள்'' என்றான்.
 சித்தரும் அமைதியுடன் அருகிலிருந்த கல் யானையை பார்த்து கண் அசைக்க யானை சடாரென அரசனிடமிருந்த கரும்பைத்தின்றது.
அத்துடன் அரசனின் கழுத்திலிருந்த மாலையையும் பறித்தது.
பதறிய சேவகர்கள் சித்தரை அடிக்கவந்தனர்.
சித்தரின் சைகையால் அடிக்க வந்தவர்கள் சித்திரம் போல் ஆனார்கள். உண்மை நிலையறிந்த அரசன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி, எம்பெருமானே அறியாமல் செய்த பிழையை பொறுத்து, மன்னித்தருள வேண்டும். என்றார்.
சித்தரும் மன்னித்து, நான் இங்கேயே வீற்றிருந்து மக்களுக்கு வேண்டியதை வழங்குகிறேன், அத்துடன் உனக்கு தேவையானதை கேள் என்றார்.
இறைவா எனக்கு புத்திர பாக்கியம் தந்தருள வேண்டும் என்றான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால் அரசனுக்கு விக்கரமன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
இப்படி இறைவனே எல்லாம் வல்ல சித்தராக (இவரை  சுந்தரானந்தர் என்றும் அழைப்பர்) அவதரித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருந்து என்ன வேண்டினாலும் வாரி வழங்கி கொண்டிருக்கிறார். தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டவர்கள் சித்தருக்கு பூக்கூடாரம் அமைத்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக