ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் தல சிறப்பு:

சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான்.
அப்படி வரும்போது சிவனின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய இத்தலத்தில் ஓர் அழுகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட பாவம் நீங்கியது.
 எனவே இந்திர விமானத்துடன் கூடிய இந்த பெருங்கோயிலை கட்டினான் என்பர்.
எனவே இது இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது.
இந்த சக்தி பீடத்திற்கு ராஜமாதங்கி சியாமள பீடம் என்று பெயர்.
தழிழ்நாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது.
இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும், தலத்தின் பெயரை படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்றும் கூறுவர்.
 உலகத்திலேயே சிலைகளும், சிற்பங்களும் மூன்றுகோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான்

தலத்தின் பெயர் காரணங்கள் :

மதுரை:


சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது.

ஆலவாய்:

சிவபெருமானுக்கு அணியாயிருந்த பாம்பு வட்டமாய் வாலை வாயாற் கவ்வி மதுரையின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் வந்தது.

கடம்பவனம்:

கடம்பமரம் அடர்ந்த காடாக இருந்ததால் கடம்பவனம் எனப் பெயர் பெற்றது

நான்மாடக்கூடல்:

மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும்  தடுக்கும் பொருட்டுப் பெருமான் தம் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடிக்காத்ததால் நான்மாடக்கூடல் எனப் பெயர் ஏற்பட்டது.
உலகப்புகழ் பெற்ற சிவாலயம்.
பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி.
சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம்.
கால் மாறி ஆடிய தலமும் இதுவே.
சிவனே எல்லாம் வல்ல சித்தராக  எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம்.
தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே  சிவபெருமானுக்கு  நடைபெறுகின்றன.
ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக  வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம்.
நக்கீரர் வாழ்ந்த இடம் .
முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும்,
திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில் தான்.  
பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து
சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்.
இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும்  பூசித்துப் பேறு பெற்ற தலம்.
திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து  சைவத்தை பாண்டிநாட்டில்  நிலைபெறச் செய்த தலம்.
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான் வாழும் இடம்.
எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.
பல புராண இலக்கியங்களையுடையது: 
கலையழகும், சிலைவனப்பும், இசையமைப்பும் ஆயிரக்கணக்கான அழகிய சுதைகளையும் கொண்ட வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது.
ஆண்டுதோறும் திருவிழா நடக்கும்.
 அம்மையும் அப்பனும்  வீதியில் வருவதும், அண்டிய அன்பருக்கு இன்பமே தருவதும் மதுரையில் காலம் காலமாக நடந்து வருவதாகும். 
தாமரை மலர்போல் மதுரைப்பதியின் அழகும், நடுவிலுள்ள மொட்டுப் போன்ற மீனாட்சியின் ஆலயமும், மலரிதழ் போன்ற வரிசையான தெருக்களும் சேர்ந்து மதுரையைச் சிவராஜதானி என்று போற்றச் செய்துள்ளன.
நவக்கிரக ஸ்தலத்தில் புதன் ஸ்தலமாகும்.
கோயில் அமைப்பு : 14 கோபுரமும் 5 வாயிலும் உடைய மிகப்பெரிய கோயில்.
கலையழகும், சிலையழகும், சிற்பத்திறனும், சிற்பவனப்பும், நாத அமைப்பும் கொண்டது. பல மூர்த்திகளின் திருவுருவங்களும், பொற்றாமரைக்குளமும், கோயில் விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. முத்தமிழுக்குரிய இயல், இசை, நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும், சிலைக்கோயிலாகவும் விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக