ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

சித்திரை திருவிழாவின் நான்காம்நாள்



சித்திரை திருவிழாவின் நான்காம்நாள் சுந்தரேஸ்வரர், மீனாட்சி இருவரும் தங்க பல்லக்கில் மாசிவீதிகளில் பவனிவந்தனர்.
இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கிறார். இதனை "பஞ்ச கிருத்தியங்கள்' என்று குறிப்பிடுவர்.
இதில் "மறைத்தல்' தொழிலை தங்கப்பல்லக்கு குறிக்கிறது.
 பல்லக்கின் மேல் உள்ள பெரிய திரைச்சீலை சுவாமியை மறைத்திருக்கும். தொங்கிக் கொண்டிருக்கும் குஞ்சங்களும் காற்றில் அசைந்து சுவாமியை மறைக்கும்.
நல்வினை, தீவினைகளைச் செய்ததால் பூமியில் மனிதர்களாக பிறப்பெடுத்திருக்கிறோம். எதிர்காலம் எப்படி அமையும் என்பதையாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது.
அதை அறிந்தவன் இறைவன் ஒருவனே. இதைத்தான் மறைக்கும் திரையும், குஞ்சங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன.
ஒருவர் தனக்கு எதிர்காலத்தில் நன்மை மட்டுமே நடக்கும் என்று தெரிந்துவிட்டால், ஒரேயடியாக ஆட ஆரம்பித்துவிடுவார்.
துன்பம் மட்டுமே நடக்கும் என்று தெரிந்தால் கவலைப்படத் துவங்கி விடுவார்.
எல்லாம் முன்கூட்டியே தெரிந்து விட்டால், வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது.
நன்மை, தீமை இரண்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்னும் நிலை இருந்தால் தான், நன்மையை மட்டும் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கும்.
செயல்களில் உற்சாகம் பிறக்கும். எப்படியும் வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்ற குறிக்கோள் உண்டாகும்.
நமக்கு நடக்கப்போவது நன்மையா, தீமையா என்பதை நாம் உணரமுடியாமல் மறைத்து விடுகிறான் இறைவன்.
எனவே, "கடமையைச் செய்யுங்கள். பலனை நிச்சயம் பெற்று மகிழ்வீர்கள்'என்ற உண்மையை தங்கப்பல்லக்கில் பவனிவரும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நமக்கு உணர்த்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக