ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

சித்ரா பௌர்ணமி விழா

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும்,
மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான்.
அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான்.
குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார்.
அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான்.
ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான்.
இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார்.
இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான்.
இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும்,
விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார்.
அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.


வரலாறு
மதுரையை ஆண்ட மன்னன் மலையத்துவச பாண்டியன்.
இவனது மனைவி காஞ்சனமாலை.
இருவருக்கும் மகப்பேறு இல்லை.
 இதனால் புத்திரகாமேட்டி யாகம் செய்தனர்.
அப்போது உமாதேவி மூன்று தனங்களை உடைய ஒரு பெண் குழந்தையாக வேள்விக்குண்டத்தில் தோன்றினாள்.
குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தினான்.
அப்போது அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது.
இந்த குழந்தைக்கு கணவன் வரும் போது, ஒரு தனம் மறைந்து விடும் என்று அந்த அசரீரி மூலம் அறிவிக்கப்பட்டது.
பெருமான் கட்டளைப்படி அந்த குழந்தைக்கு "தடாதகை" என்று பெயர் சூட்டப்பட்டது.
குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. வில், அம்பு,
வாள் முதலிய கலைகளில் அந்த குழந்தை சிறந்து விளங்கியது. பின்பு மலையத்துவம்ச பாண்டியன் இறப்பு எய்த, தடாதகை அரசு முறை வழுவாதபடி செங்கோல் செலுத்தி வந்தாள்.
கன்னியாக இருந்த தடாதகை ஆண்டதால் மதுரை கன்னி நாடு என்று பெயர் பெற்றது.
தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள்.
நால்வகை படைகளுடன் புறப்பட்டு சென்று திக்குவிசயஞ் செய்து பல இடங்களை வென்றாள்.
இறுதியாக திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள்.
கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போனது.
தடாதகை நாணங் கொண்டு நின்றாள்.
முன் அறிவித்தபடி பெருமானே கணவன் என்பது புலப்பட்டது.
வீதிகளும், வீடுகளும் அலங்கரிக்கப்பட்டன.
திருமாள் முதலிய தேவர்களும் வந்திறங்கினார்கள்.
திருமணத்திற்குரிய நல்வேளையில் முரசங்கள் ஒலித்தன.
சங்குகள் முழங்கின.
 சிவபெருமானுக்கு பக்கத்தில் தடாதகை வீற்றிருந்தது.
கற்பகத்தருவில் மலர்ந்த பூங்கொடி போல் இருந்தது.
மேலும் இருவருடைய காட்சி பாலும், சுவையும், மலரும், மணமும், மணியும், ஒலியும் போல் போல் இருந்தது.
திருமண சடங்குகள் நிறைவேறின. பிரமதேவன் உடனிருந்து நடத்தினான். சிவபெருமான் திருமங்கல நாணை பிராட்டியருக்கு சூட்டினார்.
தடாதகை பிராட்டியே மீனாட்சி அம்மையாக விளங்குகிறார்.


ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திரு விழா காணும் இக்கோயிலில் சித்திரையில் நடக்கும் விழா தான் மிகவும் சிறப்பானதாகும்
சித்திரை திருவிழா:
சித்திரை மாதம் வளர்பிறையில் நடக்கும் 12 நாள் விழாவில்
முதல் நாள் கொடியேற்றம்,
பின் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வாகனங்களில் வீதி உலா வருவர்.
8ம் நாள் மீனாட்சி பட்டாபி ஷேகம், செங்கோல் வழங்கும் வைபவம்,
9ம் நாள் மீனாட்சி திக்விஜயம்,
10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம்,
11ம் நாள் தேர்த்திருவிழா,
 12ம் நாள் தீர்த்த விழா,
வைகையில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரை திருவிழா முடி வடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக